1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்
அறிமுகம்
மனித உரிமைகள் என்பது மனிதன் இயற்கையாக தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவைப்படும் அடிப்படை உரிமைகள் என அர்த்தப்படுத்தலாம். அதனால் எந்த ஒரு நாட்டிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் என்ற பெயரில் தனியான சட்டங்கள் இருப்பதைக் காண முடிவதில்லை.
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது.
1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
மனித உரிமைகளின் வகைகள்
மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை ஐந்து வகைகளாகப் பிரித்தது.
அவை :
1.குடியியல் உரிமை
2.அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. கலாச்சார உரிமைகள் என்பனவாகும்.
இதனால் இன்று வெவ்வேறு பெயர்களில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டங்களும் நடைமுறைகளும் சட்ட முறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கையின் சட்ட முறைக்குள் அடிப்படை உரிமைகள் சட்டம் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் விசேடமான நலிவுற்ற மக்களின் பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறுவர் உரிமைகள், முதியோர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம். 1994ம் ஆண்டு சித்திரவதைச் சொத்துக்கள் பற்றிய சட்டம் போன்ற தனியார் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் நடைமுறைகளும் பிரதானமாகக் கொள்ளப்படுகின்றன.
அரசியல் யாப்பு சட்டம் மூலமாக அரசாங்கங்களுக்கு வழங்கப்படும் வரையறையற்ற அதிகாரங்களை பிரயோகிக்கின்ற போது மக்களின் உரிமைகள் மீறப்படுவதால் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்ட ஏற்பாடுகளும் நடைமுறைகளும் அரசியல் யாப்பினூடாக உறுதி செய்வதை தற்போது பல நாடுகளும் பின்பற்றி வருவதைக் காணலாம்.
இச் சட்டம் மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் என்றல்லாது அடிப்படை மனித உரிமைகள் என்று இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அடையாளப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் 1972, 1978 அரசியலமைப்புக்களில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் நடைமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பு சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் சிறுபான்மை காப்பீடு உருவாக்கப்பட்டது. அவை நீக்கம் செய்யப்பட்டு அடிப்படை உரிமைகள் அத்தியாயம் முதலில் உள்ளடக்கிய யாப்பாக 1972 முதலாம் குடியரசு யாப்பு மாறியது.
1972 அரசியலமைப்பில் உறுப்புரை 18 (1) இல் பிரஜைக்குரிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறையில் சாத்தியமாவதற்கு அந்த அரசியலமைப்பில் ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
1978ம் ஆண்டு அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகளுக்காகவென தனியான ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளமை சிறப்பான அம்சமாகும். அத்துடன் அவ்வுரிமைகள் மீறப்பட்டாலோ மீறப்படுவதற்கான சந்தர்ப்பம் இருந்தாலோ அதற்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளவும் அந்த அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3.3.1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் சம்பந்தமான சட்டம்.
எமது அரசியலமைப்பில் iii வது அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பின்வருமாறு:
உறுப்புரை 10
ஆள் ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருந்ததற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.
உறுப்புரை 11
ஆளெவரும் சித்திரவதைக்கு, அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தலாகாது.
உறுப்புரை 12
1. சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமகாலப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.
2. இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரஜைக்கும் ஓரங்காட்டுதல் ஆகாது.
உறுப்புரை 13
1. சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்கவன்றி ஆளெவரும் கைது செய்யப்படுதலாகாது. கைது செய்யப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படும் எவரேனும் ஆளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
2. கட்டுக்காவலில் வைத்திருக்கப்படும், தடுத்து வைத்து இருக்கப்படும், அல்லது வேறு வகையில் சொந்த சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆளும் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்க மிக அண்மையிலுள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதி முன் கொணரப்படுதல் வேண்டும்.
அத்துடன் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய நீதிபதியினால் அதன் நியதிகளுக்கிணங்கவன்றியும், தொடர்ந்தும் கட்டுக்காவலில் வைத்திருக்கப்படுதலோ, தடுத்து வைக்கப்படுதலோ அல்லது சொந்த சுதந்திரம் பறிக்கப்படுதலோ ஆகாது.
