அடிப்படை உரிமைகளும், இலங்கையிலுள்ள ஏற்பாடுகளும்
அனைவருக்கும் தேவையான விடயம் மனித உரிமை எண்ணக்கரு. அநீதியை எதிர்த்து நீதியை நிலை நாட்ட உரிமை மீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும். அந்தவகையில் இலங்கையில் ஒம்புட்ஸ்மன் முறைமை பற்றிய தெளிவினை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அறிமுகம்
இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கங்களிடம் உள்ளது. இதனால் சிவில் சேவை அமைப்பு விஸ்தரிக்கப்பட்டதுடன்,அதன் வேலைப்பழுவும் அதிகரித்தது. சிவில் சேவை அமைப்பில் ஏற்பட்ட விஸ்தரிப்பினால் சிவில் சேவையாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டது. அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்தி, மக்களுக்குத் தூய்மையான சேவையை வழங்குவதற்குப் புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் தேவைப்பட்டன. தூய்மையற்ற நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு செய்யக்கூடிய ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. இதுவே பின்னர் ஒம்புட்ஸ்மன் என அழைக்கப்பட்டது.
ஒம்புட்ஸ்மன் என்ற பொறுப்பு வழங்கப்பட்ட நபர், பல்வேறுபட்ட நிறுவனங்களிலிருந்து வரும் முறைப்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பவராக இருப்பார். பல்கலைக்கழகங்கள் வைத்தியசாலைகள் சிறைச்சாலைகள் போன்ற பல நிறுவனங்களின் முறைப்பாடுகளை ஒம்புட்ஸ்மனுக்கு வழங்க முடியும். உண்மையான ஒம்புட்ஸ்மன், முறையான, திறனுடைய செயற்பாட்டைக் கொண்டிருப்பார். சட்டசபையின் ஒரு பகுதியாக அல்லது அரசியல் யாப்பின் ஒரு பகுதியாகச் செயற்படமாட்டார்.
பொது நிர்வாகம் மீதான மக்களின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், பொது நிர்வாகத்தைப் புலன் விசாரணை செய்யவும், விமர்சிக்கவும், தனது கருத்துக்களை வெளியிடவும் இவருக்கு அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்புட்ஸ்மன் முறைப்பாடுகளைத், தபால் மூலம், தொலைபேசி மூலம் – சில நேரம் நேரடியாகவும் – பெற்றுக் கொள்ள முடியும். முறைப்பாடுகள் கிடைத்தவுடன் தொடர்புடைய நிறுவனம் அல்லது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதுடன், மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் புலன் விசாரணைகளையும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு பெற்றுக் கொள்ளும் முறைப்பாடுகளை ஆரம்ப நிலையில் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வார்கள். இதன் மூலம் நிர்வாகச் செயற்பாட்டில் காணப்படும் தவறான செயற்பாடுகளைக் கண்டறிய முயற்சிப்பார்கள். தேவைப்படும் பட்சத்தில் முறைப்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனம் அல்லது அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தருவதன் மூலம் அத்தவறுகளைக் கண்டறிந்து திருத்துவதற்கு முயற்சிப்பார்கள்.
உலக நாடுகளில் ஒம்புட்ஸ்மன் முறைமை கட்டமைப்பு
உலக அரசியல் வரலாற்றில் ”ஒம்புட்ஸ்மன்” (குறைகேள் அதிகாரி) எனப்படும் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் என்ற பதவி சுவிச்சர்லாந்து நாட்டில் 1809ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பின்லாந்தில் 1819ம் ஆண்டிலும், டென்மார்க்கில் 1954ம் ஆண்டிலும், நியுசிலாந்தில் 1962ம் ஆண்டிலும், இங்கிலாந்தில் 1967ம் ஆண்டிலும் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இம் ஒம்புட்ஸ்மன் முறைமை பல நாடுகளில் வெவ்வேறு விதமாக காணப்படுகிறது. அவையாவன:
1.பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன்
2.வர்த்தக ஒம்புட்ஸ்மன்
3.நுகர்வோர் ஓம்புட்ஸ்மன்
4.வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுக்கான ஓம்புட்ஸ்மன்
5.சம சந்தர்ப்பத்துக்கான ஓம்புட்ஸ்மன்
6.பாகுபாட்டுக்கு எதிரான, சமத்துவ ஓம்புட்ஸ்மன்
7. பொது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன்
8.சிறுவர்களுக்கான ஓம்புட்ஸ்மன்
9.நுகர்வோர் ஓம்புட்ஸ்மன் என்பனவாகும்.
