மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம் (1924-1931)


மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931




யாப்புருவாக்க பின்னணி:

மனிங்-டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் (Manning-Devon shire Reforms) என்பது இலங்கையில் 1924 முதல் 1931ம் ஆண்டு வரை வழக்கிலிருந்த அரசியலமைப்பு. பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காவது அரசியலமைப்பும் இதுவே. 1921ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டு வரை தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் அமுலிலிருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது நலவுரிமைகளுக்காக குரல்கொடுத்ததன் விளைவாகவும் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்த தேசிய காங்கிரசின் அழுத்தங்கள் காரணமாகவும் உள்நாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முகமாக இந்த அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மனிங் அரசியலமைப்பின் செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளை அவதானித்த இலங்கையர்கள் புதிய யாப்புத் திருத்தம் கோரி மனுக்களை முன்வைத்தனர். குறிப்பாக சேர் ஜேம்ஸ் பீரிஸ், தமிழர் ஐக்கிய முன்னணியினர் சில நகல்  திட்டங்களை ஆள்பதி மனிங்கிடம் கையளித்தனர். இவை யாவற்றையும் கருத்தில் எடுத்த ஆள்பதி மனிங் அவர்கள் புதிய திருத்தம் ஒன்றை முன் மொழிந்தார். இதனைக் கவனித்த குடியேற்றநாட்டுக் காரியதரிசியான டிவன்ஷயர் பிரபு அதில் கீழ்வரும் சிறிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்.

1.    சிங்களவர்களுக்காக மேலும் இரண்டு தொகுதிகளை (மேல், தென் மாகாணத்தில்) வரைந்து கொடுத்தார். இதனாலயே மனிங் டிவன்ஷயர் சீர்திருத்தம் என அழைக்கப்பட்டது.

2.    தமிழர்களுக்கான மேல்மாகாணப் பிரதிநிதித்துவம்.

மனிங் டிவன்ஷயர் அரசியல் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்.

1. தெரிவு செய்யப்பட்ட இரு உத்தியோகப் பற்றற்றோர் சட்ட நிர்வாக சபையில் உள்வாங்கப்பட்டமை. ஆயினும் இவர்களுக்கான திணைக்களங்கள் ஒதுக்கப்படவில்லை.

2. தெரிவு செய்யப்பட்ட இலங்கைப் பிரதிநிதிகளுக்கு எதிரான பிரித்தானியரின் பலம் குறைந்தது.

3. தேசாதிபதி சட்டசபைக்கு தலைமை தாங்குவது நிறுத்தப்பட்டது.

4.சட்டசபைக்கு சட்டபையால் தெரிவு செய்யப்பட்ட உப தலைவர் ஒருவரே தலைமை தாங்கினார். ஜேம்ஸ் பீரிஸ் என்பவரே உபதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

5.தொடர்ந்தும் இலங்கைக்காக பிரித்தானியா சட்டமியற்றலாம் என்ற நியதி பின்பற்றப்பட்டே வந்தது.

6.நிதித்துறையொன்று அமைக்கப்பட்டமை. இதன் மூலம் உத்தியோகசார்பற்ற அங்கத்தவர்கள் நிதித்துறையில் தாக்கம் செலுத்தக்கூடிய நிலை தோன்றியது.

7.1824இல் மொத்தம் 204 996 பேர் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை பெற்றிருந்தனர்.

சட்ட நிரூபண சபையின் கட்டமைப்பு:




மனிங்-டெவொன்சயர் அரசியலமைப்பின் கீழ் சட்டநிரூபண சபை எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கை 12 ஆகும். அதேநேரம், உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 37 ஆக உயர்த்தப்பட்டது.

உத்தியோக சார்புள்ளோர் 12 பேர்:

மனிங் - டெவொன்சயர் அரசியலமைப்பின் கீழ் உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கை 12 ஆகக் குறைக்கப்பட்டது. இதில்

பதவிவழி காரணமாக 5 பேர் 

பிரித்தானிய அரசாங்கத்தின் ஊதியம் பெறும் பின்வருவோர் பதவிவழி காரணமாக சட்ட நிரூபண சபையில் அங்கத்துவம் பெற்றனர்.

