இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள்
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள்
அறிமுகம்
இன்று முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்களில் ஒன்று வெளிநாட்டுக் கொள்கை ஆகும். வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை எனக் கூறப்படுகிறது. ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே ஏனைய அரசுகளுடன் ஒரு அரசு வைத்திருக்கக் கூடிய உறவினைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையையும், அதன் நெறியாள்கைகளையும் அரசுகளின் இறைமை, அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றமை, ஒரு அரசிற்கு இருக்கக்கூடிய தேசிய, சர்வதேச சூழ்நிலைகள் என்பவைகள் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன.
அந்தவகையில் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையினை நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது தேசிய நலன் ஆகும். தேசிய நலன் என்பது பின்வரும் மூன்று அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
- பாதுகாப்பு
- தேசிய அபிவிருத்தி
- உலக ஒழுங்கமைப்பு
வெளிநாட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும் இரு விடயங்களும் கருவியாக செயல்படுகின்றன.
- பாதுகாப்பு
- ராஜதந்திரமும் தொடர்புகளும்
பல்வேறு காரணிகள் ஒன்று சேர்தலின் காரணமாக பல்வேறுபட்ட சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கி வருகின்றது. அவ்வாறு செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பின்வருமாறு:
- புவியியல்
- பொருளாதார அபிவிருத்தி
- அரசியல் மரபு
- உள்நாட்டு சூழ்நிலை
- சர்வதேச சூழ்நிலை
- ராணுவ பலம்
- தேசிய இயல்பு.
அந்தவகையில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிப்பதில் பின்வரும் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன எனலாம் அந்த வகையில்,
- புவியியல் அமைப்பு
- ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள்-அரசியல் கட்சிகளின் இயல்பு
- அரசியல் தலைமைத்துவத்தின் இயல்பு.
- சர்வதேச அரசியல் சூழ்நிலையில் நிலைப்பாடு
- ஒரு நாட்டின் ஆள்புல எல்லை
- பண்பாடும் வரலாறும்
- அதிகார வலியமைப்பு
- உடன்பாடும், பன்னாட்டு உடன்படிக்கையும் சமூக அமைப்பு
- அரசியல் அமைப்பு முறை
- ராஜதந்திரம்
- தேசிய நலன்
- சமூக மற்றும் கலாச்சார காரணிகள்
- அரசியல் பொருளாதாரம்/ பொருளாதார அழுத்தங்கள்
- ஆட்சியாளர்களின் அரசியல் அபிலாசைகள்
- மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதிபத்திய கருத்தியலும்
- பிராந்திய மற்றும் சர்வதேச வலுச் சமநிலை என்பனவாகும். இவை பின்வருமாறு தாக்கம் செலுத்தியுள்ளதை காணலாம்.
ஒரு நாட்டின் ஆள்புள எல்லை
ஒரு நாட்டின் ஆள்புல எல்லை அல்லது நிரந்தர பரப்பளவு அந்நாட்டின் வெளியுறவு கொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறியதோர் பரப்புக்கொண்ட நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கும், பாரிய பரப்பு கொண்ட ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு இடையே வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுக் கொள்கை இலங்கை, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் வெளியுறவு கொள்கைக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. இதில் சில புறநிலைகளும் காணப்படுகின்றன. சர்வதேச ரீதியில் பார்க்கும்போது பிரித்தானியா சிறிய நாடாக இருந்தபோதிலும் அது வல்லரசு தன்மை கொண்டு காணப்படுகின்றமை அதன் வெளியுறவுக் கொள்கையிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.
