கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).


அறிமுகம்:

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு (Colebrooke-Cameron Commission) என்பது பிரித்தானிய இலங்கையின் நிருவாகத்தை மதிப்பிடுவதற்கும், அந்நாட்டின் நிருவாகம், நிதி, பொருளாதாரம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் மெற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், 1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஆணைக்குழு ஆகும். இவ்வாணைக்குழுவில் டபிள்யூ. எம். ஜி. கோல்புரூக், மற்றும் சி. எச். கேமரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை கோல்புறூக்-கேமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்பட்டன.

இலங்கையில் 1833 முதல் 1910 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அரசியலமைப்பும் இதுவே. இலங்கையில் மன்னராட்சி முறையின் கீழ் அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் திட்டமிடப்பட்ட அரசியல் நிர்வாகமுறை எதுவும் காணப்படவில்லை. இலங்கையின் அரசியலானது மன்னராட்சிக் காலத்தில் மரபுவழி சார்ந்த நிர்வாக முறைகளையே கொண்டிருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இலங்கையில் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள எத்தனித்தார்களே தவிர, அவர்கள் அரசியலில் ஒரு திட்டமிட்ட ஏற்பாட்டினையும் வழங்கவில்லை. இந்த நிலையில் ஓர் அரசியல் அமைப்பின் கீழ் இலங்கை ஆட்சிமுறையை வழித்திய நாடாக பிரித்தானியாவைக் குறிப்பிடலாம்.

கோல்புறூக் அரசியலமைப்பு கோல்புறூக் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட யாப்பு நிர்ணய சபையினால் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் நீதித்துறை தொடர்பான சீர்த்திருத்தங்களுக்கு பொறுப்பாக கெமரன் என்பவர் இருந்தார். சட்டம், நீதி, நிர்வாகம் மூன்றும் இணைக்கப்பட்ட அடிப்படையில் இந்த அரசியலமைப்பு அமைக்கப்பட்டமையினால் இது வரலாற்றில் கோல்புறூக் கெமரன் அரசியலமைப்பு அல்லது 1833ம் ஆண்டு அரசியலமைப்பு என வழங்கப்படுகின்றது. 

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் என்பது இலங்கையை பிருத்தானியர் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இலங்கை அரசியல் நிர்வாக முறையில் பிருத்தானியரால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமாகும். இது 1833 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இச்சீர்திருத்தம் கோல்புறூக், கமரன் ஆகியோரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி சட்டசபை அமைப்பு:

சட்டசபை - 15 உறுப்பினர்கள்
உத்தியோகப்பற்றுள்ளவர் - 9 உறுப்பினர்கள்
உத்தியோகப்பற்றற்றவர்கள் - 6 உறுப்பினர்கள்
ஐரோப்பியர்கள் - 3
பறங்கியர் - 1
தமிழர் - 1
சிங்களவர் - 1

கோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி இலங்கையில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. இதில் 9பேர் உத்தியோகப்பற்று உள்ளவர்கள். சபையில் உத்தியோகப் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர்  உத்தியோகப் பற்றற்றவர்களாக இருந்தனர்.

1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. கண்டிச் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது. சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. சட்ட நிர்வாகக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் முறையே கொழும்பு அரசாங்க அதிபர், தனாதிகாரி, நிலஅளவை அதிகாரி, கணக்காய்வாளர், வருமானவரி அதிகாரி என்போராவர்.

சட்டநிரூபணசபை, சட்டவாக்கங்களையும் சட்டநிர்வாக சபை, நிர்வாக விடயங்களையும் மேற்கொள்ளும். இலங்கையில் பணிபுரிந்த பிரித்தானிய உத்தியோகத்தர்களே உத்தியோகசார்புற்ற அங்கத்தவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் பதவிவழிகாரணமாகவர்கள் சட்ட நிர்வாகக் கழகத்தினராகச் செயல்பட்டனர்.அமைக்கப்பட்ட இச்சபைகள் தேசாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.

இதில் பல முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. அவையாவன:

  • 1848ல் சட்டநிரூபண சபையின் அனுமதியின்றி குடியேற்ற நாட்டுக்காரியதரிசியால் பொது நிதியைச் செலவிட முடியாதென மாற்றப்பட்டது.
  • 1859ல் உத்தியோக சார்பற்ற உறுப்பினர்களுக்கும் மசோதாக்களைக் கொண்டுவரும் அதிகாரம் வழங்கப்பட்டது.
  • 1889ல் சட்டநிரூபண சபை அங்கத்தவர் எண்ணிக்கை 17ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட இரண்டு அங்கத்தவர்களும் உத்தியோக சார்பற்றவர்களாவர். இவர்கள்

உதாரணமாக :
முஸ்லிம் - 1
கண்டிய சிங்களவர் -1

கோல்புறுக் கெமறன் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்.

கோல்புறூக் ஆணைக்குழுவின் சிபாரிசுகள்.

இலங்கையில் நிர்வாக ரீதியாக மாற்றங்களை கொண்டு வர காரணமாக இருந்தவர் கோல்புறுக். நிர்வாக செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிக்க தேவையான வழிவகைகளை செய்தார்.

1. இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல்.

அ. கட்டற்ற வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆ. இரட்டைப் பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

2. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான வர்த்தகச் சந்தையினை ஏற்படுத்திக் கொடுத்தல். இதனை ஏற்படுத்துவதற்குத் தடையாக அமைந்த, 
அ. இராஜகாரியமுறை ஒழிக்கப்பட்டது.

ஆ. வர்த்தகத் தனியுரிமையினை ஒழித்தல்.

இ. கொழும்புக் வெளியே காணப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பியருக்கு இருந்த தடையினை நீக்குதல்.

ஈ. குடியேற்ற நாட்டாட்சி நிர்வாக அதிகாரிகள் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடவதைத் தடை செய்தல்.

3.    இலங்கையின் நிர்வாகத்தை ஒரு ஐக்கிய நிர்வாகமாக மாற்றுதல்.
அ. மலைநாட்டில் இடம்பெற்ற புறம்பான நிர்வாகத்தை முடிவிற்குக் கொண்டுவருதல்.

ஆ. இலங்கையை 05 மாகாணங்களாகப் பிரித்து அதனை அரசாங்க அதிபரின் கீழ் கொண்டுவருதல்.

4. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்ககும் சுதேச மத்திய தர வர்க்கத்தினருக்கும் நிர்வாகத் தீர்மானங்களில் பங்குபற்றுவதற்கான பிரதிநிதித்துவத்தினைக் கொடுக்கும் ஒரு சட்டசபையினைத் தாபித்தல்.

5. தேசாதிபதியை சட்ட நிர்வாக சபையுடனும், சட்ட நிரூபண சபையுடனும் இணைந்து நாட்டை ஆளும் நிர்வாகியாக மாற்றுதல்.

6. ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் சமூகத்தில் நிலவும் ஆர்வத்தினைத் தக்கவைப்பதை இலக்காகக் கொண்டு ஒரு கல்வி நிர்வாகத்திற்கான மத்திய ஆணைக்குழுவைத் தாபித்தல்.

கமறன் ஆணைக்குழுவின் சிபாரிசுகள்:

கமரன் ஆணைக்குழு இலங்கையில் நீதித்துறையை மேம்படுத்த பல சீர்திருத்தங்களைப் கொண்டு வந்தனர். அவையாவன:

1. சுதந்திர நீதித்துறையினைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
அ. உயர் நீதிமன்ற நீதியரசர்களைப் பிரித்தானிய அரசாங்கத்தினால் நியமித்தல்.

ஆ. நீதிபதிகளின் தீர்ப்புக்களை தேசாதிபதிக்கு அனுப்புவதை நிறுத்துதல்.

2. உயர்நீதிமன்றத்தின் தலைமையின் கீழ் செயற்படும் ஒரு ஐக்கிய நீதி நிர்வாகத்தை ஏற்படுத்தல்.

3.  மாவட்ட நீதி மன்றங்களைத் தாபித்து அதற்கு கீழ் மட்ட நீதிமன்றங்களை நிறுவுதல்.

4.  ஐரோப்பியருக்கும், சுதேசிகளுக்கும் வெவ்வேறான நீதி முறையினை ஒழித்தல்.

5. இலங்கையில் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான “கபயாஸ் கோபஸ்” சட்டத்தின் ஏற்பாடுகளை இலங்கையில் அறிமுகம் செய்தமை. இதன்படி ஆட்களைக் கைது செய்யவும் நாடுகடத்தவும் அவர்களின் சொத்துக்களைக்க கைப்பற்றுவற்கும் தேசாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட்டு சகல பொலிஸ் செயற்பாடுகளும் நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

6.    சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற வாசகம் நடைமுறைப்படுத்தப்பட்டமை.

7.    நிர்வாகமும் நீதியும்; தனித்தனியாகப் பிரித்தல் (வலுவேறாக்கம் பின்பற்றபடல்). 


கோல்புறூக் சீர்திருத்தத்தின் பிரதிபலன்கள்:

1. இச்சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டசபை, பின்னாட்களில் பாராளுமன்றம் உருவாவதற்கு வழிசமைத்தது.

2. பிரதிநிதித்துவ அரசியல் என்கிற அம்சத்தை இச்சீர்திருத்தம் இலங்கையில் ஆரம்பித்துவைத்தது.

3. ஆங்கிலக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையானது, ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்ற, பிருத்தானிய அரசியல் சமூக விவகாரங்களை நன்கு அறிந்த ஒரு சுதேசிய மத்தியதர வர்க்கம் உருவாக வழியமைத்தது.

3. இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டமை பிற்கால இன முரண்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்தது.

4. பெருந்தோட்டத்துறையில் அறிமுகம் இலங்கையில் இரட்டை பொருளாதார அமைப்பை தோற்றுவித்து விவசாயத்துறை பாதிக்கப்படுவதற்கு வழியமைத்தது.

