மாக்கியவெல்லியும் அரசியல் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்களிப்பும்
மாக்கியவெல்லி வாழ்க்கை:
நிக்கோலோ மாக்கியவெல்லி என சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli) ஒரு இத்தாலிய ராஜதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். நவீன அரசியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் - மே 3, (1469 – சூன் 21, 1527 ) நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை பெர்னார்டோ டி நிகோலோ மாக்கியவெல்லி (Bernardo di Nicolo Machiavelli) ஒரு வழக்கறிஞராக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் லத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை பெறுவது அவசியமானதாகவும்,பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்பட்டிருந்தது.
கி.பி.1499-இல் மாக்கியவல்லி தனது 29வது வயதில் Florentine குடியரசின் இரண்டாவது Chancellor பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களுக்கு பொறுப்பாகவும் இருந்தார். இது மாக்கியவல்லி அரசியல் பற்றிய தெளிவினை பெறுவதற்கு பெரிதும் உதவியிருந்தது. 1512 ஆம் ஆண்டு புளோரன்ஸ் குடியரசு குழப்பமடைந்ததுடன், மாக்கியவல்லியின் தொழிலும் சிக்கலடைந்தது. 1512ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலக்கப்பட்ட மாக்கியவல்லி, 1513ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்றுக் கொண்ட மாக்கியவல்லி சிறை வாழ்க்கைக்கு பிந்திய நாட்களை தனது ஓய்விற்காக பயன்படுத்தினார். இந்த ஓய்வு காலத்தில் தனது ராஜதந்திர அனுபவங்கள், வரலாறு ஆட்சியாளனுக்கு இருக்கக் கூடிய இயல்புகள் என்பவைகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்
மாக்கியவல்லியின் ஆய்வு நூல்களில் Prince’, ‘Discourses on the First Decade of Titus Livius’ ஆகிய இரு நூல்களும் மிகவும் பிரபலமானதுடன் இவருடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவைகளுமாகும். 1513ஆம் ஆண்டு நடுப்பகுதியில் Prince என்ற நூலை எழுதியிருந்தார். மிகவும் அர்ப்பணிப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்ட இந்நூல் ஆட்சியாளனுக்கு ஆலோசனை வழங்குகிற நூலாகவே இருந்நது. ‘Discourse on Livy’ என்ற நூலில் குடியரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கை ஒன்றுக்கு வருவதனூடாக கலப்பு அரசாங்கம் ஒன்றை உருவாக்க மாக்கியவல்லி முற்படுகின்றார். இந்நூல் பெருமளவிற்கு புளோரன்ஸ் நகரத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருந்தது. ஆயினும் 1512 ஆம் ஆண்டு The Art of War என்ற நூல் ஒன்றை இதற்கு முதல் மாக்கியவல்லி எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாக்கியவல்லியின் அனேக எழுத்துக்களுக்கான சரியான காலம் இன்றுவரை தர்க்கத்திற்குரியதாகும்.
மாக்கியவெல்லி என்ற பெயர் சிந்தனை வட்டாரங்களில், அரசியல் கயமைத்தனத்தை குறிக்கிறது. மாக்கியவெல்லியைக் கண்டித்து இகழ்ந்து பெசிய சிந்தனையாளர்களெல்லாம் ஒரு அடிப்படை விசயத்தை மறந்துவிட்டனர். மாக்கையவெல்லி பழைய புடிய மன்னர்களுக்கு அரசாட்சி நிலைக்க வேண்டுமானால் இது செய்யாதொழிக என்று அறிவுரை சூத்திரங்களை வழங்கினார்.