  • உயர் இராணுவ அதிகாரி
  • குடியேற்ற நாட்டுக் காரியதரிசி
  • சட்டத்துறை நாயகம்
  • வரிக்கட்டுப்பாட்டாளர்
  • பொருளாளர்


நியமன அதிகாரிகள்-7 பேர் 

சட்டநிரூபண சபையில் இடம்பெறக்கூடிய மீதமான ஏழு உத்தியோக சார்புள்ளோர்களும் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். அச்சமயம் இலங்கையில் பணியாற்றி வந்த பிரித்தானிய அதிகாரிகளே இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.

உத்தியோக சார்பற்றோர் 37பேர்:

மனிங்-டெவொன்சயர் அரசியலமைப்புக்கு முன்னைய அரசியலமைப்புகளை விட முதல் தடவையாக உத்தியோகசார்பற்றோர் எண்ணிக்கை உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. இதில் பதவிவழி காரணமான பிரதிநிதிகளுள் பிரதேச ரீதியாக 23 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்

தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் எண்ணிக்கை 29

பிரதேச ரீதியாக 23பேர் 

  • மேல்மாகாணம் - 5
  • மத்திய மாகாணம் - 2
  • தென் மாகாணம் - 3
  • வடமாகாணம் - 3
  • வடமேல் மாகாணம் - 2
  • கிழக்கு மாகாணம் - 2
  • வடமத்திய மாகாணம் - 1
  • ஊவா மாகாணம் - 1
  • சப்ரகமுவ மாகாணம் - 2
  • கொழும்பு நகரம் - 2
  • இனரீதியாக 6


இனரீதியாக 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
  • நாட்டுப்புற ஐரோப்பியர் - 1
  • நகர்ப்புற ஐரோப்பியர் - 1
  • வர்த்தக ஐரோப்பியர் - 1
  • பறங்கியர் - 2
  • மேல்மாகாணத் தமிழர் - 1


நியமனமாக இடம் பெற்றோர் -08பேர் 
  • முஸ்லிம் - 3
  • இந்தியர் - 2
  • சிறப்பு – 3


சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தகுதி:

இச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டில் வசித்தவரகவும், பிரித்தனிய ஏகாதிபத்தியத்தின் பிரஜையாகவும், ஆங்கில மொழியில் எழுத வாசிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் 1500 ரூபாய்க்கு குறையாத வருடாந்த வருமானத்தை அல்லது 5000 ரூபாய்க்கு குறையாத சொத்து உள்ளவராகவும் இருக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. இவ் அரசியல் திட்டத்தின் கீழ் வாக்களிக்க தகுதி உடையோர் 21 வயதுக்கு குறையாதவராகவும், பிரித்தானிய பிரஜையாகவும், ஆண்களாகவும், ஆங்கிலமோ, சிங்களமோ, தமிழோ எழுதவும், வாசிக்கவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் இத்தகையோர் 600 ரூபாய்க்கு குறையாத வருடாந்த வருமானமோ அல்லது 1000 ரூபாய்க்கு குறையாத சொத்து உள்ளவராகவும் இருக்க வேண்டும் என விதிக்கபட்டது.

இவ் அரசியல் திட்டத்தின் கீழ் சட்ட சபையின் சம்மதத்துடனும், அறிவுரைகளுடனும் நாட்டின் நல்லாட்சிக்கும், ஒழுங்குக்கும், அமைதிக்கும் பங்கம் உருவாகதவாறு சட்டங்களை இயற்ற முடிந்தது. சட்டங்கள் தேசாதிபதியின் சம்மதம் பெற்று நடைமுறைக்கு வந்தன. சில் நேரங்களில் மன்னனின் சம்மதம் பெறும் விடயங்களை ஒத்தி வைத்து அவரின் சம்மதம் பெற்றபின் நடைமுறைக்கு வந்தன. மேலும் பொது நிதியில் இருந்து எதாவது ஒரு பகுதிக்கு செலவு செய்வதற்கு அல்லது செலவினத்தை கூட்டுவதற்குரிய சட்டமோ, வாக்கெடுப்போ, தீர்மானமோ எதுவாக இருந்தாலும் தேசாதிபதியின் முன் அறிவித்தல் இன்றி எந்த நிலையிலும் சட்டசபையில் நடைமுறைபடுத்த முடியாதிருந்தது.


