வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம்

 

வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம் 

அறிமுகம். 

சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் மற்றைய அரசுகளுடன் உறவினை மேற்கொள்ளும் போது வெளிநாட்டுக் கொள்கை மிகவும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது. இவ் வெளிநாட்டுக் கொள்கை இன்றி எந்தவொரு அரசும் சர்வதேச மட்டத்தில் இயங்க முடியாது. இவ்வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அரசுகள் தாம் எதிர்பார்ப்பவற்றை அரசுகளுக்கு இடையிலான உறவுகளின் ஊடாக அடைந்து கொள்வதற்கே எதிர்பார்க்கின்றது. இதன் போது அரசுகள் கொண்டிருக்கும் நோக்கங்கள் என்பது அரசியல், பொருளாதார, இராணுவ, வர்த்தக, கலாசார அடிப்படையிலானதாக இருக்கலாம். 

சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப் பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுகளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும்  உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் எதிர்பார்ப்பானது நாடுகள் வெளிநாட்டுக் கொள்கையினைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்துவதுடன் நவீன அரசுகளின் முக்கிய பணிகளுள் ஒன்றாகவும் இவ்வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கம் நோக்கப்படும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தெளிவாக வரையறுக்கப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை இன்றி எந்தவொரு நாடும் சர்வதேச முறைமையில் உரிய இடத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாது. 

வெளிநாட்டுக் கொள்கை பொருள் விளக்கம்

வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி சகலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பொதுவான வரைவிலக்கணம் காணப்படுவதில்லை. ஏனெனில் வெளிநாட்டுக் கொள்கையினைப் பற்றி விளக்க வந்த ஒவ்வொரு அறிஞர்களும் அதனை வரைவிலக்கணம் செய்வதிலும் அது குறித்த அம்சங்களில் அழுத்தம் கொடுப்பதிலும் வேறுபட்டு நிற்கின்றனர். இருந்தபோதிலும் ஒருநாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நாட்டின் தேசிய நலனை முன்னேற்றுவதை நோக்காகக் கொண்டுள்ளது என்ற விடயத்தில் இவ்வறிஞர்கள் ஒத்துநிற்பதாக பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா குறிப்பிடுகின்றார்.

பொதுவாக நாடுகளிடின் வெளி நடத்தைகளை வெளிப்படுத்தப்படுவதே வெளிநாட்டுக் கொள்கை எனக் கருதப்படுகின்றது. இவ்வெளிநாட்டுக் கொள்கையானது சர்வதேச அரசியல் செயன்முறையினை இயக்கும் கொள்கைகளுள் ஒன்றாக நோக்கப்படுகின்றது. வேறுவகையில் கூறுவதாயின் ஒரு நாடு பிற நாடுகளுடன் தேசிய அளவில் தன்னுடைய வளத்திற்கும் நலனுக்கும் உகந்த வகையில் பின்பற்றி நடக்கும் கொள்கைகளையே வெளிநாட்டுக் கொள்கை என்பது குறித்து நிற்கின்றது. எனினும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான ஒரு கோட்பாட்டு ரீதியான விளக்கத்தினைப் பின்வரும் வரைவிலக்கணங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஜோர்ஜ் மொடல்ஸ்கி  என்பவர் வெளிநாட்டுக் கொள்கையினை வரைவிலக்கணப்படுத்தும் போது, பன்னாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது செயற்பாடுகளை செய்து கொள்வதும் பிறநாடுகளின் நடத்தையினை அதற்கு ஏற்ப மாற்றம் பெறச் செய்ய உருவாக்கிக் கொள்ளும் கொள்கைகளே வெளிநாட்டுக் கொள்கை” என்கிறார். இவ்வரைவிலக்கணத்தில் பிறநாடுகளின் செயற்பாடுகளை அல்லது நடத்தையினை ஒரு அரசின் நலன்களுக்கு ஏற்ப மாற்றம் பெறச் செய்வதுதான் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கம் என மாடல்ஸ்கி குறிப்பிட வருவதிலிருந்து நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கினைக் கொண்ட கொள்கைப் பகுதியிலேயே மொடல்ஸ்கி கவனம் செலுத்தி இருப்பது புலப்படுகின்றது.