புவியியல் அமைவிடம்:
ஒரு நாட்டின் புவியியல் அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நிரந்தர காரணியாகும். இதில் அந்நாட்டின் நிலவியல் கூறுகள், சீதோஷ்ண நிலை, இருப்பிடம் ஆகியவை மிக செல்வாக்கு செலுத்துகின்றன. உதாரணமாக 1948க்கு முன்னும் பின்னும் இலங்கையுடன் பிரித்தானியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளும் கொண்டுள்ள உறவில் இலங்கையின் புவிசார் அமைவிடமே முக்கிய காரணி ஆகும். இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமையப் பெற்றிருப்பதுடன், இலங்கை எல்லா நாடுகளுக்கும் ஒரு வெளிநாட்டுக் கொள்கை தீர்மானிக்கின்ற ஒரு மத்திய நாடாகவே கருதுகின்றது. அந்த வகையில் இலங்கையில் காணப்படுகின்ற அமைவிடம் சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இலங்கை மையமாக இருப்பதால், இலங்கை தனது வெளிநாட்டு உறவை விஸ்தரிப்பதில் புவிசார் அமைவிடம் செல்வாக்கு செலுத்துகின்றது.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள தீவு என்ற வகையில் வெளி உலகிற்கு எப்போதும் திறந்து விடப்பட்டுள்ள இயல்பினைக் கொண்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தியா மற்றும் ஆசிய அரசுகள் மற்றும் ஐரோப்பிய சக்திகள் பலவற்றுடன் பேணிச் சென்ற தொடர்புகளுக்கு இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக இலங்கை காணப்படுகின்றது. இந்தியாவிற்கு அண்மையில் அமைந்திருப்பது இந்தியாவுடன் கொண்டுள்ள பல்வேறு வகையான தொடர்புகளுக்கான அடிப்படையாக உள்ளது.
தென்னாசிய பிராந்தியத்தில் அமைந்துள்ளமை இலங்கையின் பிராந்திய தொடர்புகளுக்கான அடிப்படையாக உள்ளது. அத்தோடு இந்து சமுத்திரத்தில் ஒரு தீவாக அமைந்திருப்பதால் கடல்சார் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் கட்டாய அங்கத்தவராக மாறியுள்ளது. உதாரணமாக
BIMSTEC-Bengal initiative for multi-Sector technical and economic cooperation,
IORA-Indian Ocean Rim association போன்ற சர்வதேச அமைப்புகளில் இலங்கை உறுப்புரிமையும், Maritime Silk root போன்ற சர்வதேச வேலைத் திட்டங்களின் நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் செயற்படல்.
பண்பாடும் வரலாறும் :
ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நாட்டின் பண்பாட்டு பாரம்பரியமும் வரலாற்று பின்னணியும் முக்கிய காரணமாக அமைகின்றது. பிற நாடுகளுடன் உறவினை மேற்கொள்ள அவைகள் பெரிதும் பயன்படுகின்றன. வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குபவர்கள் அவர்களுடைய நாட்டின் பண்பாட்டுத் தொடர்புகள், வரலாற்று அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் உருவாக்குகின்றார்கள்.
உதாரணமாக இலங்கை கூடுதலாக சீன அரசுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரே பாரம்பரியம், வரலாறு என்ற அடிப்படையில் இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் சீனாவுடன் தொடர்பு கொள்கின்றனர். அதேபோல் சில தமிழர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் உறவினை மேற்கொள்வதை காணலாம். அதேபோல மத்திய கிழக்கு நாடுகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது மதத்தை தொடர்புபடுத்தி வெளிநாட்டுக் கொள்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். இலங்கையில் எந்த ஒரு இனமும் தங்களுடைய பண்பாடு, வரலாறு என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதை காணலாம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அதனோடு இணைந்த கூட்டு அரசாங்கங்களின் வெளிநாட்டு கொள்கையானது பிராந்தியவாதத்தினை (Regionalism) ஆசியாவில் கலாச்சார அடையாளங்கள் மற்றும் வெளிநாட்டு சமூகத்தின் உள்ளக அரசியல் மற்றும் கலாச்சார தொடர்புகள் என்பவற்றினை பேணுவதை காண முடிகின்றது. அண்மைக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் காட்டிய ஆசியாசார் வெளிநாட்டுக் கொள்கையில் அது வெளிப்பட்டது.