சட்ட நிர்வாக சபை:

இந்த யாப்பின் கீழ் உருவான சட்ட நிர்வாக சபை தேசாதிபதிக்கு சார்பானவர்களை கொண்ட ஓர் அமைப்பு அல்ல. அது முடியின் ஆணையின் அறிவுறுத்தலின்படி தேசாதிபதிக்கு உரிய அதிகாரங்களை வழங்கி அதனை நடைமுறைக்கு கொண்டு வரும்போது, அவர் சட்ட நிர்வாக சபையுடன் கலந்தாலோசனை செய்தல் வேண்டும். ஆனால் தாமதிக்க முடியாத சிறு விடயங்களில் அவர் ஆலோசனை பெற வேண்டியது இல்லை. ஆனால் இவ் தீவிர நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அதற்கு தகுந்த காரணம் என்பன கூற வேண்டும். தேசாதிபதியால் சமர்பிக்கப்பட்ட எல்லா விடயங்களும் சுதந்திரமாக விவாதிக்கப்பட்டது. இச் சபைக்கு நியமிக்கப்பட்ட உத்தியோகசார்பற்ற அங்கத்தவர்கள் சுதந்திராமாக செயற்பட்டனர்.

மனிங் டிவன்ஷயர் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் தேசாதிபதி:

இவ்யாப்பின்படி இலங்கையின் சட்டசபைக்கு ஓரளவு பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் பயனாக ஆள்பதி அவர்கள் சட்டசபையின் ஆலோசனையைக் கேட்கவேண்டி இருந்தது. ஆள்பதி அவர்களை சில சட்டங்களை இயற்றுவதை விட்டும் தடை செய்யும் அதிகாரம் சட்டசபைக்கு இருந்தது. பொதுவாகக் குறிப்பிடும்போது இவ் யாப்பில் ஆள்பதிக்கு பூரண பொறுப்பு இருந்தது. ஆனால் பூரண அதிகாரம் இருக்கவில்லை. ஆள்பதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டசபைக்கு ஓரளவு இருந்தது. ஆயினும் சட்டசபையினர் விரும்பிக் கேட்ட பொறுப்பு அதிகம் இருக்கவில்லை என்றே கூறலாம்.

இவ்யாப்பின் படி அதிகாரமும் பொறுப்பும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. சட்ட சபையின் உத்தியோக அங்கத்தவர்களிடம் அதிகாரம் விடப்பட்டது. சட்டசபைக்கு கட்டுப்படாமலும், மக்கள் பிரதிநிதிகளாகாமலும் இருந்த இவ்வுத்தியோகத்தர்கள் குடியேற்ற மந்திரியால் நியமிக்கப்பட்ட ஆள்பதிக்கே கட்டுப்பட்டு இருந்தார்கள். ஆள்பதியிடம் சட்ட நிர்வாக அதிகாரம் இருந்தது. சட்ட சபையில் பெரும்பானமையான உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்கள் அரசாங்கத்தை அமைத்து நடாத்த இயலாதவர்களாய் இருந்தார்கள். இந்நிலையில் ஆளுனர் சிறுபான்மைக் கட்சித் தலைவர் பிரதமராய் இருந்தது போன்று செயற்பட்டார்.
சட்ட நிர்வாக சபை மந்திரிசபையின் போக்குடையதாய்க் காணப்பட்டது. இதற்கும் தலைவராக ஆள்பதி அவர்கள் காணப்பட்டார்கள். இதில் 07 பேர் அங்கம் பெற்றனர். அதில்