இன்று ஐக்கிய இராச்சியத்தில் ஒம்புட்ஸ்மன் முறை அபிவிருத்தியடைந்து விரிவாக்கம் பெற்றுள்ளது. சில துறைகளுக்குத் தனியான ஒம்புட்ஸ்மன் முறை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு
1.நிலவுடமை சமூகத்திற்கான ஓம்புட்ஸ்மன் (Estate Agents Ombudsman)
2.நிதி ஓம்புட்ஸ்மன் சேவை
3.சுகாதார சேவை ஓம்புட்ஸ்மன்
4.வீடமைப்பு ஓம்புட்ஸ்மன்
5.சுதந்திர பொலிஸ் முறைப்பாட்டு ஓம்புட்ஸ்மன்
6.சட்ட சேவை ஓம்புட்ஸ்மன்
7.உள்ளூராட்சி அரசாங்க ஓம்புட்ஸ்மன்
8.வட அயர்லாந்து ஓம்புட்ஸ்மன்
9.வட அயர்லாந்து பொலிஸ் ஓம்புட்ஸ்மன்
10.பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன்
11.ஓய்வூதிய ஓம்புட்ஸ்மன்
12.சிறைச்சாலை நன்னடத்தை ஓம்புட்ஸ்மன்
13.பொதுச் சேவை ஓம்புட்ஸ்மன்
14.ஸ்கொட்லாந்து சட்டச் சேவை ஓம்புட்ஸ்மன்
15.ஸ்கொட்லாந்து பொதுச் சேவை ஓம்புட்ஸ்மன்
16.தொலைத் தொடர்பு ஓம்புட்ஸ்மன் என்றவாறு காணப்படுகிறது.
இலங்கையில் ஒம்புட்ஸ்மன்
இலங்கையில் ஒம்புட்ஸ்மன் முறைமையை உரிமை மீறல்கள் கவனிக்க 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் உருவாக்கினார்கள். 1978ஆம் ஆண்டு ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பின் அத்தியாயம் 19, சரத்து 156 நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஓம்புட்ஸ்மன்) தொடர்பாகக் கூறுகின்றது. இவர் அரசியல் யாப்புப் பேரவையின் ஆலோசனையுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.
அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், ஏனைய அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகள் இழைக்கும் அநீதி தொடர்பான முறைப்பாடுகள் மற்றும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வார்.
1981ஆம் ஆண்டு 17ஆம் இலக்கச் சட்டம் மக்கள் நேரடியாக ஒம்புட்ஸ்மனுடன் தொடர்பு கொள்வதைத் தடுத்திருந்தது. இச் சட்டம் பொது மக்கள் விண்ணப்பக் குழு ஒன்றை உருவாக்கியது. பொது மக்கள் தமது பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களூடாக விண்ணப்பக் குழுவுக்கு முறைப்பாடுகளை அனுப்பலாம். இக் குழு தீர்மானித்தால் மட்டுமே முறைப்பாடுகள் ஒம்புட்ஸ்மனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒம்புட்ஸ்மன் விசாரணையின் முடிவுகளைப் பொது மக்கள் விண்ணப்பக் குழுவுக்கு அனுப்பிவைப்பார்.
1994ஆம் ஆண்டு 26 ஆம் இலக்கச் சட்டம் இம் முறையை மாற்றியமைத்தது. இச் சட்டத்தின்படி பொது மக்கள் நேரடியாக ஒம்புட்ஸ்மனுடன் தொடர்பு கொண்டு எழுத்து மூலமான முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.