அதிகார வலியமைப்பு
பன்னாட்டுக் அரசியலில் ஒரு நாட்டின் அயல்நாட்டுக் கொள்கை அதன் அதிகார வலிமையின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இராணுவ பலம், அணுவாயுத பலம் கொண்ட நாடுகளின் வெளியுறவுக்கும், மூன்றாம் மண்டல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைக்கும் அதிகமான வேறுபாடுகள் உண்டு. நாடுகளின் வெளியுறவுப் போக்கில் அதிகார வலிமையே ஆதிக்கம் செலுத்துகின்றது. உதாரணமாக 1955 முன் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெறுவதற்கு அச்சு நாடுகளில் ஒன்றான ரஷ்ய தடையாக இருந்தமையை ஆதாரமாக கூறலாம்.
உடன்பாடுகளும் பன்னாட்டு உடன்படிக்கைகளும்:
நாம் ஏலவே கூறியது போன்று ஒரு அரசு தனித்து இயங்க முடியாத நிலையில் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் என்பவற்றை செய்து தமது நலன்களைப் நிறைவேற்றுகின்றது. இதனால் பன்னாட்டு உடன்படிக்கைகள் பல நாடுகளுக்கு இடையிலான வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிப்பது துணைபுரிகிறது.
சமூக அமைப்பு/சமூகத்தின் இயல்பு
ஒரு நாட்டின் சமூக அமைப்பும் அதன் தன்மையும் அந்நாட்டின் வெளியுறவில் தாக்கம் செலுத்துகின்றது. சமூகத்தில் நிலவும் அமைதியும், ஒருமைப்பாடும் அதற்கு எதிரான முரண்பாடுகளும், பிரச்சனைகளும் அந்நாட்டின் வெளியுறவில் தாக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக இலங்கையில் சுமார் மூன்று தசாப்தகால யுத்தமும், இனங்களுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல்கள் என்பனவும், அந்நாட்டின் வெளியுறவில் பாரிய தாக்கம் செலுத்தியது எனலாம்.
அரசியலமைப்பு முறைமை:
பொதுவாக அரசியலமைப்பு முறைமையும், அயல்நாட்டு கொள்கையை உருவாக்குவதில் துணைபுரிகின்றது எனலாம். மக்களாட்சி, அரசியல் முறைமை கொண்ட நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கும், சர்வாதிகார அரசியல் முறைமை கொண்ட நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக முதலாம் உலகப் போரின் பின் உருவான கிட்லர், முசோலினி போன்றவர்களின் நாசிச, பாசிச அரசியல் கட்சிகளின் வெளிநாட்டுக் கொள்கை நாட்டினை கைப்பற்றுவதாக அமைந்திருந்தது. இதிலிருந்து வேறுபட்டே ஏனைய நாடுகளின் அயல்நாட்டுக் கொள்கை காணப்பட்டது. அந்த வகையில் இன்று உலக நாடுகளில் காணப்படும் வல்லரசுகள் அதிகமாக இலங்கையில் செல்வாக்குச் செலுத்துவதை காணலாம். குறிப்பாக இலங்கையை அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் நவகாலனித்துவம் என்ற அடிப்படையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.
இது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் தாக்கம் செலுத்துகின்ற காரணியாக காணப்படுகின்றது. அதைப்போல் இலங்கையின் அரசியல் அமைப்பு முறையானது தாராள ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதால் இது சோசலிச நாடுகளை மையமாகக் கொண்டதாகவும், தாராளவாத நாடுகளை மையமாகக் கொண்டதாகவும் ஒழுங்கமைந்து இருப்பதால், இலங்கை பிற நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை செயல்படுகின்றது. இதற்கு காரணம் இலங்கையில் அமைந்துள்ள அரசியல் அமைப்பு முறையை கூற முடியும்.
