சமஷ்டி அரசியலமைப்பு மாதிரி


அறிமுகம்:

ஒரு நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, பன்மைத்துவ இயல்பைப் பேணி, இன நல்லுறவையும் அமைதியையும் உறுதி செய்ய தெளிவான ஓர் அரசியலமைப்பு இன்றியமையாதது. சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்தி, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக, பொருளாதார, அபிவிருத்தியை ஒரு நாடு எட்ட வேண்டுமாயின், அதற்குச் சிறந்த முன்மாதிரியானதோர் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய  தேச அரசுகள் (Nation States) அனைத்திலும் போல் தெளிவான அரசியல் சாசனம் நடைமுறையில் உள்ளது. இனம், மதம், மொழி, சாதி என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்காத பொருளாதாரக் கொள்கையைத் தெளிவாக வரையறை செய்யாத அரசியலமைப்பே மிகச் சிறந்தது என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். யாப்புக்கள் பல வகையிலும் காணப்படுகிறது.

எனினும் அரசியல் யாப்பில் இறைமை அதிகாரத்தை பரவலாக்குவதன்/பகிர்வதன் மூலம் அரசியல் யாப்பை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.சமஷ்டி அரசியலமைப்பு.
2.ஒற்றையாட்சி அரசியலமைப்பு
3. கூட்டாண்மை அரசியலமைப்பு
4. பாதி அரசியலமைப்பு

இவ்வாறான வகையில் இன்று இறைமையை பகிர்வதனை அடிப்படையாக கொண்டு யாப்புக்கள் வகைப்படுத்தப்படுகிறது.

சமஷ்டி/கூட்டரசு அரசியலமைப்பு மாதிரி: (Federalism). 

தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே சமஷ்டி ஆட்சி முறை ஆகும். இந்த சமஷ்டியில் ஒவ்வொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி பாதுகாக்கப்படும்.

சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்பதைக் குறிக்கும் Federalism எனும் சொல்லானது, Feodus எனும் லத்தீன் வேர் சொல்லிலிருந்து தோன்றியதாகும். Feodus என்பது நட்புத் தேசங்க ளுக்கு இடையிலான ஒப்பந்தம் எனும் கருத்தைத் தருகின்றது. சமஷ்டி ஆட்சி முறையானது ரோம ஹெலனிய காலம் முதல் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் முறையாகும்.

சமஷ்டி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-
  1. பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே கூட்டரசு ஆகும்.-ஆமில்டன்
  2. நாட்டு ஒற்றுமையையும் அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும்.-பேராசிரியர் டைசி
  3. தேசிய நோக்கிலும் உட்பகுதிகளின் நோக்கிலும் அதிகாரங்களை பங்கீடு செய்து கூட்டரசில் இணைந்த ஒவ்வொரு அலகும் ஈடான (சமமான) முறையில் தொடர்புகளையும் பேணிக்கொள்கின்ற அதேவேளை விடுபாட்டுணர்வோடும் (சுதந்திரமாகவும்) தமது எல்லைக்குள் செயற்படும் ஓர் அரசுமுறை- கே.சி வெயர்
  4. நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உள் உறுப்புக்களுக்கும் நடுவண் அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு கூட்டரசு எனப்படும்.-சே.டபிள்யூ. கானர்.

ஆகவே கூட்டரசு என்பது நடுவ அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய மாநில அரசுகளும் பிற ஆட்சிப்பகுதிகளும் தமது தன்னுரிமையையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (அதிகாரப்பங்கீடு) ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது சமஷ்டி  ஆட்சிமுறை எனப்படும்

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மூன்று பிராந்தியங்கள் இணைந்து சுவிட்சர்லாந்தில் கூட்டாட்சியை ஏற்படுத்தின. ஒஸ்ரியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இணைந்த மூன்று மலைப் பிராந்தியங்களே இவை. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 13 மாநிலங்கள் இணைந்து ஐக்கிய அமெரிக்காவாகவும், 14 ஆம் நூற்றாண்டில் கனேடிய கூட்டாட்சியும் உருவாகியது.

இன்று சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பெல்ஜியம், ஆர்ஜென்டினா, தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் சமஷ்டி ஆட்சி முறை நிலவுகின்றது.