கியூ ஜிப்சன்  குறிப்பிடும் போது  “உலகின் மற்றைய பகுதிகளோடு ஓர் அரசாங்கத்தின் தொடர்புகளை இணைத்து நடாத்துவதற்காக திட்டவட்டமான அறிவு, அரசியல் அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் விரிவான திட்டமே வெளிநாட்டுக் கொள்கையாகும். அது அந்நாட்டின் நலனைப் பேணுவதையும் பாதுகாப்பதையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிடுகின்றார்.

பெலிக்ஸ் குரோஸ்  குறிப்பிடும் போது “வெளிநாட்டுக் கொள்கையானது சில சூழ்நிலைகளில் நாடுகளுக்கிடையிலான உறவினை இல்லாமல் செய்துவிடும்” என்கிறார். அதாவது ஒரு அரசு சில நாடுகளுடன் உறவுகளை மேற்கொள்வதில்லை எனத் தீர்மானித்தால் அதுவும் வெளிநாட்டுக் கொள்கையாக அமைந்துவிடுகின்றது என்கிறார்.

மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள்  “எத்தகைய கொள்கையை நாம் தீர்மானித்தல் என்பது ஒரு நாட்டின் எந்த வெளிநாட்டு கொள்கை அந் நாட்டுக்கு உச்ச வாய்ப்பினை தரக்கூடியது என்று கண்டுபிடிப்பதிலேயே தங்கியுள்ளது. ஒரு நாடு ஏகாதிபத்தியம் சார்பானதோ, சோசலிசம் சார்பானதோ, அதன் வெளிநாட்டு அமைச்சர் அந்நாட்டின் நலனையே அடிப்படையில் சிந்திக்கிறார்" என வெளிநாட்டு கொள்கை பற்றி விபரித்து கூறியுள்ளார். எனவே மேற்குறித்த விளக்கத்தின் மூலம் வெளிநாட்டு கொள்கை என்பதை புரிந்து கொள்வதுடன் அவை எந்தளவுக்கு ஒரு நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பல நாடுகள் வெளிநாட்டு கொள்கையின் பின்னணியிலே செயற்படுவதை அடையாளம் காண முடிகின்றது. 

வெளிநாட்டு கொள்கை மூலம் தனது எல்லைகளை பாதுகாப்பதன் ஊடாக ஒவ்வொரு அரசும், அதன் அரசியல் சுதந்திரத்தையும்,ஆள்புல ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பதை இலக்காக கொள்வதால் அது முக்கியம் பெறுகிறது. எனினும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையைத் நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானதாக தேசிய நலன் உள்ளது. இவ் தேசிய நலனை பெறவே அரசுகள் பெற முயற்சி செய்து வருகிறது. அதற்கு கருவியாகவே வெளிநாட்டுக் கொள்கையை அரசானது பயன்படுத்தி வருகிறது. இதனால் ஒரு நாட்டின் தேசிய நலனை தீர்மானிக்கும் சக்தி என்ற வகையில் வெளிநாட்டு கொள்கை முக்கியம் பெறுகின்றன. தேசிய நலன் என்பது பின்வருமாறு மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படும். 

  •  பாதுகாப்பு 
  • தேசிய அபிவிருத்தி 
  •  உலக ஒழுங்கமைப்பு 

வெளிநாட்டு கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும் இரு விடயங்களை அரசுகள் கையாளுகின்றன. 

  •  பாதுகாப்பு 
  • இராஜதந்திரமும், தொடர்புகளும். 

வெளிநாட்டு கொள்கை முக்கியம் பெற சில காரணிகள் காரணமாக அமைகிறது. பல்வேறு காரணிகள் ஒன்று சேர்தலின் காரணமாக பல்வேறுபட்ட சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கம் பெறுகிறது. அவையாவன:

  • புவியியல் 
  • பொருளாதார அபிவிருத்தி 
  • அரசியல் மரபு 
  • உள்நாட்டு சூழ்நிலை 
  • சர்வதேச சூழ்நிலை 
  • இராணுவப் பலம் 
  •  தேசிய இயல்பு. 

இவ்வாறு பல்வேறு காரணங்களால் வெளிநாட்டுக் கொள்கை முக்கியம் பெறுவதால் உள்ளுர் மற்றும் வெளியூர் பரப்பில் முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்படுகிறது.  இன்று இலங்கை வெளியுறவு  கொள்கையை தன் நலனுக்காக வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்வதும், இலங்கையில் பல நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதும் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதிபலிப்பு. ஆயினும் அவற்றில் இருந்து விலக முடியாமலும், நலன்களை பெற்று தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் வல்லரசுகள் செயற்படுகிறது. அவற்றை மீறி செயற்பட முடியாத வகையிலும் வெளிநாட்டு உறவு  நாடுகளுடன் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று உள்ளது. 


