நவீன அரசியல் கருத்தியல்களும் மதச்சார்பின்மை வாதமும்

நவீன அரசியல் கருத்தியல்கள்

இன்று உலகில் முக்கியம் பெறும் விடயமாக கருத்தியல்கள் உள்ளது. கருத்தியல் என்பது  "அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்"  என S.P.Huntington கூறுகிறார். 

ஆகவே சமூகத்தின் அரசியல் அறிவிற்கு, தனி நபர்கள் மற்றும் சமூக குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும், அரசியல் நிறுவனங்களின் தன்மை மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுதியே அரசியல் கருத்தியல்களாகும். அரசியல் கோட்பாடுகள் மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும்.

இந்தவகையில், மிகமுக்கியமான அரசியல் கருத்தியல்களாக 
1.தாராண்மை வாதம்
2.முதலாளித்துவம்
3.மார்க்சிஸம்.
4.பாஸிசம்
5. குடியரசு வாதம்
6.சமூக ஜனநாயக வாதம்
7.தேசிய வாதம்
8. மதசார்பின்மைவாதம்,
9. பெண்ணிய வாதம் போன்றவற்றை அடையாளப்படுத்தலாம். 

இதனால் கருத்தியல் அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றுதான் மதசார்பின்மை வாதம் ஆகும்.

மதசார்பின்மை வாதம் 


தோற்றம்:

இது 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற ஒரு கருத்தியலாகும். இது சமயமும் அரசியலும் ஒன்று கலக்காமல் இருப்பதுடன் இரண்டு துறைகளும் ஒன்றன் மீது ஒன்றின் அழுத்தம் இல்லாது சுயாதீனமாக செயற்பட வேண்டும் என வழியுறுத்துகின்றது.

ஐரோப்பிய மதசார்பின்மைவாதமானது மத்திய காலத்தின் இறுதி காலத்தில் பிரதான அங்கமாக அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட நிறுவன இணைப்பின்மீது அரசாட்சியின் காவலனாக திருச்சபை இருந்தமைக்கு எதிராக வளர்ச்சியுற்றதாகும்.

மதசார்பின்மை வாதம் தோற்றம் பெறுவதற்கான மற்றுமொரு காரணமாக ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்தில் தோன்றிய தர்க்க அறிவுக்கு முதலிடம் கொடுத்தமையை சுட்டிக் காட்ட முடியும். இது திருச்சபை முன்னெடுத்துச்சென்ற அஞ்ஞான ரீதியான ஆதிக்கத்திற்கு எதிரானதாகும். மறுமலர்ச்சி காலத்தில் தோன்றிய மதசார்பின்மைவாதம், பழைமைவாத தாராண்மைவாதத்தினதும், சமவுடைமை வாதத்தினதும் சிந்தனை ரீதியிலான மூலமாகும்.

தாராண்மை வாதம், மதச்சார்பின்மையில் தனியாள் சுதந்திரம், சிந்தனை மற்றும் மனசாட்சியை பின்பற்றும் சுதந்திரம் ஆகிய மூலத்தத்துவங்களை ஈர்த்துக் கொண்டதோடு சமவுடைமைவாதம் சமூக அழுத்தத்தின் நிறுவனமாக மத ஆதிபத்திற்கு எதிராக புரட்சி செய்தலை ஏற்றுக் கொண்டது.

இதன்படி 'திருச்சபையும் அரசையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்துவது' ஐரோப்பிய தாராண்மைவாத மற்றும் சமவுடைமைவாத சம்பிரதாயத்தினுள் தோற்றம் பெற்ற பிரதான அம்சமாகும்.

மதசார்பின்மையின் மூலம் மேற்கொள்ளப்படுவது அரசு மற்றும் சமயங்களுக்கிடையிலான தொடர்பு, அரச கொள்கை மற்றும் பிரஜைகளின் உரிமைகளை மதச்சார்பின்றி நிர்ணயிப்பதாகும். எனினும், அரசியலில் மதம் தொடர்புபடாதிருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. 

இன்று உலகில் மொத்தம் 96 மதச்சார்பற்ற நாடுகள் உள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா உலகிலேயே அதிக மதச்சார்பற்ற நாடுகளைக் கொண்டுள்ளன, முறையே 27 மற்றும் 33 மதச்சார்பற்ற நாடுகள் உள்ளன. ஆசியாவில் 20 மதச்சார்பற்ற நாடுகள் உள்ளன, தென் அமெரிக்காவில் ஏழு மதச்சார்பற்ற நாடுகள் உள்ளன. வட அமெரிக்காவில் 5 மட்டுமே உள்ளன.


இருப்பினும், பல மதச்சார்பற்ற நாடுகளில் மதசார்பின்மை வாதம் காணப்பட்டாலும் அங்கு அரசியலுடன் மதம் கலந்து இருக்கும் போக்குகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இங்கிலாந்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதச்சார்பற்ற நாடு, ஆனால் அதன் அரசியலமைப்பில் முடிசூட்டு விழாவில் இங்கிலாந்து திருச்சபையைப் பாதுகாக்க அரச தலைவர் சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மதசார்பின்மை வாதம் 1975 ஆம் ஆண்டு இந்திய அரசியல் யாப்பில் உருவாக்கப்பட்டது.

மதசார்பின்மைவாதம் இன்றைய உலக அரசியலில் பின்வரும் இரண்டு அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

1. ஒன்று சமய அடிப்படைவாதத்தை துணையாகக் கொண்ட மதம்சார் அரசுகள்  தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படல்.

2.இரண்டாவது பன்மைக் கலாசாரவாதத்தினை மையப்படுத்திய சமய அடையாளங்களை உடைய சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.


தொகுப்பு
S. Vithurshan, 
Special in political science(R)
Peradeniya University 

Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்