குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்
குறூ-மக்கலம் அரசியல்
சீர்திருத்தம் (Crewe-McCallum Reforms)-1910
இலங்கையின் அரசியல்
யாப்பு வரலாற்றில் உருவான இரண்டாவது அரசியல் சீர்திருத்தம் இதுவாகும். அதாவது கோல்புறுக்
சீர்திருத்தத்தின் பின்னர் உருவான ஒரு காலனித்துவ யாப்பு ஆகும். குரு மக்கலம் அரசியல் அமைப்பு என்பது இலங்கையில் 1910 முதல் 1921 வரை அமுலிலிருந்த
அரசியலமைப்பு. கோல்புறுக்
யாப்பில் உருவான அதிருப்திகள் வெளிப்பட ஆரம்பித்ததுடன், அதனை திருத்த வேண்டும் என்ற
கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. இலங்கையில் 1833ம் ஆண்டு முதல் 1910ம் ஆண்டுவரை கோல்புறூக் அரசியல் அமைப்பின் கீழ் உள்நாட்டு
மக்களின் நலவுரிமைகள் எவ்விதத்திலும் பேணப்படவில்லை. குறிப்பாக இந்த
அரசியலமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்திய நலவுரிமைகளை மாத்திரம் பேணக்கூடிய
வகையிலும் இலங்கையின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தினை அடைவதைக்
குறிக்கோளாகக் கொண்ட வகையிலுமே இந்த அரசியலமைப்பு இலங்கையில் செயல்பட்டது.
இந்த நிலையில்
உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கான
அதிகாரம் வழங்கப்படல் குறித்தும் பல பல கோரிக்கையை முன்வைத்தனர். இக் கால
கட்டங்களில் மத்தியத்தர வர்க்கங்களின் தோற்றம், மேற்கத்தேய கல்வியை பெற்று வந்த
மத்தியத்தர வர்க்கம் மாக்சிச சிந்தனை மற்றும் தாராளவாத சிந்தனையில் உட்பட்டு வந்தமையால்
கோல்புறுக்-கமரன் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை
முன்வைத்தனர். இந்த அடிப்படையில் யாழ்ப்பாண சங்கம், சிலாபச் சங்கம், கீழ் நாட்டு
பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் என பலரால் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1908ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி ஜேம்ஸ் பீரிஸ்
அவர்கள் முன்வைத்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டு போராட்டம் அமைப்பு ரீதியாக வடிவம் பெற்றது. இதனால் அவர் பல்வேறு கோரிக்கையை
முன்வைத்தார். அவையாவன:- நிர்வாக கழகத்திற்கும் உத்தியோகப்பற்றற்றோரில் இருந்தும் அங்கத்தவர்களை நியமித்தல்.
- சட்டவாக்க கழகத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்தல் .
- சட்டவாக்க கழகத்திற்கு அங்கத்தவர்களை நியமிக்கும்போது, இன ரீதியான முறையை அகற்றி பிரதேசவாரி முறையை அறிமுகம் செய்தல்.
- இப் பிரதிநிதிகளை ஆளுநர் பெயர் குறிப்பிட்டு நியமிப்பதை நீக்கி, வரையறுக்கப்பட்ட வாக்கு மூலம் தெரிவு செய்தல்
இவ்வாறான பல
கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை கருத்தில் கொண்டு தேசாதிபதி சேர் கென்றி மக்கலம்
மற்றும் குடியேற்ற நாட்டுச் செயலாளர் குரூ என்பவர்களும் இணைந்து உருவாக்கிய யாப்புதான்
குறு-மக்கலம் அரசியல் சீர்திருத்தம் ஆகும். 1910.11.24 அன்றயை கட்டளைச் சட்டத்தின்படி குறு மக்கலம் யாப்பு
அறிமுகப்படுத்தப்பட்டது. பயனாக 1910 நவம்பர் 24ல் புதிய யாப்பு அறிமுகஞ்செய்யப்பட்டு 1912 ஜனவரி 16ல் புதிய சட்டசபை
கூடியது
குறு-மக்கலம் அரசியமைப்பின் கீழ்
சட்டநிரூபண சபை (சட்டசபை)
மொத்த அங்கததவர்களின் எண்ணிக்கை 21 ஆகும்.