அரசாங்க அமைப்பு முறை:
பொதுவாக அரசாங்கங்கள் மாற்றமடைவது வெளிநாட்டுக் கொள்கையில் தாக்கம் செலுத்துகின்றது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமக்குரிய கருத்தியல்களை பின்பற்றுகின்றன. இதனால் இவ்வாறான கட்சிகள் ஆட்சிக்கு வருகின்ற போது அக் கருத்தியல்களை பின்பற்ற முயல்வதால் அவ்வாறான சித்தாந்த வலையமைப்பு கொண்ட நாடுகளுடனேயே உறவு கொள்ளும் நிலை உள்ளது. இதனால் அரசாங்கத்துக்கு அரசாங்கம் அயல்நாட்டுக் கொள்கை வேறுபட்டுச் செல்கின்றது. சமகால ஐக்கிய தேசிய கட்சி சீனா மற்றும் இந்தியாவுடன் இதற்கு முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்ட தொடர்புகளிலிருந்து மாறுபட்டதொரு நெருக்கமான உறவினை உருவாக்கியதன் மூலம் அந்த நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தி தொடர்பில் கவனம் செலுத்துவது தெளிவாகின்றது.
சமகால அரசாங்கத்தின் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தும் வளர்ந்து வரும் மற்றும் நிலவும் சர்வதேச பொருளாதார சக்திகளுடன் தொடர்புபட்டுள்ளன. வியட்நாம், சிங்கப்பூர், கொரியா போன்ற வளர்ந்து வரும் ஆசிய பொருளாதார சக்திகளுடன் மிகவும் உறுதிமிக்கவகையில் தொடர்புபபட்டுள்ளது.
ராஜதந்திரம்
அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடரவே மேற்கொள்ள இது துணை புரிகின்றது. எனவே இதனை வெளிநாட்டுக் கொள்கையின் கூறுகளில் ஒன்று எனலாம். அயல் நாட்டு கொள்கையை உருவாக்குபவர்கள் இவ் அரச தந்திரத்தை நன்குணர்ந்து பின்பற்றுகின்றனர் .இதுவும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை செல்வாக்கு செலுத்துகின்ற காரணியாக உள்ளது. 2015இன் பின்னர் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் தெள்ளத் தெளிவான மாற்றமொன்று தென்படுகின்றது.
அதாவது பொருளாதார ரீதியான இராஜதந்திர(Economic Diplomacy) தொடர்புகள் வெளிநாட்டுக் கொள்கையின் மையமாக மாறியுள்ளது. இதன்படி முன்னரை விடவும் பிரபலமான வகையில் சர்வதேச பொருளாதார வலுச்சமநிலையும் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வெளிநாட்டுக் கொள்கையை முக்கியமான சில உலகத் தாபனங்களுடன் நேரடியான தொடர்புகளை மேற்கொள்வதை தெளிவாக காணமுடிகின்றது.
உதாரணமாக
IMF- International monetary fund
BRID- International Bank for reconstruction and development.
WTO- World trade organizations
IFC- International finance cooperation
WEF- World Economic Forum.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற சர்வதேச பொருளாதாரத்தில் முன்னணி நாடுகளுடன் புதிய பொருளாதார சமூகத்தின் அதிகார சமநிலை தொடர்பிலான அதிகார அச்சுறுத்தல் மற்றும் வெளிப்பாட்டுடன் செய்ற்பட்டமை தெளிவாகின்றது. ஆட்சி மாற்றங்களுடன் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்படும் புதிய செல்நெறிகளுக்கு உதாரணமாகும்.