இந்நாடுகளின் அரசியலமைப்பு கூட்டாட்சி அரசியல் சாசனம் (Federal Constitution) என அழைக்கப்படுகின்றது. ஒரு நிலப்பரப்பினுள் அருகருகே வாழ்கின்ற தன்னாட்சியுள்ள பல பிராந்திய மக்கள் தங்களின் பொது நலன் கருதி ஒன்றாக இணைந்து உருவாக்கும் கூட்டாட்சியே சமஷ்டி எனப்படுகின்றது.

இங்கு தன்னாட்சிப் பிராந்தியங்கள், பல பிராந்திய அரசுகளை அல்லது அதையொத்த அலகுகளைக் குறிப்பதாக இருக்கும். கூட்டாட்சி அமைப்பில் ஒரு மத்திய அரசும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தன்னாட்சியுள்ள பிராந்தியங்களும் இருக்கும். அதிகாரத்தைப் பங்கிடுதல் என்பது இதன் அடிப்படைப் பண்பாகும். மத்திய அரசாங்கத்தின் நிதி, பாதுகாப்பு, கல்வி, காணி, சுகாதாரம் போன்ற முக்கிய அதிகாரங்களை பிராந்தியங்களுக்குப் பகிர்தல் இங்கு நடைபெறும்.

பிராந்திய சுயாட்சியை அல்லது இனத்துவ சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டு புவியியல் பிராந்திய அலகுகளுக்கு (Territorial units) அல்லது இனக் குழும அலகுகளுக்கு (Segmental units) மத்திய அரசு அதிகாரங்களை யாப்பு உத்தரவாதத்தின் மூலம் பகிர்வதையே சமஷ்டி எனலாம். இங்கு சமஷ்டியின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு அதிகாரத்தையும் மத்திய அரசினால் மீளப் பெற முடியாது.

ஏனெனில், அரசியலமைப்பின் மூலம் நடைபெறும் அதிகாரப் பகிர்வை இறைமைப் பங்கீடு (Sovereign) என்றே அரசியலமைப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

உண்மையில் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கோ, இன உறவுகளை முரண்பாடுகள் இல்லாமல் நிர்வகிப்பதற்கோ உருவாக்கப்பட்ட கட்டமைப்பல்ல சமஷ்டி. ஆனால், ஒரு பன்மைப் பாங்கான நாட்டில் இன உறவுகளை வலுப்படுத்தவும் சமாதான சகவாழ்வை உறுதி செய்யவும் சமஷ்டி ஆட்சி முறை பயன்பட்டுள்ளது என்பதற்கு சமீபத்திய உலக அரசியல் அனுபவங்கள் உதாரணமாக உள்ளன.

சமஷ்டி அரசியலமைப்பு உருவாவதற்கான காரணங்கள்:
  • ஒரே அரசாக ஒன்றுபடுவதற்கான தேவை 
  • பெரிய நிலப்பரப்புகள் உள்ள அரசுகள் காணப்படல் 
  • கலாச்சாரம் மற்றும் இன பன்மைத்துவம் நிலவுதல் 
  • பிரிந்த நாடு ஒன்றிணைதல் 
  • ஒற்றையாட்சி அரசொன்று பல்வகைத்தன்மையின் அடிப்படையில் சமஷ்டி அரசாக மீள் கட்டமைக்கப்படல். 

சமஷ்டி அரசியலமைப்பு உருவாவதற்கான துணைக்காரணங்கள்:
  • அந்நிய நாடு ஆக்கிரமிப்பு 
  • பொருளாதார நன்மை 
  • சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு 
  • நாட்டின் பொதுவான பாதுகாப்பு போன்ற துணைக்காரணங்களுக்கு சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்று உருவாகலாம். 