- உத்தியோக சார்புடையோர் -11பேர்
- இராணுவத்தளபதி
- குடியேற்றநாட்டுக்கரியதரிசி
- அரசாங்க சட்ட அதிபதி
- வருமானவரி அதிகாரி
- குடியேற்றநாட்டுத் தனாதிகாரி
- மேல் மாகாண அதிபர்
- மத்திய மாகாண அதிபர்
- தென்மாகாண அதிபர்
- பிரதம சிவில் வைத்தியர்
- தேசாதிபதியால் நியமிக்கப்படும் உத்தியோக சார்பு அதிகாரிகள் -02
தேசாதிபதியால் நியமனம்-06பேர்
- கண்டிச் சிங்களவர் - 1
- கரையோர சிங்களவர் - 2
- முஸ்லிம் - 1
- இலங்கைத் தமிழர் - 1
- தமிழர் – 1
மட்டுப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் தெரிவு-04பேர்
- நகர்ப்புற ஐரோப்பியர் - 1
- கிராமப்புற ஐரோப்பியர் - 1
- பறங்கியர் - 1
- படித்த இலங்கையர் – 1
இவ் யாப்பின் முக்கிய அம்சங்கள்:
- சட்டவாக்க கழகத்திற்கு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு முதன்முறையாக வாக்குரிமை பயன்படுத்தப்பட்டது.
- கல்விபுலமை மிக்க இலங்கையருக்கு ஒரு பிரதிநிதித்துவம் வளங்கல்.
- இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் நடைமுறைபடுத்தபடல்.
- உத்தியோக சார்புள்ளோர் தொடர்ந்தும் அதிகமாக இருத்தல்.
- சொத்து, கல்வி அறிவு கொண்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்படல்.
மட்டுப்படுத்தப்பட்ட(வரையறுக்கப்பட்ட
வாக்குரிமை):
குரு மக்கலம் அரசியல் அமைப்பின் பிரகாரம்
இலங்கையில் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட
வாக்குரிமை அல்லது கற்றோருக்கான வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது. (இது கல்வி
அறிவு, சொத்து உள்ள 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது). குரு மக்கலம்
அரசியல் அமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பிரதிநிதிகளுள் இன
ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படித்த இலங்கையர் சேர் பொன்னம்பலம் இராமநாதன்
(ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) அவர்களாவார்.
வாக்குரிமை மூலம் பிரதிநிதிகளை
தேர்ந்தெடுத்துள்ள முடியுமாக இருந்தாலும்கூட, வாக்குரிமை பெற்றோர் மேற்குலக அரசியல் சிந்தனைகளில்
கவரப்பட்டவர்களாக இருந்தமையால் அவர்கள் சுயாட்சி முறைக்கான போராட்டங்களில்
ஈடுபடவில்லை. அதேநேரம், சட்டநிரூபண சபை(சட்டசபை)யில் பிரித்தானிய தேசாதிபதியின்
தனித்துவத்தைப் பேணிக்கொள்ளக்கூடிய வகையில் அதன் கட்டமைப்பு
ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக உத்தியோக சார்புள்ள 11 பேரும்
தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 6 பேரும் எச்சந்தர்ப்பத்திலும் தேசாதிபதிக்கு சார்பானவர்களாக
இருப்பார்கள் என கருதப்பட்டது.
நிதிக்குழு
தேசாதிபதிக்கு உதவியாக அமைக்கப்பட்டதே
நிதிக்குழுவாகும். உத்தியோகப் பற்றற்றவர்களினால் அரசாங்க செலவுகள்
பரிசோதிக்கப்பட்டு சட்ட நிரூபண சபை கூடாத காலப்பகுதிகளில் அனுமதிக்கும் நோக்கமாகவே
இந்த நிதிக்குழு அமைக்கப்பட்டது. பொதுவாக இந்த நிதிக்குழு ஒரு ஆலோசனை சபையாகவே
இருந்தது.
குறூ – மக்கலம் அரசியல்
சீர்திருத்தத்தின் நன்மைகள்
- இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சியில் ஓர் அடுத்த கட்டபடியாக இவ் அரசியல் சீர்திருத்தம் காணப்பட்டது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறையும் கற்றோர் குழாமிற்கான பிரதிநிதித்துவமும் அரசியல் யாப்பின் வளர்ச்சியை காட்டுவனவாக விளங்கின.
