அரசியல் கலாச்சார ஒழுக்கம்- ஒரு யதார்த்த நோக்கு.


அரசியல் கலாச்சார ஒழுக்கம்- ஒரு யதார்த்த நோக்கு.

Political Cultural Morality- A Realistic Perspective



அறிமுகம்

இன்றைய உலகில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்கும் கருத்தாடல்களில் அரசியல் கலாசார ஒழுக்கம் உள்ளது. அரசியல் கலாசாரம் ஒழுக்க ரீதியில் காணப்பட வேண்டும் என்ற வாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அவை இன்று காலனித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கை உட்பட 3ஆம் உலக நாடுகளில் எவ்வாறு உள்ளது என கண்டறிவதே நோக்கம் ஆகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு எவ்வாறான மாற்றங்கள் மூலம் இலங்கையில்  ஓர் சிறந்த அரசியல் கலாசார ஒழுக்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசியலை உருவாக்கலாம் என்ற ஆய்வாக இக் கட்டுரை அமைந்துள்ளது.

அரசியல் கலாச்சாரம் என்றால் என்ன?

அரசியல் கலாச்சாரம் என்பது அரசியல் ரீதியில் ஒழுங்கமைந்த மானிட சமூகத்தில் அரசியல் பிராணிகள் என்ற வகையில் மக்களின் அரசியல் நடத்தை ஊடாக வெளிப்படும் அரசியல் விழுமியங்களே அரசியல் கலாசாரம் எனலாம்.  அதாவது ஒரு நாட்டின் அரசாங்க முறை மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றி மக்களிடம் உள்ள புரிந்துணர்வும் , அதனை வெளிப்படுத்தும் காரணிகளின் இணைப்புமே அரசியல் கலாசாரம் என்று இலகுவாக கூறலாம்.  ஒரு நாட்டில் அரசியல் கலாசாரம் மூன்று விதங்களில் காணப்படலாம்.
  1. குறுகிய அரசியல் கலாசாரம்
  2. அடிபணிதல் அரசியல் கலாசாரம்.
  3. பங்குபற்றல் அரசியல் கலாசாரம். 

இவ்வாறு பல விதம் இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் பங்குபற்றல் அரசியல் கலாசாரம் இருந்தால் அந்த நாடு அரசியல் கலாசாரம் மற்றும் ஒழுக்கம் வாய்ந்த அரசியலால் நிரம்பும் வாய்ப்பு அதிகமாக காணப்படும். இங்கு தீர்மானம் எடுக்கவும், அதனை நடைமுறை செய்யவும் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறான கலாசாரம் உருவாகும்போதே அங்கு ஒழுக்கம் என்பது அரசியலில் பேணப்படும்.

அரசியல் ஒழுக்கம் என்றால் என்ன?

மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவன் நடாத்தும் நல்லாட்சியே அரசியல். எமக்கு கிடைக்கும் வாய்ப்பில் தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளவும், நமையாளவும் செயல் கோர்க்கும் கொள்கை அரசியல் நாமுயரவும், நம் நிலையுயரவும் வழி செய்ய வேண்டும். சிறந்த அரசியலில் சீர்பெறுவது நல் ஒழுக்கங்களே. ஆனால் இன்று அரசியல் அறவழியில் இருந்து அகன்று பேரம் பேசும் அரசியலாய் மாற தேர்தல் கலாசாரமும் சீர்கெட்டு போனதுமே மிச்சம்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று”.
இது அரசு துறந்த புலவன் அன்று கூறிய கூற்று.
அரசியல் பிளைப்பாளர் அதெல்லாம் நேற்று வீசிய காற்று,
ஏட்டில் எழுதிய வெறும் பாட்டு என்பார்கள் இன்று என எள்ளி நகையாடுகின்றனர் இன்று.

அரசியல் என்பதை இன்று மக்கள் வெறும் சாக்கடையாய் எண்ணுவதும் அரசியலில் கொண்ட வெறுப்பின் காரணமே. மக்களின் எதிர்பார்ப்புகளும் இன்று கேள்விக்குறியாக மாற்றுகின்றது அரசியல். இதற்கு தேவை சிறந்த அரசியல் தலைமைத்துவம்.  இவ் தலைமைத்துவம் மூலமே சமூதாயம் மாற்றம் அடையப்பட வேண்டும்.

சிறந்த அரசியல் தலைமைத்துவம் என்பது என்ன?