1. 
குடியேற்றச் செயலாளர்
2. 
சட்டத்துறை நாயகம்
3. 
மேல்மாகாண அதிபர்.
4. 
உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் 04 பேர் (2 சிங்களவர், 1 தமிழர், ஒரு ஆங்கிலேயர்)
மனிங் டிவன்ஷயர் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் நிதிக்குழு:

1838ம் ஆண்டு தொடக்கம் கோல்புறுக் சட்டசபைக்கு நிதி தொடர்பாக எவ்வித ஆதிக்கமும் இருக்கவில்லை. 1838ம் ஆண்டில் இருந்து வரவு செலவுத்திட்டத்தை கண்டிக்கவும் மாற்றியமைக்கவும் கோல்புறுக் சட்டசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த வகையில் பின்வரும் இரு விடயங்களில் அவ்வதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

1. சட்டசபையின் முன் அனுமதியின்றி எவ்வித செலவையும் மேற்காள்ளுதல் கூடாது.

2. அரசாங்கம் வரவுசெலவுத்திட்டததை நடைமுறைப்படுத்தும் முன்னர் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்கள் நாட்டின் தேவையை எடுத்துக் கூறலாம்.

ஆயினும் 1912ம் ஆண்டு தேசாதிபதி மக்கலம் குறு மக்கலம் யாப்பில் நிதிக்குழு எனும் ஒரு முறையை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பின்வருவோர் உறுப்பினர்களாகக் காணப்பட்டனர்.

1.  தேசாதிபதி (குழுவின் தலைவர்)
2.  
குடியேற்ற நாட்டுக் காரியதரிசி
3.  
வருமான அதிகாரி
4.  
கணக்காளர் நாயகம்.
5.  
உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்கள் 10பேர் 

1921ல் அறிமுகம் செய்யப்பட்ட மனிங் அரசியற் சீர்திருத்தத்தின்படி நிதிக்குழு புதிய பரிணாமத்தை அடைந்தது.

1. குடியேற்ற நாட்டுக் காரியதரிசி
2. 
வருமான அதிகாரி
3. 
கணக்காளர் நாயகம்.
4. 
உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்கள் 23 என இக் குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

1924ல் நிதிக்குழுவில்,
1.  
குடியேற்ற நாட்டுக் காரியதரிசி
2.  
வருமான அதிகாரி
3.  
கணக்காளர் நாயகம்.
4.  
உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்கள் 37 என இக் குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

1924ம் ஆண்டுக்கு முன்னர் சட்ட நிர்வாக சபையைக் கலந்தலோசித்தே அனைத்தும் இடம்பெற்றன. ஆனால் தற்போது அனைத்து விடயங்களும் நிதிக்குழுவைக் கலந்தாலோசித்தே இடம்பெற்றன. இதனால் நிதிக்குழுவே பிரபல்யம் மிக்கதாக இக்காலத்தில் விளங்கின. இது தொடர்பாக டாக்டர் மார்க்கஸ் பர்ணாந்து அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்.

“1924ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சட்ட நிர்வாக சபையில் விவாதிக்கப்படவே இல்லை. உத்தியோகப் பற்றற்ற பிரதிநிதிகளுக்கு படிவழங்குதல், அவர்களது தொகுதிகளுக்குப் நிதி ஒதுக்குதல் போன்ற விடயங்கள் கூட நிதிக்குழுவிலேயே விவாதிக்கப்பட்டன. இந்நிதிக்குழுவில் இலங்கையர்கள் அங்கம் வகித்தமையானது பிற்காலத்தில் மந்திரிகளாக கடமை புரிவதற்கு உதவின”.  என்றார். இருப்பினும் நிதிக்குழு ஒரு ஆலோசனைக் குழுவாகவே திகழ்ந்தது எனலாம்.

நிதிக்குழுவின் கடமைகள்:

1.நிதி தொடர்பாக தமது ஆலோசனைகளை முன்வைத்தல்.

