கால்மார்க்சும், மாக்சிச சிந்தனையும்.
மூலதனம் நூல்:
அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.
மார்க்சின் சிந்தனைகள்:
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.
மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்திய விடயங்கள்:
மார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில:
1.ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
2. ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.
3. பிரெஞ்சு சோசலிச, சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.
4.முந்திய செருமானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் பியுவெர்பக்.
5. பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராகத் தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்றும் ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், கிறித்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கணித்தார்.
மார்க்சின் மெய்யியல் கொள்கைகள்:
மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும். இது தொடர்பில் அவர்,
"ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான்" என்பதாகும்.
உலக வரலாறு “வர்க்கப் பேராட்டத்தின் வரலாறு” என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். சமூகப் பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரப் பலத்தினாலேயே நிகழ்கின்றது என்பது கால்மாக்ஸின் முடிவாகும். சமூகம், பொருளாதாரம், வரலாறு, இவைகளைப் படிப்பதற்கான முறையியலாக கால்மாக்ஸ் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை பயன்படுத்தும் போது அதற்குள் இயக்கவியல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
சமூக வரலாற்றின் அபிவிருத்தியை கோள் (Thesis) முரண்கோள் (Anti-Thesis) என்ற எண்ணக்கருக்களுக்கூடாக கால்மாக்ஸ் விளக்குகின்றார். வரலாற்றில் தோன்றிய ஒவ்வொரு சமூகத்தினையும் “கோள்” என்றும் அச்சமூகத்திற்குள்ளிருந்து அச்சமூகத்தினை எதிர்க்கின்ற சமூகத்தினை “முரண்கோள்” என்றும் கூறுகின்றார். எனவே வரலாற்றில் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் முரண்கோள் காணப்படுகின்றது. இம்முரண்கோள் அச்சமூகத்தினை அழித்து புதிய சமூகத்தினை தோற்றிவித்தது. சமூக வரலாற்றின் தொடர்ச்சி இதன்மூலமே ஏற்பட்டது என்பது கால்மாக்ஸின் கருத்தாகும்.
கால்மாக்ஸ் கூறும் இயக்கவியல் முரண்பாட்டு எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. பதிலாக வர்க்க இயக்கவியலை அடிப்படையாகக் கொண்டது. வர்க்க முரண்பாட்டினால் புதிய உற்பத்திமுறைகள் பிறந்துள்ளன. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு உற்பத்திமுறைகளைக் கொண்டிருந்தன. வரலாற்றினூடான உற்பத்திமுறைகளுக்கான இம்மாற்றம் இயக்கவியலூடாகவே நிகழ்ந்தது. இயக்கவியல் புதிய உற்பத்திமுறைகளுக்கு வழிகாட்டியாகி, வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்திக்கான மூலப்பொருள் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தே சமூகம் ஒன்றின் அடிப்படை தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக கால்மாக்ஸ்சும் பிரட்றிக் ஏங்கல்ஸ்சும் மேற்கு ஐரோப்பாவினை அடிப்படையாகக் கொண்டும் உற்பத்திக்கான மூலப்பொருள் சமூகத்தில் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தும் சமூகத்தின் அபிவிருத்தியை ஐந்து படிநிலைகளாக பிரிக்கின்றார்.
முதலாவது படிநிலையில் ஆதிகால கம்யூனிஸ சமூகம் இருந்ததாக கூறுகின்றார். இங்கு உற்பத்திமுறைமை சமுதாயம் சார்ந்ததாக இருந்தது. இச்சமுதாயத்தின் உற்பத்தி கருவிகளாக வேட்டையாடுதலாகவும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டி குவிப்பதாகவும் இருந்தது. இங்கு சொத்துக்கள் யாவும் யாருக்கும் சொந்தமாக இருக்கவில்லை. வேட்டையாடுதல் மூலமும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதன் மூலமும் கிடைத்த மேலதிகப் பொருட்கள் சேமிப்புக்களாகின. இது சமூகத்தில் சமமின்மையினைத் தோற்றிவித்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். யாரிடம் மிகையான சேமிப்பு இருந்ததோ அவரிடம் அதிகாரமும் சென்றடைந்தது. அவர் சமூகத்தின் தலைவரானார்.
சமூகத்தில் தோன்றிய இவ் ஆரம்ப படிநிலை நகர அரசுகளின் தோற்றத்துடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இரண்டாவது படிநிலையில் ஆண்டான் அடிமைச் சமூகம் இருந்தது. இச்சமூகத்தின் தோற்றத்துடன் தனியார் சொத்துடமையும் “வர்க்க சமூகமும்” தோன்றிவிட்டதாக கால்மாக்ஸ் கூறுகின்றார். இங்கு அடிமைகள் ஆண்டானின் சொத்துக்களாகினர். இவர்கள் எவ்வித ஊதியமுமின்றி ஆண்டானிற்காக வேலை செய்தார்கள். இச்சமூக அமைப்பிலிருந்து இயக்கவியல் பற்றி கால்மாக்ஸ் விளக்குகின்றார். அடிமைகள் ஆண்டானின் சொத்துக்கள் மாத்திரமல்ல, ஆண்டானின் பாதுகாவலர்களுமாகும். அடிமைகள் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆண்டான் அடிமை சமூகம் உள்முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
மூன்றாவது படிநிலையில் நிலப்பிரபுத்துவ சமூகம் இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். நிலப்பிரபுத்துவ சமூகம் நேரடியாக முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு காரணமாகியது என்ற வகையில் முக்கியமான இடத்தை பெறுகின்றது. நிலப்பிரபுத்துவ சமூகம் படுக்கைகளாயமைந்த பல வர்க்கமுறையைக் கொண்டதாகும். இங்கு அரசன், பிரபு, குடியானவன் போன்ற பல வர்க்கங்கள் இருந்தன. குடியானவன் என்பவன் அடிமையினை விட சற்று கூடிய சமூக அந்தஸ்துடையவனாகும். அரசன் நிலங்களின் ஆட்சியாளன். பிரபுக்கள் பெருந்தொகையான நிலங்களுக்குச் சொந்தக்காரனாகும்.