சமஷ்டி அரசியல் யாப்பு உருவாக்கபடும் மூன்று வழிமுறைகள் உள்ளன. அவை,
  • பொது அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு முன்னர் பிரிந்து காணப்பட்ட அலகுகள் ஒன்று சேர்ந்து மத்திய அதிகார முறை ஒன்றை உருவாக்கி கொள்ளல் - உதாரணம்- 
  1. அமெரிக்கா-1787
  2. சுவிஸ்லாந்து- 1848
  3. கனடா- 1867
  • ஒற்றையாட்சி அரசு ஒன்று இனத்துவ மற்றும் கலாச்சார பல்வகைமை தன்மையின் அடிப்படையில் சமஷ்டி அரசாக மீள கட்டமைக்கப்படல். உதாரணமாக, ஸ்பெயின், மலேசியா, தென்னாபிரிக்கா.
  • பிரிந்த நாடு ஒன்று ஒன்றிணைந்து சமஷ்டி ஆட்சி முறை ஒன்றாக மீள கட்டமைக்கப்படல். 

சமஷ்டி ஆட்சி முறையின் பிரதான பண்புகள்:

அந்த வகையில், சமஷ்டி ஆட்சி முறையின் பிரதான பண்புகளை பின்வருமாறு விபரிக்கலாம்.
  • தேசங்களின் தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாக்கக் கூடிய வகையில் அவை சமத்துவமாக இணைக்கப்படல் வேண்டும்.
  • தேசங்களுக்கு இடையில் பொதுவாக இருக்கும் விடயங்களே மத்திய அரசின் அதிகாரங்களாக இருத்தல் வெண்டும். இவை தேசங்களின் பொது விருப்பாக இருக்கும்.
  • மத்திய அரசு தேசங்களின் கூட்டாக இருத்தல் வேண்டும்.

சமஷ்டி அமைப்பு முறையொன்றின் இன்றியமையா அம்சங்கள்
  • எழுத்திலான அரசியல் சாசனம் அமைதலும் மத்திய பிராந்திய அரசுகளுக்கிடையே அதிகாரங்கள் பங்கிடப்பட்டிருத்தலும் வேண்டும். இந்த அதிகாரங்கள் மூன்று பட்டியல் மூலமாக பிரித்து வழங்கப்படுகிறது. அவை:
  1. மத்திய அரசு பட்டியல் 
  2. மாநில அரசு பட்டியல் 
  3. பொதுப் பட்டியல் என்பனவாகும். 
  • மத்தியாட்சியில் இரண்டு சபைகள் (கீழ் சபை, மேல் சபை) இருத்தல் வேண்டும்.
  • சுதந்திரமானதும் எல்லா மக்கள் பிரிவினதும் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான   நீதித் துறை மத்திய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும்.
  • அரசியல் சாசனத்தைத் திருத்துதல், பிராந்திய அரசாங்கங்களின் சம்மதமின்றி ஒருபோதும் நடைபெற முடியாது.
  • மத்திய, பிராந்திய அரசுகள் அரசியல் சாசனத்தினால் குறிப்பிடப்படும் அதிகார வரம்புகளை மீறுதல் கூடாது.
  • சமஷ்டி அமைப்பொன்றை உருவாக்குதல் ஒரு நாட்டின் அரசியல் முதிர்ச்சியிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. 
  • மக்களின் விருப்பைப் பிரதிபலிக்கும் வகையில் சமஷ்டி முறையில் அதிகாரம் பகிரப்பட்டிருக்கும். இந்த வகையில் முன்னேற்றமான அம்சங்களை கொண்டுள்ள சமஷ்டி முறைகளாக சுவீஸ், கனடா, அமெரிக்கா என்பவற்றின் சமஷ்டி முறைகளும் அரசியல் சாசனங்களும் உள்ளன. 
  • தேசங்களின் தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாப்பது சமஷ்டியின் அடிப்படைப் பண்புகளாகும்.
  • தேசங்களின் தனித்துவம் என்ற வகையில் அவற்றின் தனித்துவமான அடையாளங்கள் சிதையாமல், அவற்றின் தனித்துவமான பிரச்சினை களுக்கு தகுந்த தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளும் உத்தரவாதங்களும் அரசியலமைப்பில் உள்ளடங்க வேண்டும்.
  • சுயநிர்ணய உரிமை என்ற வகையில் தேசங்கள் தமது அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கக் கூடிய வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
  • தேசம் சார்ந்த விவகாரங்களில் பூரண அதிகாரம் கொண்டதாகவும், தேசத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான உரிமை கொண்டதாகவும் வெளித் தலையீடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தரவாதம் கொண்டதாகவும் சமஷ்டி அரசியல் சாசனம் வரையப்பட வேண்டும்.
  • அரசியல் சாசனத்தைத் திருத்துதல், மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடக் கூடிய சந்தர்ப்பங்கள், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை, நீதித்துறை வகிக்கும் பங்கு, பிராந்திய அரசாங்கங்களின் கீழுள்ள சமூகங்களின் தனித்துவங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள், வெளிநாட்டு விவகாரங்களில் உள்ள நடைமுறைகள் என்பவை ஒவ்வொரு நாட்டின் சமஷ்டி முறைகளுக்கு ஏற்ப வேறுபடுவதைக் காணலாம்.