3. தவறொன்றுக்கு குற்றஞ் சாட்டப்படும் எவரேனு மொருவர், தகுதிவாய்ந்த நீதிமன்றத்தொன்றினால் நடாத்தப்படும் நியாயமான விளக்கத்தில் அவரே நேரடியாக உரைப்பதற்கு அல்லது சட்டத் தரணி மூலம் உரைப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.
4. சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்க தகுதி வாய்ந்த நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் கட்டளை மூலமாகவன்றி, ஆள் எவரும் மரண தண்டனையினால் அல்லது மறியற் தண்டனையினால் தண்டிக்கப்படுதலாகாது. புலனாய்வு அல்லது விளக்கம் முடிவுறும் வரையில் ஆளொருவரைக் கைது செய்து வைத்திருத்தல், கட்டுக்காவலில் வைத்திருத்தல், தடுத்து வைத்திருத்தல், அல்லது சொந்த சுதந்திரத்தை வேறு வகையில் பறித்தல் தண்டனையாக அமையலாகாது.
5. ஆளெவரும், அவர் குற்றவாளியென எண்பிக்கப்படும் வரை, சுத்தவாளியென ஊகிக்கப்படுதல் வேண்டும். ஆயின் குறிப்பிட்ட நிகழ்வுகளை எண்பிப்பதற்கான பொறுப்பை குற்றஞ்சாட்டப்பட்ட ஆளொருவர் மீது சட்டம் சுமத்தலாம்.
6. புரியப்பட்ட நேரத்தில் தவறொன்றாகவிருந்திராத ஏதேனும் செயல் அல்லது செய்யாமை காரணமாக, ஆளெவரும் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் ஆகாது என்பதுடன், அத்தவறு புரியப்பட்ட நேரத்தில் வலுவிலிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டமெதுவும் அத்தகைய ஏதேனும் தவறுக்கு விதிக்கப்படுதலுமாகாது.
உறுப்புரை 14
1. ஒவ்வொரு பிரஜையும் பின்வருவனவற்றுக்கு உரித்துடையவராவர்.
அ. வெயிடுதலுட்பட பேச்சு சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும்
ஆ. அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்.
இ. ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம்
ஈ. தொழிற்சங்கம் அமைக்கவும் அதில் சேர்வதற்கும் உள்ள சுதந்திரம்
உ. தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்.
ஊ. தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்த கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்தவும் அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்தவும் உள்ள சுதந்திரம்.
எ. ஏதேனும் சட்ட முறையான முயற்சியில் தொழிலில் வியாபாரத்தில் தொழிலில் அல்லது தொழில் முயற்சியில் தானாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான உரிமை.
அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது சட்டரீதியான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளல்
1. அரசியலமைப்பின் உறுப்புரை 126 இல் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமைகள் நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கைகளினால் மீறப்படுகின்ற போது உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்து நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2. உறுப்புரை 126 (2) கீழ் அடிப்படை உரிமை மீறப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் உயர் நீதிமனற்றத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
3. உறுப்புரை 126 (2) இன் கீழ் அடிப்படை உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர் தானாகவோ அல்லது தனது சட்டத்தரணி மூலமாகவோ எழுத்து மூலமான விண்ணப்பம் செய்ய வேண்டும்.
4. உறுப்புரை 126 (2) இன் கீழ் அவ்வாறான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதைப்பற்றி இருவருக்கு குறையாத எண்ணிக்கையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானம் எடுப்பார்கள்.
அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அல்லது மீறப்படும் அபாயம் தென்படும் போது உயர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமான மனுவை சமர்ப்பிக்கும் ஒருவர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள்.
1. நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கைகளினால் அடிப்படை உரிமை மீறப்பட்டிருந்தால் அல்லது மீறப்படும் அபாயம் இருந்தால் மட்டுமே உயர் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும். அரச சார்பற்ற அல்லது அரசுடன் தொடர்பில்லாத நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய இயலாது.
2. நீதிமன்ற நடவடிக்கை யினால் அடிப்படை உரிமை மீறப்படுவதை நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கை யினால் மீறப்பட்டதாகக் கொள்ளலாகாது.