மக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகளை மடிச்சி குடும்பத் தலைவர் லாரன்சோ டி மெடிசி (Lorenzo de' Medici) க்கு எழுதி அனுப்பிய கடிதமான “இல் பிரின்சிபே’ நூலின் தொடரைக் காணலாம். இளவரசன் (The Prince) என்னும் ஒரு சிறிய ஆக்கத்துக்காகவே இவர் கூடிய பெயர் பெற்றார். இது சில வேளைகளில் உண்மையில் அரசியல் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவதும் உண்டு. இந்த ஆக்கமும், விரிவான இன்னொரு ஆக்கமான லெவி பற்றிய சொற்பொழிவுகள் (Discourses on Livy) மற்றும் புளோரன்சின் வரலாறு (History of Florence) என்னும் ஆக்கமும் அவர் இறந்த பின்னர் 1530களிலேயே வெளியிடப்பட்டன. இதில்,
அத்தியாயம்-1 பலவித அரசாங்கங்களும்,அவை நிறுவப்படும் முறைகளும்
மனிதவர்க்கத்தை ஆளுவதற்கதாக ஏற்பட்டிருக்கும் ராஜ்யங்களும் சமஸ்தானங்களும் (Dominions) முடியரசுகள் அல்லது குடியரசுகளாகவே இருக்கின்றன.முடியரசு நாடுகள் பல்லாண்டுகளாகப் பரம்பரையாய் அரசுபுரியும் மன்னர்களைக் கொண்டவை அல்லது சமீப காலத்தில் ஒரு புதிய அரசனால் கைக்கொள்ளப்பட்டவையாக இருக்கும். புதிய ராஜ்யங்கள் பிரான்ஸிஸ்போஸ் போர்ஸா (Francesco Sforza) வுக்கு மிலன் (Milan) கிடைத்ததைப்போல் முற்றிலும் புதிதாகவே இருக்கும். இல்லையேல் ஸ்பெயின் தேசத்தரசனுக்கு நேபிள்ஸ் (Naples) எப்படியோ, அப்படிப் பரம்பரை பாத்தியதைகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய அங்கங்களாக இருக்கும். இவ்விதம் சேர்த்துக்கொள்ளப்பட்ட சமஸ்தானங்கள் ஏற்கனவே வெறொரு அரசனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்தவையாகவாவது, சுயேச்சையாகவாவது இருந்திருக்கும். அவை அரசனுடைய அல்லது மற்றவர்களுடைய ஆயுதபலத்தினால், அசாதாரணமாமன திறமையினால், அல்லது அதிர்ஷ்டத்தினால் கைப்பற்றப்பட்டவை.
அத்தியாயம்-2 பரம்பரை முடியரசுகள்
நான் இங்கே குடியரசுகளைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அவற்றைக் குறித்து வேறோரிடத்தில் வஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கிறேன். இங்கே முடியரசுகளைப் பற்றி மட்டுமே கூறுகிறேன். மேற்குறித்த பலவகை ராஜாங்கங்கள் எவ்விதம் நிர்வகிக்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன என்பவற்றையே விவரிக்கிறேன். புதிய முடியரசு நாடுகளை ஆள்வதைவிடப் பரம்பரையாக ஒரே ராஜ வம்சத்தின் கீழ் வாழ்ந்து பழகிய நாடுகளைப் பரிபாலிப்பதில் சிரமம் குறைவு. ஏனெனில் அவ்வித ராஜ்யங்களில் ஒரு அரசன் பழைய வழக்கங்களை மீறாமலும், எதிர்பாராத விதமாக ஏற்படும் நிலைமைகளைச் சமாளித்துக்கொண்டும் போனால் போதும். ஏதேனும் அபூர்வமான விபரீத சக்தியால் அவன் ராஜ்யம் பறிபோகும்படி நேரிட்டாலொழிய, சாதாரணமான ஜாக்கிரதைகளையுடைய எந்த அரசனும் தன் பதவியை நிலை நிறுத்திக் கொள்ளலாம். அவனுடைய ராஜ்யம் அபகரிக்கப்பட்டுவிட்டால் கூடப் புதிதாய் கைப்பற்றியவனுக்கு ஒரு சிறு துரதிர்ஷ்டம் நேர்ந்தாலும் திரும்பவும் ராஜ்யம் அவன் கைக்குக் கடைத்துவிடும்.