வெளிநாட்டு கொள்கையின் முக்கியத்துவம்

1. அரசுகள் தங்களது தேசிய நலனை பாதுகாக்க வெளிநாட்டு கொள்கை அவசியமானதாகும்.

வெளியுறவுக் கொள்கை நாட்டின் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ஒரு அரசின் நிலை பெரும்பாலும் அதன் பொருளாதார நிலையால் தீர்மானிக்கப்படுவதால், அரசுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையைத் தொடர முயற்சி செய்கின்றன, மேலும் இது சர்வதேச அரசியலில் மிகவும் பயனுள்ள பங்கை வகிக்க உதவுகிறது. சர்வதேச சமூகத்தின் பிற நாடுகளுடன் அரசு செய்துள்ள பெரும்பாலான ஒப்பந்தங்களின்  அடிப்படையில் இந்த அரசுகளின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு கொள்கை முக்கியத்துவம் பெறுகின்றது. 

2. பிற நாடுகளுடன் உறவுகளை மேற்கொள்வதற்குரிய நெறிமுறைகளை உருவாக்க காரணமாகிறது.

வெளிநாட்டு கொள்கை மூலம் நாடுகள் பிற நாடுகளுடன் உறவினை மேற்கொள்ள காரணமாக அமைகின்றது. நாடுகளுக்கு இடையிலான உறவினை புதுப்பிக்கவும், காலா காலத்திற்கு பேணவூம் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமைகின்றது.  இதன் மூலம் ஒவ்வொரு நாடும் தமக்கு தேவையான நலனைையும், தேவையையும் அடைந்து கொள்ளவும் ,வேறு நாடுகளுடன் தொடர்பினை பேணும்போது சில நெறிமுறைகளை உருவாக்கி அதன்படி செயற்படுவதற்கும் இவ் வெளியுறவு கொள்கை அவசியமாகிறது. உதாரணமாக இலங்கை சீனாவுடன் பல ஆண்டு காலமாக வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி வருவதுடன் காலாகாலமாக அதன் உறவுகள் மேம்பட்டு வருவதை காணலாம். இன்று இலங்கை சீன உறவுகள் மேம்பட்டு இருக்க காரணம் வெளிநாட்டுக் கொள்கை ஆகும்.

3. ஒரு நாட்டின் நிலவுகையை உறுதி செய்து கொள்ள வெளிநாட்டு கொள்கை அவசியமாகின்றது.

இன்றைய காலத்தில் ஒரு நாடு நிலையாக நிலைத்து நிற்கவும், அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும் சகல நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தி வருவதுடன், அவ் நிலவுகைக்கு ஏனைய நாடுகளால் உருவாகும் அச்சுறுத்தல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் நாட்டினை பாதுகாக்க வெளிநாட்டுக் கொள்கை அவசியம். இதன் மூலம் சர்வதேசத்தில் ஒவ்வொரு நாடுகளும் பகைமை அரசிடம் இருந்து பாதுகாக்க தமக்கு ஆதரவான நாடுகளுடன் கூட்டணியாக செயற்படவும் இவ் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமைகின்றது. இதன் மூலமாக சர்வதேசத்தில் ஒரு நாடு தன்னை நிலை நிறுத்தி வைக்க இது காரணமாக அமைகின்றது. உதாரணமாக பாக்கிஸ்தான் தனது நிலவுகையை உறுதி செய்து இந்தியாவிடம் இருந்து பாதுகாக்க சீனாவுடன் வெளிநாட்டு உறவில் தங்கி உள்ளதை காணலாம்.

4. ஒரு நாட்டின் வெற்றி, தோல்வி பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்ள காரணமாக வெளிநாட்டு கொள்கை அவசியமாகின்றது.