3. அடிப்படை உரிமை மீறப்பட்டு ஒரு மாத காலத்தில் அல்லது மீறப்படும் அபாயம் தெரியவந்த ஒரு மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்டவர் உயர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எனினும் ஒரு மாத காலத்திற்கு பிந்தி விண்ணப்பம் செய்வதற்கு நியாயமான காரணம் காட்டப்பட்டால் காலம் பிந்தியதை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும்.
4. அடிப்படை உரிமை மீறப்பட்டதாக அல்லது மீறப்படும் அபாயம் இருப்பதாக செயப்படும் மனுவில் பிரதிவாதியின் பெயர், விலாசம் என்பன சரியாக பிழையின்றி குறிப்பிடப்படல் வேண்டும். அத்துடன் எல்லா மனுக்களிலும் சட்ட மா அதிபரை ஒரு பிரதிவாதியாக குறிப்பிடப்படல் வேண்டும்.
5. அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு சத்திய கடதாசியினாலும் ஏனைய ஆவணங்களினாலும் எண்பிக்கப்படல் வேண்டும்.
6. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. அல்லது மீறப்படும் அபாயம் இருப்பதாக உயர் நீதிமன்றம் திருப்தியடையும் போது மனுதாருக்கு நட்ட ஈட்டை வழங்குமாறு அல்லது அடிப்படை உரிமை மீறலை தவிர்க்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கும்.
அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாகாண சிவில் மேன் முறையீட்டு நீதிமன்றங்கள் றிட் ஆணை பிறப்பித்து நிவாரணங்கள் வழங்க முடியும். அரசியலமைப்பில் 156 (1) உறுப்புரையின் படி நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஆணையாளர் (அல்லது ஒப்புட்சுமன்) அரசாங்க அதிகாரிகளினால் அல்லது அரச கூட்டுத்தாபனங்கள் மாகாண அல்லது அதற்கு இணையான நிறுவனங்களின் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நபரொருவரின் அடிப்படை உரிமை மீறப்படும் போது அல்லது அநீதி நடந்துள்ளதாக முறைப் பாடு செய்யப்படும் போது பாராளுமன்ற ஆணையினரால் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவை தவிர மனித உரிமை ஆணைக் குழு வானது அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக ஆராய்தல் அதுபற்றி அறிவூட்டல், தகவல்களை சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். இவைகள் தவிர அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நபரொருவர் பாராளுமன்ற பொது மனுக்குழுவுக்கு மனுவொன்றை சமர்ப்பித்து நிவாரணம் பெறமுடியும். ஆயினும் அவ்வாறான மனுவொன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் ஊடாகவே பாராளுமன்ற பொது மனுக்குழுவின் செயலாளர் ஊடாக சபாநாயருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முடிவுரை
எனவே அடிப்படை உரிமைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவை மீறப்பட்டுள்ளனவா என எம்மால் அறிய முடியும். அதன் மூலம் நிவாரணம் பெற முடியும். மற்றவர்களுக்கு உரிமை மீறல் பிரச்சினை நடைபெறும்போது ஆலோசனை வழங்கவும் முடியும். ஒவ்வொரு நாட்டு அரசியல் யாப்பில் உள்ளாக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் எமக்கான உரிமை. அவற்றை பாதுகாத்தல், அனுபவித்தல் என்பன நாம் அரசுக்கு கடமை புரிதல், விசுவாசமாக இருத்தல் என்பவற்றுடன் தொடர்புடையது.
உசாத்துணை நூல்கள்:
Wikipedia, Human rights, web: https://ta.m.wikipedia.org/wiki/.
Vikaspedia, மனித உரிமைகள் வகைகள் web: https://ta.vikaspedia.in/.
Vikaspedia, மனித உரிமை அறிமுகம், Web: https://ta.vikaspedia.in/e-governance/.
1972-இலங்கை அரசியல் யாப்பு, அடிப்படை உரிமைகள் அத்தியாயம்.
1978-இலங்கை இரண்டாம் குடியரசு யாப்பு, அடிப்படை உரிமைகள் அத்தியாயம்.
Web:https://www.parliament.lk/ta/constitution/1978-constitution
சிவம் விதுர்ஷன்
Special in political science(Reading)
பேராதனைப் பல்கலைக்கழகம்
அரசியல் விஞ்ஞானத்துறை
Comments
Post a Comment