உதராணமாக இத்தாலியில் பெராரா சிற்றரசன் (Duke of Ferrara) கி.பி. 1484 ஆம் ஆண்டில் வெனிஷியர் (Venetians) களுடைய தாக்குதலையும் 1510-ஆம் வருஷத்தில் போப் ஜுலிய (Pope Julius) ஸின் எதிர்ப்யையும் எப்படிச் சமாளித்தான் என்பதற்கு அவன் அந்த ராஜ்யத்தின் பழமையான ராஜவம்சத்தைச் சேர்ந்தவனாயிருந்தது தான் காரணம். நியாயமான அரசனுக்குக் குடிகளைத் துன்புறுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக இரா. ஆகையால் அவன் குடிகளின் அன்பைப் பெறுவது சகஜம். அவனிடம் வெறுக்கத்தக்க துர்க்குணம் ஒன்றும் இல்லாவிட்டால் பிரஜைகள் அவனிடம் இஷ்டத்துடனிருப்பது இயற்கையே. அவனுடைய ஆட்சி வெகுகாலம் நீடித்துப் பழகியதாய்ப் போயிவிடுவதால் முதன் முதல் புதிதாகச் செய்யப்பட்ட சட்ட திட்டங்களின் காரணங்களும் ஞாபகமும் குடிகளுக்கிருப்பதில்லை. ஒரு மாறுதல் இன்னொரு மாறுதலை ஏற்றுக் கொள்ளும் வழியைத் தயார் செய்கிறது.
மாக்கியவல்லியும் இளவரசன் நூலும்
ஓர் அரசுத் தலைவருக்கு நடைமுறைக்கு உகந்த அறிவுரைகளைக் கூறும் ஒரு பாட நூலாக "இளவரசன்" நூலைக் கொள்ளலாம். இந்த நூலில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கருத்து இதுதான்; "ஆட்சியைப் பிடிக்க விழையும் ஓர் இளவரசன், அறநெறிக் கொள்கைகளை அடியோடு புறக் கணித்து விட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ஓர் அரசு மிகுந்த ஆயுத பலம் கொண்டதாக இருக்க வேண்டும். தன் சொந்த நாட்டுக் குடிமக்களிலிருந்து திரட்டப்பட்ட இராணுவம் மட்டுமே நம்பத் தக்கது. கூலிப் படைகளை அல்லது மற்ற அரசுகளில் படைகளை நம்பியிருக்கும் அரசு எப்போதும் ஆற்றலற்றதாகவும், ஆபத்துக்குள்ளாகக் கூடியதாகவே இருக்கும்.
இளவரசன் தன் குடி மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாக்கியவெல்லி அறிவுறுத்துகிறார். இல்லையெனில், ஆபத்துக் காலத்தில் அவனுக்குப் புகலிடம் இருக்காது. சில சமயம், ஒரு புதிய அரசன், தன் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, குடிமக்கள் விரும்பாத சில செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மாக்கியவெல்லி உணர்த்துகிறார். எனினும், "...........ஆட்சியைப் பிடித்ததும், ஓர் அரசன் எல்லாக் கொடுமைகளையும் உடனடியாகச் செய்து முடித்துவிட வேண்டும். அன்றாடம் நிகழும்படி செய்யலாகாது. குடிமக்களுக்கான நன்மைகளை, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கும் வகையில், சிறிது சிறிதாக அளிக்க வேண்டும்" என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.
ஓர் இளவரசன் வெற்றிகரமாக ஆட்சிபுரிய வேண்டுமானால், தன்னைச் சுற்றித் திறமையும், பற்றுறுதியும் வாய்ந்த அமைச்சர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், முகப் புகழ்ச்சி செய்பவர்களைத் தவிர்த்து ஒதுக்கி விட வேண்டும் என்று மாக்கியவெல்லி எச்சரிக்கை செய்கிறார். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் கூறுகிறார்.
"இளவரசன்" நூலில் 17 ஆம் அத்தியாயத்தில் இளவரசன் அன்புக்குப் பாத்திரமாவது நல்லதா, அச்சத்தை விளைவிப்பது நல்லதா என்பது குறித்து மாக்கியவெல்லி விவாதிக்கிறார்:
"இதற்கு விடை இது தான். ஒருவர் அன்புக்கு ஆட்படவும் வேண்டும்; அச்சத்தை விளைவிக்கவும் வேண்டும். ஆனால், இவ்விரண்டில் எது நல்லது எனக் கேட்பின், அன்புக்கு ஆட்படுவதைவிட அச்சத்தை விளைவிப்பதே பாதுகாப்பானது. ஏனெனில், அன்பு என்பது சங்கிலித் தொடர் போன்ற கடப்பாடுகளைக் கொண்டது. மனிதர் தன்னலம் வாய்ந்தவராக இருப்பதால் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறியதும் அன்பும் அறுந்து போய்விடுகிறது. ஆனால், உறுதியாகத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சுறுத்தல் வாயிலாக அச்ச உணர்வு என்றென்றும் நிலைபெறுகிறது".