தேசிய நலன்
கொள்கை உருவாக்கத்தில் முக்கிய இடத்தைப் பெறுவது தேசிய நலன் எனலாம். எந்த ஒரு நாடும் தமது தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே உறவு வைத்துக் கொள்கிறது. அந்த வகையில் தேசிய நலன் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தும் ஒரு காரணியாக காணப்படுகின்றது. வெளிநாட்டுக் கொள்கையூடாக இறைமையுடைய அரசுகள் தமது தேசிய நலன்களை பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும். காலம், இடம், சூழல் என்பவற்றைப் பொறுத்து தேசிய அரசுகளுக்கிடையில் தேசிய நலனைப் பேணுவதில் சிறிய வேறுபாடுகள் காணப்படலாம். ஆனாலும் சுய பாதுகாப்பு, பாதுகாப்பு, பிரசைகளுடைய நலன்கள் போன்ற தேசிய நலன்கள் வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
சமூக மற்றும் கலாச்சார காரணிகள்
பல்லின சமூகம் ஒன்றாக விருத்தி அடைந்துள்ள இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சமூகக் காரணிகளும் வெளிநாட்டுக் கொள்கையின் இயல்புகளை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இந்தியாவுடனான தொடர்ச்சியாக கலாச்சாரத் பிணைப்புகளால் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் இருதரப்பும் தொடர்புகளை தீர்மானிக்கும்போது இக் கலாச்சார காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றது. இது தனித்து வெளிநாட்டுக் கொள்கை ஒன்றாக மட்டுமன்றி உள்ளக அரசியலை தீர்மானிப்பதிலும் பிரபலமான காரணியாக முன்னிலை பெறுகின்றது. நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையானது உள்ளக சமூக- பொருளாதார மற்றும் பொருளாதார அசைவியக்கங்களின் தொடர்ச்சியே அன்றி அதிலிருந்து முற்றும் முழுதுமாக விலகியது அல்ல. இதனால் மேற்குறிப்பிட்ட உலக அரசியல்- கலாச்சார மற்றும் சமூக அசைவுகள் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிப்பதில் நேரடியான தாக்கத்தை செலுத்துகின்றது.
அரசியல் பொருளாதாரம்(Political economy)
ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் வெளிநாட்டுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றது. 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை இதற்கு முன்னர் காணப்பட்ட கொள்கையில் இருந்து மாறுபட்ட இயல்பினை பெற்றது. அத்தோடு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிலாசைகளும், வெளிநாட்டுக் கொள்கையுடன் நேரடியாக இணைந்துள்ளது.
அத்தோடு பிராந்திய அல்லது சர்வதேச ரீதியில் காணப்படும் காணப்படும் பல்தரப்பு தொடர்புகளும் பொருளாதார நோக்கங்களை முதன்மைப்படுத்தி தீர்மானிக்கப்படுவதும் தெளிவாகின்றது. இதன்போது பல்தரப்பு தொடர்புகள்(Multilateral relations) பொருளாதார பலன்களை பெற்றுக் கொள்வதற்கும், சம்பிரதாயபூர்வமான சடங்கு முறையான தொடர்புகளை காட்ட பயன்படுத்தப்படுவதோடு, பொருளாதார ரீதியாக வெற்றிகரமான அரசுகளுடன் இருதரப்பு தொடர்புகளுக்கு(Bi-lateral Relations) அதிக கவனம் செலுத்தி உள்ளது.
ஆட்சியாளர்களின் அரசியல் அபிலாசைகள்
ஆட்சியை வழிநடத்தும் அரசியல் கட்சி அல்லது குழுவின் கொள்கைகள் மற்றும் அபிலாசைகளும் வெளிநாட்டுக் கொள்கையின் இயல்புகளை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக 1948 தொடக்கம் 1956 வரையிலும், 1971-1977 வரையிலும், 1994, 2001 - 2004 மற்றும் 2015 இல் இருந்து இன்று வரைக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியும், இதனோடு இணைந்த கூட்டணி அரசாங்கங்களின் வெளிநாட்டு கொள்கையானது எஞ்சிய காலத்தில் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதனோடு இணைந்த கூட்டணி அரசாங்கங்கள் இக்கொள்கைக்கு சற்று மாறுபட்ட தன்மையைப் பெற்றுள்ளது.