தலைவன் என்பவர் சுயநலமில்லாத, தன்னை சார்ந்துள்ளவர்களின் நலனை சிந்தித்து கொண்டு இருப்பவர். அக்கிரமம், அநியாயங்களை தட்டிக் கேட்பவன். தான் கொண்டுள்ள இலக்கினை கொண்டு தன் கூட்டத்தோடு பயணிப்பவன். தன் சமூதாயத்தையும் மாற்றுபவனே சிறந்த தலைவன். அவரே எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாய் விளங்குவார்.
திறமைக்கான தளமும், ஆளுமைக்கான தெரிவும், சேவைக்கான மனப்பான்மையும் கொண்ட சமூதாயத்தில் தலைமை உருவாகும்போதே அங்கு எமது உரிமைக்கான பாதுகாப்பும், தேவையும் பூர்த்தி செய்யப்படும்.


அரசியல் ஒழுக்கம் இல்லாத சமூகத்தின் நிலை என்ன என்று யாரும் நினைத்தது உண்டா?

அரசியல் ஒழுக்கம் இழந்த நாட்டில் அரசியல்வாதிகளின் அடாவடித்தனமும், சமூக, நாட்டு நலனுக்கு மாறான செயற்பாடுகளும் மேலோங்கி நிற்கும். இதனால் அரசியல் ஒழுக்கம் பேணப்பட வேண்டும்.  அரசியல்வாதிகளாக அரசியல் களம் இறங்குவோர் தம்மை நம்பிய மக்களின் நம்பிக்கையை புறக்கணித்து செயற்பட்டால் என்ன நடக்கும்? என்னதான் நடக்க போகிறது. வேடிக்கை பார்க்கும் சமூகமாக மாறியதுதான் மிச்சம். காரணம் அது குற்றமாக நோக்கபடாத இன்றைய நிலையே எமது நாட்டின் அரசியல் குற்றங்களுக்கு வழி செய்துள்ளன என்றால் அதுவே உண்மை.

இந்த நிலை மாற பூரண ஜனநாயக நாட்டில் என்ன செய்கிறார்கள்?

சில நாடுகளில் தவறு இழைக்கும் அரசியல்வாதிகளை திருப்பி அழைக்கும்(Recall)  முறை உள்ளது. அந்த நாடுகளே இன்று வளர்ச்சி அடைந்த, ஊழல் அற்ற நாடுகளாகவும், ஜனநாயக பட்டியலில் முதன்மை இடத்திலும் உள்ளன. எம் நாடுகளில் அவ்வாறு இல்லை. அவ் இடங்கள் சிறந்த அரசியலால் நிரப்பப்பட வேண்டும்.
உதாரணம்: சுவிஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள திருப்பி அழைக்கும் முறை.

நமது நாட்டில் இந்த நிலை இல்லாமைக்கான காரணம் என்ன?

ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் நம்பியுள்ள ஒரு கொள்கையை, கோட்பாட்டை நடைமுறை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்து பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள்.  இன்று அரசியல் என்பது பரம்பரைக்கு, முதுமைக்கு என இடம் கொடுக்கின்றதே தவிர எமது நாட்டில் எவை  உருவாகியது,  என்ன நடைபெற்றது என்பதை ஆராய்வதில்லை. அவ்வாறு ஆராயும்போதே அதன் விளைவினை மதிப்பிட முடியும். இவற்றை தவிர்த்து பொது நலனுக்கான, சேவைக்கான தலைமைகளை உருவாக்கி எம்மில் இருந்து  அவை நிரப்பப்பட வேண்டும். நமது நாட்டில் இந்த நிலை இல்லாமைக்கான காரணங்கள்:
  • பொய்யான வாக்குறுதி.
  • மக்களின் மனக் குறைகளை கேட்பதில்லை. 
  • சம பிரதிநிதித்துவம் இன்மை என இவ்வாறு அடிக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையில் சம பிரதிநித்துவம் என்பது உள்ளதா?

அரசியலில் சலருக்கும் சம பிரதிநித்துவம் வழங்குவதும்  அரசியல் ஒழுக்கம்தான். உலகிற்கே பெண் பிரதிநிதித்துவம் பற்றிய கருத்தாடலை முன்வைத்த நம் நாட்டிலே இன்று சம பிரதிநிதித்துவம் இல்லை. பெண்கள்சார் விடயங்கள் பேசப்பட வேண்டும். 