இன்று ஒரு நாடு எல்லா நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கின்றன. இதனால் இந்த நாடுகள் சில நாடுகளுடன் தொடர்பினை பேணவும், சில நாடுகளிடம் இருந்து விலகி இருக்கவும் முயற்சி எடுக்கின்றன. இதனால் ஆதிக்க போட்டி காரணமாக இராஜதந்திர செயற்பாடுகள் மேற்கொண்டு சில நாடுகளை வீழ்த்தி வெற்றி பெறவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறான நாடுகளின் வெற்றி எவ்வளவு, எத்தனை நாடுகளுடன் உறவு கொண்டுள்ளன என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வெளிநாட்டுக் கொள்கை காரணமாகின்றன

5. பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க வெளிநாட்டுக் கொள்கை முக்கியம் பெறுகின்றன.

அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு நாடுகள் வெளிநாட்டுக் கொள்கையில் ஈடுபடுகிறது. இன்று நாடுகளின் விருத்திக்கும்இ வளர்ச்சிக்கும் காரணமாக அமைவது இந்த பொருளாதாரமே. பல நாடுகள் ஒவ்வொரு நாட்டிலும் ஆதிக்கம் செலுத்தி கடன் மற்றும் வர்த்த விருத்தி என்ற வகையில் நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை நாடுகளுக்கு வழங்குகின்றன. இதனால் ஏதோ ஒரு வகையில் எல்லா நாடுகளும் ஒவ்வொரு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி தமது கொள்கையை விருத்தி செய்து கொள்வதால் வெளிநாட்டுக் கொள்கை முக்கியம் பெறுகின்றன. 

குறிப்பாக அமெரிக்கா தனது சார்பு நாடுகளுக்கும், சீனா தன் சார்பு நாடுகளுக்கும் உதவி புரிந்து பொருளாதார உதவியை வழங்கிறது என்றால் காரணம் வெளிநாட்டு கொள்கை ஆகும். உதாரணமாக சீனா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பல் உதவிகளை வழங்க காரணம் வெளிநாட்டு உறவின் பிரதிபலனே. அதனால் இலங்கை பொருளாதார விருத்தியை மேம்படுத்தி தன்னை அபிவிருத்தி செய்ய காரணமாக அமைகின்றது. இலங்கை தவிர நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் என பல்வேறு நாடுகளுடன் பொருளாதார உதவியை வழங்க சீனா வெளிநாட்டுக் கொள்கையை ஆயுதமாக பயன்படுத்துகிறது.

6. தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு என்பனவற்றை உறுதி செய்ய வெளிநாட்டு கொள்கை உதவுகிறது.

ஒரு நாடு பலம் இழந்து இருந்தாலும் வேறு ஒரு நாடுடன் நல்ல உறவில் இருந்தால் அந்த நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் தேசத்தில் ஏற்படும் குழப்ப நிலையை குறைக்க பல நாடுகள் உதவுகின்றன. உதாரணமாக தீவிரவாத அமைப்புக்கள் மூலம் ஏற்படும் அழிவில் இருந்து பாதுகாக்கக்கூடிய பல வழிகள் உண்டு. அமெரிக்கா தனது உறவில் நல்ல நிலையில் உள்ள நாடுகளுக்கு உதவும் போக்கு உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடும் காரணமாக அமையும். இதற்கு காரணம் வெளிநாட்டு கொள்கை ஆகும். அதனால் இது முக்கியமான ஒன்றாக பார்க்கபடுகிறது.

7. வர்த்தகம், வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்ள வெளிநாட்டு கொள்கை காரணமாக அமைகிறது.

வெளிநாட்டு உறவின் மூலம் நாடுகள் தமது வர்த்தக விருத்தி மற்றும் வெளிநாட்டு உதவியை அதிகமாக நாடி நிற்கும் போக்கு இன்று அதிகமாக உள்ளதை காணலாம். இதனால் வளர்ந்து வரும் நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் உதவியை பெற்று நாட்டினை வளப்படுத்தி கொள்ள இந்த வெளிநாட்டு கொள்கை காரணமாக அமைகின்றது. உதாரணமாக சீனா இவ்வாறான தேவை உள்ள நாடுகளை தனது கட்டுபாட்டுக்குள்  கொண்டு வந்து தனக்கு எதிரான நாடுகளுக்கு பகைமையான நாடுகளுக்கு உதவி புரிந்து ஆதிக்கம் செலுத்தும் போக்கு காணப்படுகிறது. இதனால் அந்த நாடுகளுக்கு வெளிநாட்டு உறவு ஒரு கருவியாக உள்ளதை காணலாம். இவ்வாறான தொடர்புக்கு காரணம் வெளிநாட்டுக் கொள்கை ஆகும். இதனால் அது முக்கியத்துவம் பெறுகின்றது.