குடியானவன் தனது தொடர்ச்சியான வாழ்க்கைக்காக பிரபுவின் நிலங்களில் வேலை செய்கின்றவனாகும். குடியானவனால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களில் தனது வாழ்வாதாரத்தை பராமரிப்பதற்குத் தேவையானவை பிரபுவினால் வழங்கப்பட்டது. நிலங்கள் யாவும் பிரபுவிற்குச் சொந்தமாக இருந்ததினால் எஞ்சிய மிகை உற்பத்தி யாவும் பிரபுவுக்குச் சொந்தமாக இருந்தது. ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமை ஆண்டானின் உடமையாக இருந்தான். பிரபுத்துவ சமூகத்தில் குடியானவன் பிரபுவின் உடமையல்ல. ஆனாலும் அடிமைத்தனத்தின் இயல்பு வேறு வடிவத்தில் தொடர்ந்தது. குடியானவனின் பிள்ளைகள் பிரபுவின் நிலங்களில் பெற்றோர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மேலும் குடியானவன் யுத்தகளத்தில் போர்வீரனாகவும் பயன்படுத்தப்பட்டான்.
நிலச்சொந்தக்காரர்களுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ சமூகத்தை சிதைக்கத் தொடங்கியது. நிலப்பிரபுக்கள் ஏனைய நிலப்பிரபுக்களால் வெற்றிகொள்ளப்பட்டு அவர்களிற்குச் சொந்தமான குடியானவர்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இது இறுதியில் அரசனின் அதிகாரத்திற்கு ஆபத்தாகியது. மறுபக்கத்தில் நாணயங்களின் அறிமுகம் குடியானவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்குவதற்கு உதவியது. மேலும் நாணயங்களின் அறிமுகம் புதிய “வர்த்தக சமூகம்” ஒன்றைத் தோற்றிவித்தது. மக்கள் அரசிற்கு வரி செலுத்த வேண்டும் என அரசன் கட்டளை பிறப்பித்தான். தமது நிலங்களைக் கடந்து செல்லும் வர்த்தகர்கள் மீது நிலப்பிரபுக்கள் வரி விதித்தனர். இது நிலப்பிரபுக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் புதிய முரண்பாட்டைத் தோற்றிவித்தது. சமூகத்தில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் புதிய உற்பத்தி முறைகள் அறிமுகமாவதற்கும் காரணமாகியது. புதிய உற்பத்திமுறைமை முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு உதவியது.
நான்காவது படிநிலையில் முதலாளித்துவ சமூகம் இருந்தது. இங்கு புதிய வர்க்க அமைப்பு இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். தொழிலாளர்கள், புதிய உற்பத்திக் கருவிகளுக்குச் சொந்தக்காரர்களாகிய முதலாளிகள் என்பவர்களே இப்புதிய வர்க்கத்தினர்களாகும். உற்பத்திக் கருவிகளுக்கிடையிலான உறவுகளே “சமூக வர்க்க முறைகளைத் தீர்மானிக்கின்றன என கால்மாக்ஸ் நம்புகின்றார். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திக் கருவிகளாகிய நிலம்,தொழிற்சாலைகள், தொழில்நுட்பம், போக்குவரத்து போன்றவற்றின் சொந்தக்காரர்களும் விநியோகத்தர்களுமாக முதலாளிகளே காணப்படுவார்கள். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறிய வர்க்கமாகும். உழைக்கும் திறனை வேதனத்திற்கு விற்பனை செய்து வாழும் மக்கள் தொழிலாளர்களாகும். இவர்கள் சமூகத்தில் பெரும்பான்மையினராகும்.
இப் பெரும்பான்மைச் சமூகம் தொழிலாளர் வர்க்கம் என அழைக்கப்படுகின்றனர். தொழிலாளர் வர்க்கம் தமது உழைப்பினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பொருட்கள், சேவைகள் என்பன முதலாளிகளால் இலாபத்திற்கு விற்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தினர் அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகித்ததோடு அரச இயந்திரத்தினை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருந்தனர். முதலாளிகள் தமது நலன்களை உயர்த்தவும், பாதுகாக்கவும் ஏற்ற கொள்கைகளை உருவாக்கி அவற்றைச் சட்டமாக்கி கொண்டார்கள். உண்மையில் முழு அரசாங்க இயந்திரமும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான சுரண்டலுக்கு ஏற்ற பாதுகாப்பினை உருவாக்கிக் கொண்டனர்.
இவ்வாறு பல்வேறு வகையான கருத்துக்களை கூறிய இவர் 14 மார்ச் , 1883 அன்று மரணம் அடைந்தார்.
தொகுப்பு:
சிவம் விதுர்ஷன்.
அரசியல் விஞ்ஞானத்துறை(Reading).
பேராதனைப் பல்கலைக்கழகம்.


Comments
Post a Comment