2.வரவு செலவுத்திட்டம் தயாரித்தல்

தொடர்பாக ஆலோசனை கூறுதல்.

3. வரவு செலவுத்திட்ட விவாதங்களில் ஈடுபடுதல்.

4.நாட்டின் நிதியைக் கையாளுதல்.

5. அவசர காலங்களில் ஆளுநருடன் இணைந்து நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.

மனிங் டிவன்ஷயர் அரசியல் திருத்தத்தின் நன்மைகள்:

1. பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டமையானது (மட்டுப்படுத்தப்படட்ட அளவில்) தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் கூட்டியது எனலாம். முன்னர் 03 உறுப்பினர்களாக இருந்த தமிழர்களுக்கு வடமாகாணத்தில் 05, கிழக்கு மாகாணத்தில் 02 மேல்மாகாணததில் 01 என 08 உறுப்பினர்கள் காணப்பட்டனர்.

2.  இந்திய வம்சாவழி, முஸ்லிம்களது பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை.

3.இலங்கைத் தமிழர்களுக்காக மேல்மாகாணப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.

4. நிதிக் குழுவில் இலங்கையர் உள்வாங்கப்பட்டமை.

5. உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களுக்கு சட்ட நிர்வாக சபையில் 03 அங்கத்துவம் கிடைத்தமை.

மனிங் டிவன்ஷயர் அரசியல் திருத்தத்தின் தீமைகள்:

1.சட்டசபையில் உத்தியோகப் பற்றற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் தேசாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த மறுப்பாணை அதிகாரமும் உத்தியோகப் பற்றுள்ள அங்கத்தவர்கள் மற்றும் நியமன அங்கத்தவர்களின் சம்மதத்துடன் சட்டங்களை இயற்றலாம் எனும் அதிகாரமும் தேசாதிபதியின் நிலையை மேலும் வலுப்படுத்தியது.

2. சட்ட நிர்வாக சபை தொடர்ந்தும் சட்டசபைக்குக் கட்டுப்படாத ஒன்றாகவே இருநதுவந்தது.

3. இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையான சிங்களப் பிரதிநிதிகளில் 2/3 பங்காவது தமக்குக் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமை.

4. வாக்குரிமை தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

முடிவுரை:

பல்வேறுபட்ட சிறப்பு அம்சங்களை கொண்ட இவ் யாப்பானது 1931 டொனமூர் அரசியல் யாப்பு அறிமுகம் செய்யும் வரையில் இலங்கை பிரதிநிதிகளுக்கு ஓரளவு சுதந்திரம் கொண்ட சட்ட மற்றும் சட்ட நிர்வாக அமைப்புகளை கொண்டு காணப்பட்டது. அத்துடன் நிதி சம்மந்தமாக உருவான நிதிக்குழு மேலும் வளர்ச்சி பெற்ற அமைப்பாக மாற இவ் யாப்பு காரணமாக அமைந்தது எனலாம். ஆகவே இலங்கை அரசியல் திட்ட வளர்ச்சியில், இவ் அரசியல் திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தினை குறித்து நிற்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.


                                                                                                                                                                                            
  தொகுப்பு:

Sivam Vithurshan ,
Special in political science(R),
University of peradeniya.





உசாத்துணை நூல்கள்:
1. அம்பலவாணர் சிவராஜா (2006),"இலங்கை அரசியல்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு, p-31-33.

2. தமிழ்வின், இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்,(கட்டுரை),
web: https://www.google.com/amp/s/www.tamilwin.com/education/ 01/119592/amp (Accessed 2016 October 2).

3.யோதிலிங்கம், சி. அ,(2004),"இலங்கையின் அரசியல் யாப்புகள்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

4. Cooray, L. J. M(1984)," constitutional government in Sri Lanka, Colombo :Lake House investment Ltd.

5. Jayasekara, P. V. J, "Confrontations with Colonialism: Resistance, Revivalism and Reform under British Rule in Sri Lanka 1796- 1920"-Volume-1.

Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்