5. ஆங்கிலக்கல்வி அறிமுகம், ஆங்கில கலாசார செல்வாக்கினை ஏற்படுத்தியது.

இவ்வாறு பல்வேறுபட்ட மாற்றங்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக உருவானதுடன் சில பாதகமான விளைவுகளையும் உருவாக்கியது.
1. பிழைப்புமட்ட பொருளாதாரம் பாதிப்பு.
2. பெருந்தோட்டத்துறையின் வருகை.
3. இந்திய வம்சாவளி மக்களின் வருகையால் பல துன்பங்களை அவர்கள் அனுபவித்தமை.
4. காணி உச்சவரம்பு சட்டம் மூலம் காணிகள் அபகரிக்கப்பட்டமை.


1833 கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி தேசாதிபதியின் அதிகாரக்குறைப்பு:-

இவ் ஆணைக்குழு இலங்கைக்கு வர காரணம் தேசாதிபதிக்கு இருந்த அதிக அதிகாரம், நீதித்துறை தலையீடு என்பனவாகும். இதனால் தேசாதிபதிக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட இவ் ஆணைக்குழு காரணமாகியது. 

1. இராஜகாரிய முறையின் நீக்கத்தால் இவரது அதிகாரம் குறைக்கப்பட்டது. இராஜகாரிய முறையின் கீழ் ஒருவரை சேவை செய்யுமாறு நிர்ப்பந்திக்கவும் அவரது சேவையைப் பெறவும் தேசாபதிக்கு இருந்த அதிகாரங்கள் முழுமையாக நீக்கப்பட்டன.

2.  நீதிமன்றம் அமைக்கப்பட்டமையால் தேசாதிபதியின் நீதி அதிகாரம் குறைக்கப்பட்டது.

3.  கட்டற்ற வர்த்தக அறிமுகத்தால் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளில் அவருக்கு இருந்த ஏதேச்சதிகாரம் குறைக்கப்பட்டது.

4.    சட்டசபையின் தோற்றத்தால் அவரது சட்டவாக்க அதிகாரங்கள் முன்பிருந்ததை விட குறைந்து போனது.

5.    சட்ட நிர்வாக சபையின் ஆலோசனையை தேசாதிபதி கண்மூடித்தனமாக புறக்கணிக்க முடியாது. அவ்வாறு புறக்கணிப்பின் அதற்குரிய காரணத்தை குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.

6.    இதுவரை காலமும் தேசாதிபதியே பிரதான நீதி, இராணுவத் தளபதியாகவும் இருந்தார் குறிப்பாக கண்டிப் பகுதியைப் பொறுத்தவரை குற்றவிசாரணை அதிகாரம் தேசாதிபதியிடமே இருந்தது.

7.    அரசுக்கு எதிரான ஒருவரை விசாரணையின்றிச் சிறையிலிடவும் நாடுகடத்தவும் தேசாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் கோல்புறுக் கமறன் அரசியல் சீர்திருத்தம் மூலம் இல்லாதொழிக்கப்பட்டன.

8.    சட்ட நிர்வாக சபையின் தோற்றமானது அரசாங்கத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு தேசாதிபதி மட்டுமே பொறுப்பு என்கின்ற நிலையை நீக்கியது எனலாம்.

9.    வரவு செலவுத்திட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் அதிகாரம் 1838களின் பின் சட்டசபைக்கு வழங்கப்பட்டது. இது செலவு தொடர்பான விடயங்களில் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மேற்குறிப்பிட்ட அதிகாரங்கள் தேசாதிபதிக்கு குறைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறுபட்ட ஜனநாயக அம்சங்கள் கோல்புறுக் மற்றும் கமறன் சீர்திருத்தம் மூலம் உருவானதுடன் யாப்பு ரீதியாக ஏனைய யாப்பின் அடுத்தளமாகவும் காணப்பட்டது. 1910 ஆம் ஆண்டு குறூ மக்கலம் அரசியல் சீர்திருத்தம் உருவானதன் பின்னர் இச் சீர்திருத்தம் இல்லாமல் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை அதிகரித்து குறூ மக்கலம் சீர்திருத்தம் உருவானது.

தொகுப்பு:

Sivam vithurshan. 
Special in political science(Reading), 
University of Peradeniya. 

உசாத்துணை நூல்கள்:

1. அம்பலவாணர் சிவராஜா(2006),"இலங்கை அரசியல்",
குமரன் புத்தக இல்லம், கொழும்பு, p-31-33.

2. தமிழ்வின், இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்,(கட்டுரை),
web:https://www.google.com/amp/s/www.tamilwin.com/education/01/119592/amp (Accessed 2016 October 2).

3.யோதிலிங்கம், சி. அ,(2004)," "இலங்கையின் அரசியல் யாப்புகள்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

4. Cooray, L. J. M(1984)," constitutional government in Sri Lanka, Colombo :Lake House investment Ltd.

5. Jayasekara, P. V. J, "Confrontations with Colonialism: Resistance, Revivalism and Reform under British Rule in Sri Lanka 1796- 1920"-Volume-1. 

Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்