இதன் 18 ஆம் அத்தியாயம் "இளவரசர்கள் நம்பிக்கையைப் பேணுவதற்கு வழிமுறை" என்ற தலைப்புடையது. இதில் மாக்கியவெல்லி இவ்வாறு கூறுகிறார்...." நம்பிக்கையைக் காப்பாற்றுவது தமது நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றால், ஒரு விவேகமுள்ள அரசன் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் இருத்தலே நலம்...." அவர் மேலும் சொல்கிறார். ஓர் இளவரசன் தன் வாக்குறுதியை நிறைவேற்றாததற்குச் சட்டப்படியான காரணங்களைக் கொண்டே போதிய சாக்குப் போக்குகள் கூறலாம். ஏனெனில், மனிதர்கள் மிகவும் அப்பாவிகள்; அவர்களை அப்போதைய வாதங்களுக்கு அடிபணிய வைப்பது எளிது. எனவே, இரண்டகம் செய்யும் எவரும் தாம் வஞ்சிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறவர்களை என்றென்றும் ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம்; ஆகவே, மற்றவர்களின் வாக்குறுதிகளை இளவரசன் எப்பொழுதும் ஐயறவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும்" என்று மாக்கியவெல்லி அறிவுறுத்துகிறார்.
இந்த "இளவரசன்" நூலை "சர்வாதிகாரிகளுக்கு வழிகாட்டி" என்றும் அழைப்பதுண்டு. மாக்கியவெல்லி பொதுவாகச் சர்வாதிகாரத்தை விடக் குடியரசு முறை அரசாங்கத்தையே ஆதரித்தார் என்பது அவருடைய வாழ்க்கையிலிருந்தும், மற்ற நூல்களிலிருந்தும் தெரிகிறது. ஆனால், இத்தாலியின் அரசியல் மற்றும் இராணுவ கையாலகத்தனம் கண்டு அவர் ஆத்திரம் கொண்டார். நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கும், நாட்டை நாசப்படுத்தும் பல்வேறு வல்லமை வாய்ந்த ஓர் இளவரசன் தேவை என அவர் விரும்பினார். இளவரசன் நடைமுறையில் எப்போதும் சீற்றங் கொள்பவராகவும், ஈவிரக்கமற்றவராகவும் இருக்க வேண்டும் என்று மாக்கியவெல்லி வலியுறுத்தியபோதிலும், அவர் தம் வாழ்வில் கனவியற் போக்குடையவராகவும் ஆழ்ந்த நாட்டுப் பற்று வாய்ந்தவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் தீவிரமாகப் பரிந்துரைத்தது போல் வஞ்சனை செய்வதில் அத்துணை தேர்ந்தவராக இருக்கவில்லை.
மாக்கியவெல்லி போல் கடுமையான கண்டனத்திற்குள்ளான அரசியல் தத்துவஞானிகள் மிகச் சிலரே, நெடுங்காலமாக, அவர், "மனித உருக்கொண்ட பேய்" என்று பழிக்கப்பட்டார். வஞ்சகத்தையும், தந்திரத்தையும் குறிப்பதற்கு அவருடைய பெயர் கையாளப்பட்டு வந்தது. மாக்கியவெல்லியின் போதனைகளை நடைமுறையில் தீவிரமாகக் கையாண்டவர்களே அவரை வன்மையாகக் கண்டித்தது வேடிக்கையாக இருந்தது. இவர்களின் கபட நாடகத்தை மாக்கியவெல்லியே கூட கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
அறநெறிக் காரணங்கள் காட்டி மாக்கியவெல்லி கண்டிக்கப்பட்டதைக் கொண்டு அவர் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை எனக்கூறி விட முடியாது. அவர் கூறிய கருத்துகள் அவருடைய சொந்தக் கருத்துகள் அல்ல என்று ஒரு சாரார் கூறுவர். இது ஓரளவுக்கு உண்மையே. புதிய கொள்கை எதனையும் கூறவில்லை என மாக்கியவெல்லியே அடிக்கடிக் குறிப்பிட்டுள்ளார். நினைவுக் கெட்டாத மிகப் பழங்காலம் முதற்கொண்டு, மாபெரும் வெற்றி பெற்ற பல இளவரசர்கள் ஏற்கனவே வெற்றிகரமாகக் கையாண்ட உத்திகளைத்தான் தாம் உரைப்பதாக அவர் கூறினார். உண்மையைக் கூறின், மாக்கியவெல்லி தாம் கூறும் கருத்துகளுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளைப் பண்டைகால வரலாற்றிலிருந்தும், அண்மைக் கால இத்தாலிய நிகழ்ச்சிகளிலிருந்தும் காட்டுவதைக் காண்கிறோம். 'இளவரசன் நூலில் மாக்கியவெல்லியின் பாராட்டுதலைப் பெறும் சீசரே போர்ஜியா தமது தந்திரங்களை மாக்கிவெல்லியிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, போர்ஜியாவிடமிருந்துதான் மாக்கியவெல்லி அவற்றைக் கற்றுக் கொண்டார்.