- கற்றோர் குழாமின் அரசியல் பிரவேசம் அரசியல் இயக்கங்கள் உருவாக்கப்படுவதற்கும் அரசியல் சீர்திருத்த கோரிக்கைகள் இலங்கை மக்களின் சார்பில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுவதற்கும் காரணங்களாக விளங்கின.
- தோட்டப்புற ஐரோப்பியர் சார்பிலும் ,நகர்ப்புற ஐரோப்பியர் சார்பிலும் பிரதிநிதிகள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டமையானது பெருந்தோட்டத்துறையும் அது சார்ந்த உப தொழில்களும் வளர்ச்சி அடைவதற்கு காரணங்களாக விளங்கின.
- உத்தியோக பற்றற்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையானது சுதேசிகளின் வலுவினை பலப்படுத்துவதாக இருந்தது.
குறூ மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தின்
குறைபாடுகள்
- தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. கல்வி ,அறிவு, உள்ளவர்களுக்கும் ,சொத்து உடையவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. இவர்கள் இலங்கையில் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 4% மாக மட்டுமே காணப்பட்டனர்.
- இவ் அரசியல் சீர்திருத்தத்திலும் தோட்டப்புற ஐரோப்பியர் பிரதிநிதித்துவம் ,நகர்ப்புற ஐரோப்பியர் பிரதிநிதித்துவம் என்பவற்றின் ஊடாக தோட்டத்துறையின் அபிவிருத்தியிலே கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது. இதனால் வறண்ட விவசாயத்துறை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டதோடு கைத்தொழிற்துறை பற்றி எதுவித கவனமும் செலுத்தப்படவில்லை.
- இவ் அரசியல் சீர்தித்தத்திலும் தேசாதிபதி மேலான அதிகாரத்தை கொண்டவராக விளங்கினார். சட்ட ஆக்க விடயங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இவருக்கே இருந்தது.
- சட்ட நிரூபண சபையும்,சட்ட நிருவாக சபையும் வேறு வேறான ஊறுப்பினர்களை கொண்டிருந்தமையினால் சட்டததை உருவாக்குபவர்களுக்கு சட்டததை ஆமல்படுத்துவதில் பங்கு இருக்கவில்லை.
- படித்த இலங்கையர்களும் அவர்களது பிரதிநிதியும் மிதவாத அரசியலை பின்பற்றியதனால் அவர்கள் தீவிரமான நிலையில் இலங்கை சுதந்திர போராட்டத்தை நடத்த முன்வரவில்லை.
- இவர்கள் ஆதிக்கம் வாய்ந்த சக்திகளாக இருந்தமையிகால் பின்னர் தோற்றம் பெற்ற தீவிரவாதிகளினாலும் இவர்களை மீறி வளர முடியவில்லை. இதனால் ஒர் ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் என்பது இலங்கையில் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை.
முடிவுரை:
எனவே பொதுமக்களுக்கு பொறுப்பு சொல்லும் அரசியல் திட்டம்
ஒன்று கிடைக்கபெறாவிட்டாலும், வரையறுக்கப்பட்ட அளவிலான வாக்குரிமையை பிரயோகித்து
அங்கத்தவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது. இது பாராளுமன்ற ஆட்சிமுறை
ஒன்றில் இருக்க வேண்டிய பிரதிநிதித்துவ முறைக்குச் சட்டவாக்க கழகத்தின் ஊடாக
முன்னெடுக்கப்பட்ட முதல் முயற்சி என்ற வகையில் இவ் அரசியல் சீர்திருத்தம்
முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
தொகுப்பு:
S. Vithurshan,
Special in political science.(Reading)
University of peradeniya
உசாத்துணை நூல்கள்:
1. அம்பலவாணர் சிவராஜா (2006),"இலங்கை அரசியல்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு, p-31-33.
2. தமிழ்வின், இலங்கை
அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்,(கட்டுரை),
web: https://www.google.com/amp/s/www.tamilwin.com/education/ 01/119592/amp
(Accessed 2016 October 2).
3.யோதிலிங்கம், சி.
அ,(2004),"இலங்கையின்
அரசியல் யாப்புகள்", குமரன்
புத்தக இல்லம், கொழும்பு.
4. Cooray, L. J. M(1984),"
constitutional government in Sri Lanka, Colombo :Lake House investment Ltd.
5. Jayasekara, P. V. J,
"Confrontations with Colonialism: Resistance, Revivalism and Reform under
British Rule in Sri Lanka 1796- 1920"-Volume-1.


Comments
Post a Comment