பிராந்திய மற்றும் சர்வதேச வலுச் சமநிலை
பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படும் இயல்பு மற்றும் இயங்கு நிலையும், வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிக்கும் காரணியாகும். தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவை முதன்மையாகக் கொண்ட வலுச்சமநிலையும், சர்வதேச சமூகத்தில் ஒரு துருவ(uni-Polar), இருதுருவ(Bi-Polar), பல் துருவ(Multi-Polar), வலுச் சமநிலையும் எந்தவொரு அரசினதும் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதிபத்திய கருத்தியலும்
மக்களின் பொதுவான கருத்துக்களை போலவே ஆதிக்கவாதத்துடன் உருவாக்கப்படுகின்ற பார்வைகளும் வெளிநாட்டுக் கொள்கையின் இயல்பினை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றது. சில மேற்குலக சார்பு, சீனச் சார்பு, இந்திய சார்பு என்ற வகையில் சமூகத்தினுள் உருவாக்கப்பட்டுள்ள கருத்தாடல்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவது காணக்கூடியதாக உள்ளது.
ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள்-அரசியல் கட்சிகளின் இயல்பு
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தற்காலம் வரையில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் அல்லது அக் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான கூட்டணிகளிளே மேற்கொள்கின்றன. அதன்படி ஐக்கிய தேசிய கட்சி அல்லது கூட்டணி ஆட்சி செய்த காலப்பகுதியில் காணப்பட்ட வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் தனித்து உள்ளக அரசியலின் அபிலாசைகள் அல்லது ஆதிபத்திய கருத்துக்கள் மாத்திரமன்றி, நடைமுறை ரீதியாக அதிகார சக்திகளுடன் ஒத்துழைப்பது தொடர்பில்(Hegemonic for mations) அதிக கவனம் செலுத்தப்பட்டுலுள்ளமையை காணலாம்.
வலய ரீதியாக இந்தியாவுடனும் ஆசிய ரீதியில் சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவுடனும் மிகவும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி செல்வது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியாளர்களின் வெளியுறவுக் கொள்கையின் விசேட பண்பாகும். 1956-1965 மற்றும் 1970-1977 காலப்பகுதியில் இவர்களது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை பண்பாக அணிசேராக் கொள்கை காணப்பட்டது. அதேபோல் சர்வதேச ரீதியில் நேர்கணிய மத்தியஸ்தம்(Positive Neutralism) சுதந்திரக்கட்சியினதும், அதனுடன் இணைந்த கூட்டணிகளினதும் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் முக்கிய இயல்பாகும்.
அரசியல் தலைமைத்துவத்தின் இயல்பு.
சர்வதேச அரசியலின் அதிகார பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற சமவலு கொண்ட வல்லரசுகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அரசு ஒன்று இவ் வலுச் சமநிலையை கருத்தில் கொள்ளும் போது அரசின் வெளிநாட்டுக் கொள்கையும் மேற்குலகம் சார்ந்ததாகவே தோன்றும். எவ்வாறாயினும் 2015 முதல் 2019 வரையில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி குறிப்பிடத்தக்களவு இந்தியாவின்பால் அதிவிசேட கவனம் செலுத்தியதுடன், இக்கட்சியில் இதுவரை காணப்பட்ட வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். ஆனால் இன்று புதிய அரசாங்க தலைமைத்துவ இயல்பு சீனா மற்றும் அமெரிக்கா சார்புடையதாக இருந்தாலும் கூடுதலாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் சீனாவுடன் அதிக தொடர்புடன் உள்ளார். இது ஒவ்வொரு அரசாங்க மாற்றத்திலும் நடைபெறும்போது வெளிநாட்டுக் கொள்கையும் மாற்றம் அடையும்.
முடிவுரை
எனவே ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்கும்போது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் உள்வாரியான மற்றும் வெளிவாரியான காரணிகள் தாக்கம் புரிவதை காணலாம். இவற்றை அடிப்படையாக கொண்டே இலங்கையின் அனைத்து வெளிநாட்டுக் கொள்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது.
சி. விதுர்ஷன்,
அரசியல் விஞ்ஞானத்துறை,(R),
பேராதனைப் பல்கலைக்கழகம்.


Comments
Post a Comment