யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).

யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009). 



இலங்கை ஆரம்ப காலத்திலிருந்து சீனாவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. இதனால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே இன்றுவரை நெருக்கமான உறவு இடம்பெற்று வருவதைக் காணலாம். அந்த வகையில்  ஆரம்ப காலத்தில் இலங்கை - சீனாவுக்கு இடையே உறவுகள் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும்.

1948-1956 காலப்பகுதி

சுதந்திரத்தினை அடுத்து எட்டு வருடங்களாக இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேலைத்தேய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இக்காலப்பகுதியில் பிரதமர்களாக இருந்த சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவ ஆகியோர் இந்த கொள்கையினை பின்பற்றினர்.

கம்யூனிசத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தல், புதிதாக இலங்கையில் உருவாக்கிய பாராளுமன்ற  ஸ்தாபனங்களை கம்யூனிச அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் என்ற அம்சங்களே  ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டு கொள்கையை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகித்தது.  கம்யூனிஸ்டுகளுடனோ, கம்யூனிச நாடுகளுடனோ எத்தகைய தொடர்புகளையும் கொள்ள மறுப்பதே அக்காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்தும் தத்துவமாக இருந்தது. ஆனால் அப்போதைய நடைமுறைக்கு இரு புறநடைகள் இருந்தன அவை.

1.  1950 ஜனவரியில் இலங்கை, மக்கள் சீனக் குடியரசுக்கு அங்கீகாரம் வழங்கியமை, கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளை பொறுத்து, இவ்வாறு அங்கீகாரம் வழங்கிய நாடுகளுள் இலங்கை முன்னணி வகித்தது. 

2. 1952 பிற்பகுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் நாடான சீனாவுடன் ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து வருட காலத்துக்கு இலங்கை சீனாவுக்கு குறிப்பிட்ட அளவு இறப்பரை விற்கும் என்றும், அதற்கு பதிலாக சீனா அரிசியினை இலங்கைக்கு வழங்குவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.  

இவ் ஒப்பந்தத்தினால் இலங்கை நன்மை பெற முடிந்ததோடு, இன்று வரைக்கும் இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அண்மைக் காலத்தில் சீன அரிசிக்கு பதில் பெட்ரோல் வழங்குவதே ஒப்புக்கொண்டுள்ளது. 

1956-1965

1956ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பு வெற்றி பெற்றது.  இக்காலப்பகுதியில்  பண்டாரநாயக்காவின் வெளிநாட்டு கொள்கை அணுகுமுறை பின்வரும் இரண்டு அம்சங்களை உள்ளடக்கி இருந்தது.  

1. ஒரு சமாதான காலப்பகுதி காணப்படின் கம்யூனிசம், முதலாளித்துவம் இரண்டும் மறைந்து உலகம் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு மத்தியை நோக்கி நகரும். உதாரணம் ஜனநாயகம் சோசலிசம்

2. நடுவுநிலை தத்துவம்

மேற்குறிப்பிட்ட தத்துவங்களின் அடிப்படையில் பண்டாரநாயக்கா எல்லா நாடுகளுடனும்  சினேகிதமாகவும்,  எவருக்கும் எதிரியாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் அவர் சோவியத் யூனியன், சீனா என்பவற்தோடு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்தார். மேலும் இலங்கைக்கு கம்யூனிஸ பிரசுரங்கள், இலக்கியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதோடு கம்யூனிச நாடுகளோடு நெருங்கிய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தினார்.

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மேலைத்தேய நாடுகளின் தொடர்புகள் குறைந்து வர, கம்யூனிஸ நாடுகள் உடனான தொடர்புகள் குறிப்பாக சீனா உடனான தொடர்புகள் அதிகரிக்கப்பட்டது. 1962இல் நடந்த இந்திய-சீன எல்லைப்  போரின் போது சீனாவை ஆக்கிரமிப்பு நாடு என வர்ணித்த எதிர்க் கட்சிகளின் கருத்துக்களை பிரதமர் எதிர்த்ததோடு சீன- இந்தியப் போர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒரு மாநாட்டையும் திருமதி பண்டாரநாயக்க கூட்டினார். 1964ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன பிரதமர் சௌ. என்.லாய் அவர்கள் ஆற்றிய உரைகளில் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கை கடைப்பிடித்த  சுதந்திரமான போக்கினை மெச்சினார்.  அணுவாயுதப் பரீட்சைத் தடுப்பு ஒப்பந்தத்தினை இலங்கை வரவேற்பதோடு சீனா தனது முதலாவது அணுகுண்டினை பரீசிலனை செய்த போது அதனை கண்டிக்கவும் தவறவில்லை. 