ஆனால் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாழும் எம் நாட்டிலே பெண் அரசியல் பங்குபற்றல் 5.77% மாத்திரமே. இதுதான் அரசியலில் பாலின சமத்துவ ஒழுக்கமா? ஆனால் இன்று ஆபிரிக்கா கண்டத்திலே உள்ள ருவாண்டா நாடு 64% பெண்களுக்கான வாய்ப்பினை சட்டமன்றத்தில் வழங்கும்போது இலங்கை சட்ட மன்றினால் ஏன் வழங்க முடிவதில்லை?.

எம் நாட்டின் சட்ட மன்றில் ஒழுக்கம் பேணப்படுகிறதா?

ஒருவர் செய்யும் செயலுக்கும் பேச்சுக்கும், செயலுக்கும் தடை போடுவது அரசியல் அல்ல.  ஒருவரை எதிர்த்து இன்னொருவர் பேசுவது மட்டும் அரசியல் அல்ல. ஆதரவான விடயத்திற்கு ஒன்றுபடுங்கள்.  அதுவே நாட்டின் எதிர்காலத்திற்கான வெற்றி. பாராளுமன்றம் என்பது மோதுண்டு விளையாடும் அரங்கமல்ல. மாறாக மக்கள் நலன் தேடும் இடம். 

கடந்த ஆட்சியில் எமது பாராளுமன்றில் உருவான குழப்பத்தை இங்கு நினைவு கூற வேண்டும். எமது நாட்டில் மட்டும் அல்ல. உலகில் பல நாடுகளில் இதுதான் நிலைமையும் கூட. இவ் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் காணப்படாத ஒற்றுமையை எவ்வாறு மக்களிடம் எதிர்பார்ப்பது. எவ்வாறு நல்லிணக்கத்தை இனங்களுக்கு இடையில் கொண்டு வருவது.

இன்றைய நிலையில்:


இதற்கு சிலர் விதிவிலக்காக இருப்பார்கள் என்பதும் மறுக்கப்படாத உண்மை. இன்று இலங்கையில், இலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த பாலித்த தெவரப்பெரும மக்களுக்கு தேடி சென்று உதவும் பிரதிநிதியாக உள்ளார். எங்கு சென்றும் உதவும் போக்கு, தைரியமான செயற்பாடு. இதைத்தான் மக்களும் கூட விரும்புகிறார்கள். 

அதேபோல் இன்று உலகில் பேசப்படும் முக்கிய நபராக கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ உள்ளார். மக்களோடு மக்களாக இணைந்து போராட்டமோ, எந்தவொரு செயற்பாடோ நேரடியாக இறங்கி செயற்படுகிறார். நேரடியாக சந்திக்கிறார். இதே போன்றுதான் இந்தியாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களும்.  மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்றும் தலைவன்.  இவ்வாறு ஏன் நம் நாட்டு அரசியலில் எல்லா அரசியல்வாதிகளும் மக்களின் குறையை நேரடியாக சென்று கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை தேடி வரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த பின்பு வருவதில்லை. இவை மாற்றம் அடையப்பட வேண்டும். மக்களின் நலன்கள் பேணப்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் ஆசையும் எண்ணமும் இதுவே. எனவே மக்கள் இதற்கு தமது வாக்குரிமையை சரிவர பயன்படுத்த வேண்டும். அப்போதே சிறந்த அரசியலுக்கான வழி உருவாகும். 

முடிவுரை
எனவே இவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த அரசியல் உருவாக வேண்டும். சிறந்த அரசியலால் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளில் ஓர் அபிவிருத்தியை எல்லா துறையிலும் கொண்டு வர முடியும். எனவே கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களை வாழ வழிசெய்யுங்கள். அவர்கள் உங்களில் ஒருவர் என்பதை மறக்காதீர்கள். பழைமையை புறந்தள்ளி மாற்றம் உருவாக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். இது அரசியல் அல்ல. சிறந்த அரசியலுக்கான வழி.

இதனை காணொளியாக பார்வையிட:

YouTube இல் பார்வையிட:




எழுத்து மற்றும் தொகுப்பு:
சிவம் விதுர்ஷன்.
அரசியல் விஞ்ஞானத் துறை(R).
பேராதனைப் பல்கலைக்கழகம்.


Comments

Post a Comment

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்