மாக்கியவெல்லியைப் பகிரங்கமாகப் பாராட்டிய சில அரசியல் தலைவர்களில் இத்தாலியச் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் ஒருவர். இவரைத் தவிர இன்னம் ஏராளமான புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் நூலைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டே உறங்கினர் என்பர். ஜெர்மன் சர்வாதிகாரி ஹட்லர், ரஷியாவின் ஸ்டாலின் ஆகியோரைப் பற்றியும் இவ்வாறு கூறுவதுண்டு. எனினும் மாக்கியவெல்லியின் சாணக்கியத் தந்திரங்கள், 'இளவரசன்' நூல் வெளியாவதற்கு முன்பை விடத் தற்கால அரசியலில் அதிகமாகக் கையாளப்படுகின்றனவா என்பதைத் தெளிவாகக் கூற இயலவில்லை. அந்த ஒரே காரணத்திற்காகவே, இந்த நூலில் மாக்கியவெல்லிக்கு உயரிடம் அளிக்கப்படவில்லை.
ஆனால், அரசியல் நடைமுறைகளில் மாக்கியவெல்லியின் பாதிப்பு தெளிவாகத் தெரியவில்லையெனினும், அரசியல் கோட்பாட்டின் மீது அவர் பெற்ற பெருஞ்செல்வாக்கினை மறுப்பதற்கில்லை. பிளேட்டோ, புனித அகஸ்டைன் போன்ற பண்டைய எழுத்தாளர்கள் அரசியலை அறிவியலுடன் அல்லது இறைமையிலுடன் இரண்டற இணைத்திருந்தார்கள். மாக்கியவெல்லி, வரலாற்றையும் அரசியலையும் முற்றிலும் மனித நோக்கில் விவாதித்தார்; அறநெறி நோக்கங்களை அவர் அறவே புறக்கணித்து விட்டார். அவர், "மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்ற மைய வினாவை எழுப்பவில்லை; மாறாக, "அவர்கள் உள்ளபடிக்கு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார். "யார் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்?" என அவர் கேட்கவில்லை; மாறாக, "ஆட்கள் உள்ளபடிக்கு எவ்வாறு அதிகாரத்தைப் பெறுகிறார்கள்?" என்று அவர் வினவினார். அந்த அரசியல் கோட்பாடு முன்பைவிட இன்று மிகுந்த செயல்முறை நோக்குடன் விவாதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு ஓரளவுக்குக் காரணம் மாக்கியவெல்லியின் செல்வாக்கே. நவீன அரசியல் சிந்தனையின் முக்கிய நிறுவனர்களில் ஒருவர் மாக்கியவெல்லி எனக் கருதுவது முற்றிலும் பொருத்தமேயாகும். இவ்வாறு பல்வேறு வகையான கருத்துக்களை கூறிய இவர் 21 சூன், 1527 அன்று இறந்தார்.
சிவம் விதுர்ஷன்
அரசியல் விஞ்ஞானத்துறை (4ஆம் வருடம்),
பேராதனைப் பல்கலைக்கழகம்.



Comments
Post a Comment