இன்று உலகிலேயே நிதி, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் உள்ளிட்ட உச்சளவு அதிகாரங்களைப் பகிர்ந்துள்ள சமஷ்டி முறைக்கு சுவிஸ் உதாரணமாகும்.

ஒரு வெற்றிகரமான சமஸ்டிக்கு தேவையான நிபந்தனைகள்:
  • எழுதப்பட்ட நெகிழா மேன்மை மிக்க அரசியல் யாப்பு 
  • செம்மையான முறையில் அதிகார பங்கீடு 
  • பக்கம் சாராத அதியுயர் அதிகாரத்தை கொண்ட நீதித்துறை 
  • சமஷ்டியில் இணைந்து கொண்ட அரசுகள் சமமானவையாக காணப்படல் .
  • தேசிய ரீதியில் அரசியல் கட்சிகள் வளர்ச்சி அடைந்து இருத்தல்.
  • சமஷ்டி அரசுகள் புவியியல் ரீதியாக அண்மித்தவையாக இருத்தல் என்பவற்றை குறிப்பிடலாம். 

A.V. டைசி சமஷ்டி இருப்பதற்கு இரு நிபந்தனை அவசியம் என்கிறார். அவை,
  1. ஒற்றுமை இன்றி இருக்கும் சமூகம் ஒன்றுபட நாட்டு மக்கள் இடையில் உள்ள விருப்பம்.
  2. புவியியல், வரலாறு, இனம் அடிப்படையில் நாட்டு மக்கள் இடையில் நாம் எல்லாம் ஒரே இனம் என்ற மனப்பான்மை.

சஷ்டியின் நன்மைகள்
  • பன்முகப்படுத்தப்பட்ட, பிரதேச அடிப்படையிலான வழிமுறைகளில் ஒரு நாட்டின் அபிவிருத்தியை சமஷ்டி ஆட்சிமுறை ஊக்குவிக்கின்றது.
  • சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கெனத் தனித்துவமான, புதுமையான வழிமுறைகளைக் கையாள்வதற்கு சமஷ்டிஆட்சிமுறை அனுமதிக்கின்றது.
  • பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குச் சமஷ்டி தடைபோடுகின்றது.
  • மக்களுக்கு மிக நெருக்கமாக அங்கத்துவ அரசு இருப்பதை சமஷ்டி உறுதி செய்கின்றது.
  • பொதுவான இராணுவப் பாதுகாப்பை ஏற்படுத்தி, அச்சமின்றி மக்கள் வாழ இது உதவுகின்றது.
  • அந்நிய ஆதிக்கத்திலிருக்க விரும்பாமல் சுதந்திரமாக இருப்பதற்கும், அதன் பொருட்டு சிறிய அரசுகள் அல்லது சமூகங்கள் விரும்பி ஒன்றுபடுவதற்கும் இது உதவுகின்றது.
  • மொழி, இனம், மதம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமைப்பாடு உடைய சமூகங்கள் சமஷ்டி ஆட்சியில் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் இது உதவுகின்றது.