8. நாட்டின் சமூக நலன்களை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு உதவுகிறது.

நாட்டுக்கு தேவையான நலன்களை உயர் மட்டத்துக்கு கொண்டு செல்ல வெளிநாட்டுக் கொள்கை காரணமாகின்றது. இதன் மூலம் தனது நலனை அடைந்து கொள்ளவும், நாட்டை முன்னோக்கி கொண்டு போகவும் சகல வசதியையும் பெற காரணமாகிறது.

9. நாட்டின் கௌரவத்தை சர்வதேச சமூகத்தில் வளர்ப்பதற்கு காரணமாகிறது.

ஒரு நாடு சாதாரண நாடு என்றால் அவை கொள்ளும் வெளிநாட்டுக் கொள்கையின் வலிமை காரணமாக அந்த நாடுகள் சர்வதேசத்தில் தனது போக்கையும், அதன் கௌரவத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக வெளிநாட்டுக் கொள்கை அமைகின்றது. இதன் மூலம் அந்த நாடுகள் அனைவருக்கும் ஒரு தீர்மானமிக்க சக்தியாக மாறுகிறது. உதாரணமாக இலங்கை சீனா மற்றும் அமெரிக்கா தொடர்பு காரணமாக இந்து சமுத்திரத்தில் தீர்மானமிக்க சக்தியாக செயற்படுவதுடன், தனது கௌரவத்தை சர்வதேச தளத்தில் வளர்க்க வெளிநாட்டு கொள்கை காரணமாக அமைவதால் அது முக்கியம் பெறுகின்றன. இதன் மூலம் சீனா மற்றும் அமேரிக்கா நாடுகள் சர்வதேசத்தில் தங்களது கௌரவத்தை வளர்க்கவும் வழி உருவாகின்றது.

10. ஒரு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு வெளிநாட்டு கொள்கை காரணமாகிறது.

ஒரு நாடு பலம் அடைவதற்கும் அதன் அரசியல் நிலைப்புக்கும் காரணமாக அமைவது வெளிநாட்டு கொள்கை என்றே கூற வேண்டும். ஒரு நாடு கஷ்டத்தில் தவழும்போது அரசியல் நெருக்கடியின்போது துணை நிற்கும் போக்கு சர்வதேச அரசியலில் இருப்பதை காணலாம். உதாரணமாக இலங்கை இறுதி போரின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக இலங்கை கூண்டில் ஏற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆட்சி சிக்கலான நிலைக்கு போகும்போது சீனாவின் ஆதரவில் இலங்கை தப்பித்ததை கூற வேண்டும். ஒரு விடயம் தவறு என்றாலும் அவற்றில் இருந்து மீட்டு எடுத்து அரசியல் சிறப்பாக இடம்பெற வெளிநாட்டு கொள்கை  காரணமாக அமைகிறது . அந்த அளவு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. 

11. வெவ்வேறு இரு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வை உருவாக்கவும், ஒற்றுமையை வளர்க்கவும் வெளிநாட்டுக் கொள்கை அவசியமாகின்றது.

இரண்டு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து நல்ல உறவை உருவாக்கவும், அவர்கள் சர்வதேசத்தில் நிலைத்து நிற்கவும் வெளியுறவு கொள்கை காரணமாக அமைவதை காணலாம். இதனால் நாடுகளுக்கு இடையில் ஒற்றுமை உருவாக காரணமாகின்றன. இதனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பவற்றை மேற்கொள்ள இவ் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமைகின்றது.

12.தேசிய அதிகாரம், தேசிய அந்தஸ்தை உயர்த்தும், பாதுகாத்தலும்

ஒரு நாட்டின் தேசிய அதிகாரம் மற்றும் அதன் தேசிய ரீதியான மதிப்பு மற்றும் அந்தஸ்தை உருவாக்க வெளிநாட்டு கொள்கை காரணமாக அமைகின்றது. இதன் மூலம் தேசிய அந்தஸ்தை உருவாக்க ஏனைய நாடுகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த நாட்டிக்கு மதிப்பு உருவாக காரணமாக அமைகின்றது.

13. உலக ஒழுங்கினை பேணவும் வெளிநாட்டுக் கொள்கை முக்கியம் பெறல்.

நாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாமல் இருந்தால் முரண்பாடும் யுத்தமும் அதிகமாக உருவாகும். இவ் வெளிநாட்டுக் கொள்கை மூலம் நாடுகள் ஒன்றோடொன்று தொடர்புபடும்போது அங்கு முரண்பாடு குறைக்கப்பட்டு உலக ஒழுங்கு சமநிலை பேணப்படும். இதனால் நேச நாடுகள் எல்லாம் ஒன்று சேரவும், குறித்த நாட்டுக்கு எதிரான நாடுகளும் சேரும். எனினும் அந்த நாடுகளுக்கு இடையில் ஒரு உறவினை பேணும்போது உலக ஒழுங்கு பேணப்பட்டு சமாதானமாக நாடுகள் செயற்படும். இவ்வாறு உலக ஒழுங்கினை பேண வெளிநாட்டுக் கொள்கை முக்கியதுவம் பெறுகின்றது.

14. சிறிய நாடுகளும் பலம் பொருந்தியதாக மாற வெளிநாட்டுக் கொள்கை முக்கியமாகின்றது.

ஒரு நாடு சிறிய அரசாக இருந்தாலும் அந்த நாடு முக்கியம் பெற வெளிநாட்டுக் கொள்கை காரணமாகின்றன. இந்த நாடுகள் சர்வதேச வல்லரசு நாடுகளுடன் கொள்ளும் உறவு காரணமாக பலம் பொருந்திய அரசாக மாற காரணமாகின்றன. இதற்கு வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமைகின்றது.

15. சர்வதேச அரசியலில் நாடுகள் தீர்மாணமிக்க சக்தியாக மாற வெளிநாட்டுக் கொள்கை முக்கியமாகின்றது.

ஒரு நாடு சர்வதேச அரசியலில் தீர்மானமிக்க சக்தியாக மாற வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமைகின்றது. குறிப்பாக அமெரிக்கா நாடுகளுடன் கொண்ட தொடர்பு சில வேளை அந்த நாட்டு அரசியலை கூட தீர்மானிக்கும் போக்கு தற்கால அரசியலில் உள்ளதை காணலாம். இவை யாவும் வெளிநாட்டுக் கொள்கையின் காரணமாகவே. இதனால் வெளிநாட்டு கொள்கை பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்றைய காலத்தில் காணப்படுவதை காணலாம்.

ஒரு நாட்டின் கலாச்சார மற்றும் வரலாற்று மரபுகள் வெளியுறவுக் கொள்கையை முக்கியத்துவம் அடைய காரணமாகின்றன. பொதுவாக, ஒன்றுபட்ட பொதுவான கலாச்சாரம் மற்றும் வரலாற்று அனுபவங்களைக் கொண்டவர்கள் ஒரே வழக்காறு மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நாடு சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவின் காரணமாக ஒரு பயனுள்ள வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற முடியும். 

மறுபுறம், கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பிளவுபட்டுள்ள ஒரு நாடு சமமான பயனுள்ள வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற முடியாது. இந்தியா மற்றும் நேபாளம் என்பன ஒரே வரலாறு மற்றும் மத அடிப்படையில் ஒரு நாடு அவை ஒன்றாக செயற்பட முடியும். ஆனால் சமகாலத்தில் சீனா ஆதிக்கத்தை தொடர்ந்து அது பிரிந்து நிற்பதை காணலாம். அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் கூடுதலான நாடுகள் ஒரே மதம்சார், வரலாற்றுப் பின்னணி கொண்ட  நாடுகள் என்பதால் தங்களுக்குள் வெளிநாட்டுக் உறவில் நெருங்கிய நாடுகளாக உள்ளது. இதன் மூலம் தங்கள் புகழ் உச்சத்தை அடைய வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமைவதால் முக்கியத்துவம் பெறுவதை காணலாம். 