156வது உறுப்புரை 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. அரசாங்க அலுவலர்கள், பகிரங்கக் கூட்டுத்தாபன அலுவலர்கள், உள்ளூர் அதிகாரசபை அலுவலர்கள், அதையொத்த வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்றும், அநீதிகளை இழைத்துவிட்டார்கள் என்றும் கூறுகின்ற முறைப்பாடுகள் அல்லது சார்த்தல்கள் பற்றி அத்தகைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கவும் அவற்றுக்கமைவாகவும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பொறுப்பாகவுள்ளவரான நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) என்ற பதவியைத் தாபிப்பதற்காகச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் சனாதிபதியினால் நியமிக்கப்படல் வேண்டும் என்பதுடன், நன்னடத்தை உடையவராயிருக்கும் காலத்தின்போது அவர் பதவி வகித்தலும் வேண்டும். அவரின் சம்பளம் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும். அதேநேரத்தில் பதவிக்காலத்தில் அவரின் சம்பளம் குறைக்கப்படவும் மாட்டாது.
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரினது பதவி வறிதாதல் சம்பந்தமாக 4ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
அ. அவர் இறப்பதன் மேல்.
ஆ. இராஜினாமாச் செய்வதன் மேல்.
இ. சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் வயதை அடைவதன் மேல்.
ஈ. சுகவீனம் அல்லது உடல்பலவீனம், மனப்பலவீனம் காரணமாக ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்வதன் மேல்.
உ. அவரைப் பதிவிலிருந்து அகற்றுமாறு கூறும் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மீது ஜனாதிபதியினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம்.
பாராளுமன்றத்தின் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மூலம் ஒம்புட்ஸ்மனின் செயற்பாடுகள், அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1.ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் பாராளுமன்ற முறைப்பாட்டுக் குழுவாலேயே சமர்ப்பிக்கப்படும்.
2.ஆகவே முறைப்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாகவே அனுப்பப்படுதல் வேண்டும்.
3.குறித்த முறைப்பாட்டை ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிப்பதா? இல்லையா? என தீர்மானிப்பது பாராளுமன்ற முறைப்பாட்டுக் குழுவேயாகும்.
4.ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாட்டை (தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கிணங்க) விசாரணை செய்து அறிக்கையை சபாநாயகருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
முடிவுரை
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் பொது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன் மத்திய அரசாங்கம்,உள்ளூர் அதிகார சபைகள் போன்றவற்றின் தவறான நிர்வாகம் அல்லது நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பாகச் சுயமாக அல்லது பிரஜைகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகளைப் புலன் விசாரணை செய்யும்.பிரஜைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நோக்கில் எமது அரசியலமைப்பில் ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்ட போதிலும் நடைமுறையை நோக்குமிடத்து உரிய விசாரணையை ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கக் கையாளும் வழிமுறையானது சிக்கல்மிக்கது என்பதுடன், அரசியலமைப்பு ரீதியாகவும் பாராளுமன்ற சட்டமூலத்தின் மூலமாகவும் ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைவானதாக இருப்பது குறைபாடாகும்.
உசாத்துணை நூல்கள்:
Wikipedia, ஒம்புட்ஸ்மன், web: https://ta.m.wikipedia.org/wiki.
வரலாறு & கடந்தகால ஒம்புட்ஸ்மன்
அலுவலகத்தின் ஆரம்பமும் விரிவாக்கமும்,
Web:http://www.ombudsman.gov.lk/index.php/history-past-ombudsmen/?lang=ti.
Srilankan Parliament, Web: https://www.parliament.lk/ta/component/organisation/sect/sections?depart=14&id=32&Itemid=107.
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் (ஒம்புட்சுமான்) பங்கும் குறைதீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும், web: http://www.ombudsman.gov.lk/index.php/about-us-1/?lang=ti.
தொகுப்பு:சி. விதுர்ஷன்
Special in political science(Reading).
பேராதனைப் பல்கலைக்கழகம்.
அரசியல் விஞ்ஞானத்துறை

Comments
Post a Comment