சமஷ்டியின் தீமைகள்
  • ஒரு நாட்டிற்கான பொதுக் கொள்கைகளின் பிரதான பகுதிகள் சிலவற்றை அலட்சியம் செய்துவிடுவதற்கு சமஷ்டி சில சமயங்களில் வழிவகுத்துவிடுகின்றது.
  • ஒருமுக ஆட்சியை உருவாக்க முடியாது. 
  • ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறுபட்ட முரணான கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கும் சமஷ்டி காரணமாக அமைந்துவிடுகின்றது.
  • மாநிலங்களிடையே சமத்துவம் இல்லாமை ஏற்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற போட்டிகளும் பொறாமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
  • ஒரு மத்திய அரசு, பல அங்கத்துவ அரசுகள், ஏராளமான உள்ளூர் ஆட்சி சபைகள் ஆகியவற்றை சமஷ்டி முறை ஏற்படுத்துவதனால் அதிக பண விரயம் ஏற்பட இடமுண்டு.
  • பலவித வரிச்சுமைகளை மக்கள் சுமக்கவேண்டி ஏற்படுகின்றது.
  • பல அதிகாரங்களுக்கு மக்கள் அடிபணிய வேண்டியிருக்கின்றது.
  • சமஷ்டி யாப்பு நெகிழா தன்மை கொண்டதால் மாற்றங்களை காலத்துக்கு ஏற்ப உருவாக்க முடியாமை.

சமஷ்டி முறைமையின் அண்மைக்கால போக்குகள்:
  • மத்திய அரசாங்கத்த்தின் அதிகாரங்கள் துரிதமாக அதிகரித்து வருதல்.
  • மாநிலங்கள் தனி அரசுகளாக பிரிந்து செல்லும் போக்குகளும் அதற்கான ஆர்ப்பாட்டங்களும்.
  • ஒரு மாநில அரசுக்குள் இருக்கும் சிறிய இனங்கள் கூட தங்களுக்கு என தனி மாநில அரசு தேவை எனப் போராட்டம் நடத்துதல் .
  • நாடுகள் தங்களுக்கு என ஒரு பொதுக் கூட்டணியை அமைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 
முடிவுரை:

ஜனநாயகம், மனித உரிமை என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து உறுதிசெய்து கொள்வதற்குச் சமஷ்டி ஒரு நல்ல கருவி என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்த சமஷ்டி அமைப்பின் உறுதியானது முன்னர் கூறப்பட்ட பல அம்சங்களுடன் அரசியல் அமைப்புச் சட்டம், நிதி ஏற்பாடுகள், கட்சி அமைப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களிலும் தங்கியிருக்கின்றது. மேலும் அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் இறைமை பிரிக்கப்பட முடியாதது எனக் கருதப்படுகின்ற போதிலும், சமஷ்டி அமைப்பு ஒன்றில் அது பிளவுபட்டிருக்கின்றது என்பதுவே உண்மையாகும். இந்த யாதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, மாநில அடிப்படையில் இறைமையின் உண்மையான செயற்படுதன்மையை அங்கீகரிப்பதே சமஷ்டியின் உறுதி நிலைக்கு உத்தரவாதமளிக்கும். குறிப்பாக இன, மத, மொழி அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ள மாநிலங்களைக் கொண்ட சமஷ்டிக்கு இது மிகமிக இன்றியமையாததாகும். எனவே பல்லின சமூகம் வாழும் நாட்டில் சமஷ்டி சிறப்பாக இயங்கும் போதே அங்கு மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டு, அவர்கள் சுயநிர்ணய உரிமையை பெற்று வாழ்வார்கள். இதனால் முரண்பாடு என்பது தவிர்க்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.





தொகுப்பு:

Sivam vithurshan,
Special in political science(Reading),
University of Peradeniya.







உசாத்துணை நூல்கள்:

யோதிலிங்கம்.சி.அ. (2006), அரசறிவியல் ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம். p-156-163

சர்ஜூன்.ஏ, (2011), "சமகால அரசறிவியல் எண்ணக்கருக்கள்", இஸ்லாமிக் புக் கவுஸ். 
சிவராஜா. அ,  (2006), அரசறிவியல் மூல தத்துவங்கள், குமரன் புத்தக இல்லம்.

K.C. Wheare, Federal Government, (London Oxford University Press, 1963).

Carl J. Friedrich, Constitution and Constitutionalism in International Encycopedia of the Social Sciences, ed, by Daul Gills (U.S.A: Macmillan Company and the Free Press, Vol -3, 1969).

Mark O.dickerson & Thomas Flanrson, An Introduction to Government and Politics, (Toranto: Methven Publications, 1986).

சமஷ்டி ஆட்சி தொடர்பாக மேலதிக விளக்கம் பெற எனது "youtube" இற்கு சென்று காணொளியாக பார்வையிடுங்கள். 

click the youtube link:

Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்