சமகால வெளிநாட்டு கொள்கையின் முக்கியத்துவத்தை பாதிக்கும் போக்கும், சவால்களும்

நவீன காலங்களில் எந்தவொரு அரசும் சர்வதேச துறையில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாது. இந்த ஈடுபாடு முறையாக இருக்க வேண்டும். அதேபோல் நன்கு வரையறுக்கப்பட்ட சில கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு அரசின் கொள்கையும் நோக்கமும் அதன் வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலிக்கிறது. வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒரு வெளியுறவுக் கொள்கை நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதன் குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். பொதுவாக இந்த நோக்கத்திற்காக அரசுகள் வெளிநாட்டு  கொள்கையை பின்பற்ற விரும்புகின்றன. தற்காலத்தில் ஒரு அரசு ஒரு கொள்கையை பின்பற்றினால் இன்னொரு அரசு அந்த நிலைமையை சீர்குலைக்க முற்படுகிறது, ஒரு நாட்டின் மீது குறித்த நாடு தவறானது  என்று முத்திரை குத்தப்பட்டு சர்வதேச சமூகத்தின் மற்ற உறுப்பினர்களின் சந்தேகத்தை தூண்டுகிறது. அதன் கௌரவத்தை பராமரிப்பதற்காக, அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் தனது குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க முற்படுகின்றது. உதாரணமாக அமெரிக்கா இஸ்லாமிய நாடுகள் மீது சர்வதேச ரீதியில் எதிர்மறையான அபிப்பிராயங்களை உருவாக்கி அவற்றின் மீது பொருளாதார தடைகளை உருவாக்கி அவற்றை ஒதுக்கிக் செயற்படும் போக்கு உள்ளதை நடைமுறையில் காணலாம். 

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் தேசிய நலன்களை மேம்படுத்துவது ஆகும். ஒவ்வொரு அரசினதும் நோக்கம் தேசிய நலன்களும், குடிமக்களின் பாதுகாப்பு  மற்றும் நல்வாழ்வு ஆகும். பெரும்பாலும், பல்வேறு அரசுகளின் நலன்கள் மோதலில் வருகின்றன. இந்த நிலைமை இன்று அமெரிக்கா மற்றும் சீனசார் நாடுகளுக்கு இடையில் உருவாவதை காணலாம். குறிப்பாக இந்தியா அமெரிக்கா சார்புள்ள நாடாக மோடியின் ஆட்சி தற்பொழுது உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு பகைமையுள்ள நாடு. அதனால் தங்கள் நலனை பேண அமெரிக்காவிற்கு எதிரான சீனாவுடன் கைகோர்த்து தங்கள் நலனை அனுபவித்து வருவதை காணலாம். 

இவை மோதலின் அடிப்படையில் நலனை பெறுகின்ற முறை. இதனால் இன்றைய காலத்தில் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம் இழந்து வருவதோடு ஒரு நாடு உறவு கொள்வதிலும் அச்சம் நிலவூம் போக்கும் உள்ளது. சில வேளை நாடுகள் அணிசேராநாடுகள் என்ற கருத்தியலில் இருந்தாலும் முக்கிய இரு வல்லரசுகளின் ஆதிக்கம் காரணமாக இரு நாடுகளிலும் தங்கி செயற்படும் தன்மை உள்ளது. காரணம் இரு நாடுகளிலும் நலன்களை பெறுவதே ஆகும். உதாரணமாக இலங்கையின் தற்போதைய ஆட்சியின் நிலவரம்படி இலங்கை சீன மற்றும் அமெரிக்கா சார்புடைய நாடுகளாக செயற்படுகின்றன. இது சவாலாக இருந்தாலும் இரு வழி தொடர்பு மூலம் அதிகளவு நலனை அனுபவிக்கும் நாடுகளாக உள்ளன. 

இன்று வெளியுறவுக் கொள்கை மூலம் ஒரு நாடுகள் அதன் ஆதிக்க பகுதியை விரிவுபடுத்துவதன் மூலமோ அல்லது மற்ற அரசின் ஆதிக்க நிலையை  குறைப்பதன் மூலமோ அரசின்  செல்வாக்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமகாலத்தில் காணப்படும் ஒரு முறையாகும். உதாரணமாக அடுத்த வல்லரசு ஆதிக்க போட்டி என்ற பெயரில் இந்தியா மற்றும் சீனா தனது ஆதிக்கத்தை இந்து சமுத்திரத்தில் நிலை நாட்ட தனது ஆதிக்கத்தை எல்லை  மற்றும் அண்மித்த நாடுகளுடன் செலுத்துவதை காணாம். இதனால் ஒரு நாடு இன்னொரு நாட்டின் ஆதிக்கத்திற்கு சவாலாக அமைகிறது. 

ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையால் தனது நோக்கங்களை கடந்த காலங்களில் அடைவது என்பது துரதிர்ஷ்டவசமாக இருந்து வந்தது. காரணம் பல ஆண்டுகளின் உறுதியற்ற தன்மை மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் பலவீனம் போன்ற காரணிகளால் நாடு மற்றவர்களை பெரிய அளவில் சார்ந்து செயற்படும் போக்கினை காணலாம். எனவே வெளியுறவுக் கொள்கையின் உண்மையான நோக்கங்களை ஒருபோதும் அடைய முடியாத நிலை அவர்களுக்கு காணப்பட்டது. மேலும், நாடு தனது தேசிய நலன்களை வரையறுக்கவும் முடியவில்லை, இதன் விளைவாக சர்வதேச அரங்கில் பலவீனமாக இருந்தது. அந்தவகையில் இவ் வெளிநாட்டு கொள்கை எவ்வளவு முக்கியமானது என்பதை இவ் உதாரணம் சுட்டிக் காட்டுவதை காணலாம். 

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் சில வெளிப்புற காரணிகளும் சவாலாக  உள்ளன. சமகால சர்வதேச அமைப்புகள் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பெரிதும் பாதிக்கின்றன. அதன் வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் போது, சர்வதேச சட்டம், ஒப்பந்தங்கள் என்பவற்றில் கவனத்தில் கொள்ளும் போக்கு உள்ளதை காணலாம். உலக அளவில் உள்ள கட்டமைப்பைத் தவிர, பிராந்திய மற்றும் துணை பிராந்திய மட்டங்களில் உள்ள கட்டமைப்புகளும் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பெரிதும் பாதிக்கின்றன. உதாரணமாக சார்க் நாடுகள் கூட்டணியில் எல்லா நாடும் பிராந்திய அடிப்படையில் செயற்படுகின்றன. அவை ஒருமித்த வெளிநாட்டுக் கொள்கையில் இடபெறும் போக்கு உள்ளது. 

இன்று ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, சர்வதேச செல்வாக்கு பெரிய அளவில் உள்ளது. நாடு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிற சக்திவாய்ந்த மற்றும் சில அண்டை நாடுகளைச் சார்ந்து இருப்பதால், அதன் வெளியுறவுக் கொள்கை எப்போதும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. உள் காரணிகளைப் பொருத்தவரை, ஆப்கானிஸ்தானின் புவியியல், கனிம வளங்களுடன் காணப்பட்டாலும், அனைத்து நாடுகளுக்கும் விளையாட்டு போர்க்களமாக இருந்து வருகிறது. இது அந்த நாட்டை பெருமளவில் பாதித்துள்ளது. மறுபுறம், நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை ஒரே மாதிரியான தேசிய உணர்வுகளை உருவாக்குவதற்குத் தடையாக உள்ளது.

முடிவுரை

இவ்வாறு நலனை அடைய வெளியுறவுக் கொள்கை முக்கியம் பெற்றாலும், அது தனது முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் பல சவால்களையும், அழுத்தங்களையும் தாண்டியே செல்ல கூடியதாக உள்ளது. எனினும் ஒரு நாடு இவ் வெளிநாட்டுக் கொள்கை இன்றி செயற்பட முடியாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணலாம். இதனால் ஒரு நாடு பிற நாடுகளின் துணை இன்றி தனித்து செயற்பட முடியாத நிலை உள்ளதால் வெளிநாட்டுக் கொள்கை என்பது தொடரத்தான் செய்யும். சில நாடுகள் விதிவிலக்காக இருந்தாலும் வெளிநாட்டுக் கொள்கை இன்றைய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.


உசாத்துணை நூல்கள் :

சிவராஜா, அ, 2007, “இலங்கை அரசியல்”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை 

சர்ஜூன்.ஏ, ரிபான், ஏ.எம், 2011, “சமகால அரசறிவியல் எண்ணக்கருக்கள்”, இஸ்லாமிக் புக் கவூஸ்.

outlookafghanistan.net ,The Importance of Foreign Policy, Web:http://www.outlookafghanistan.net/editorialdetail.php/ (Accessed: 2016 July 03)

Wikipedia, Foreign policy, web: https://en.wikipedia.org/wiki/Foreign_policy

 

 தொகுப்பு:

சி. விதுர்ஷன், 

அரசியல் விஞ்ஞானத்துறை, 

பேராதனைப் பல்கலைக்கழகம். 





Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்