1965-1970

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று டட்லி சேனநாயக்கா தலைமையில் ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைத்தது.  இந்த காலத்தில் சீனாவை ஐக்கிய நாடுகள் சபையில் அனுமதிப்பதை பொறுத்து பண்டாரநாயக்க அரசாங்கங்களது கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடித்து சீனாவுக்கு சர்வதேச அமைப்பில் அங்கத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனக் கூறியது. 

டட்லி சேனநாயக்கா அரசாங்கம் கூட்டு சேராக் கொள்கையை கடைபிடித்த போதிலும் வல்லரசுகள் உடனான தொடர்புகளை பொறுத்து இலங்கையின் நிலைப்பாடு  அடிப்படையில் மாறத்தொடங்கியது.  உதாரணமாக இக்காலப்பகுதியில் சீனாவுடனான இலங்கையின் தொடர்புகள் குறைந்து வந்தன. இதற்கு ஐக்கிய தேசிய கட்சி கம்யூனிசம், கம்யூனிச நாடுகள் என்பவற்றையிட்டு  கொண்டிருந்த  நோக்கே காரணமாக இருந்தது எனலாம்.  1965 ஏப்ரலில் கொழும்பிலிருந்த  மூன்று கம்யூனிச நாடுகளின் இராஜதந்திர தூதுவர் காரியாலயங்களில் அவற்றின் உத்தியோகத்தர்களை குறைக்கும்படி வேண்டியதோடு சீனத் தூதுவர்  காரியாலயத்தை சேர்ந்த இருவரது விசாக்களை புதுப்பிக்கவும் மறுத்தது. கொழும்பிலிருந்து சீன தூதுவர் காரியாலயத்தில் இருந்த பிரசுரங்கள், நூல்கள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் கைப்பற்றியதை எதிர்த்து 1967 ஆகஸ்டில் பீஜிங்கில் செங்காவலர்கள் ஒரு ஊர்வலத்தை நடத்தியதோடு பின்வருமாறு ஒரு குறிப்பினையும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சருக்கு அனுப்பினர். 

" ஐக்கிய தேசியக் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட தற்போதைய இலங்கை அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து அது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளைப் பின்பற்றி, இரு சீன நாடுகளில் உருவாக்க முயற்சிப்பதோடு எதிர்ப் புரட்சி தந்திரங்களிலும் ஈடுபட்டு வருகிறது" என்றார்கள். 

இக்காலப்பகுதியில் தாய்வானில் இருந்து சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழுவில் சீனர்கள் இடம்பெற்று இலங்கைக்கு வந்தமையால் இலங்கை அரசாங்கத்தின் சீன எதிர்ப்பு கொள்கை வெளியிடப்பட்டது.  இந்தப் போக்கின் காரணமாக சீனா இலங்கையுடனான அரசியல்- இறப்பர் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமா என்பதையிட்டு சந்தேகம் நிலவியது. இருந்தும் சீனா அதனைப் புதுப்பித்தது. இக்காலப்பகுதியில் இலங்கை-இந்திய தொடர்புகளில் முன்னேற்றம் காணப்பட்டது. சேனாநாயக்க அரசாங்கம் அமெரிக்காவுடனான தொடர்பு பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. 

1970-1977

1970 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையின்கீழ் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.  இக்காலப்பகுதியில் மரபுரீதியான கொள்கைப்படி சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தப்பட்டது. 1971 இல் சீனா இலங்கை அரசி-றப்பர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட போது அரிசியின் விலையை சீனா 5 சிலிங்கினால் குறைத்ததோடு, சீனாவின் வர்த்தக அமைச்சர் இலங்கையின் சோசலிச நடவடிக்கைகளுக்கு தாம் எல்லா வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். 

1977-1994

1977ஆம் ஆண்டில்  ஜெயவர்த்தனாவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி பதவி ஏற்றதை அடுத்து வெளியிடப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை, புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை முன்னைய அரசாங்கத்தின் கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடிக்க இருப்பதனை எடுத்துக்காட்டியது.  இக்காலப்பகுதியில் சர்வதேச தகறாறுகளில்  இணக்கம் ஏற்படுத்தும் வகையில் நெருக்கமாக மரபு ரீதியாக ஒரு பங்கினை வகித்தமை இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு அம்சமாகும். உதாரணமாக இந்திய-சீன எல்லைப் புற போரின்போது இலங்கை நடுநிலையாக கடமை ஆற்றியது.

திருமதி இந்திரா காந்தி பிரதமராக இந்தியாவுக்கு வந்த பின்பு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் இந்தியா உடனான தொடர்புகள் சற்று வேறுபட்டது. சீனாவுடன் மரபு ரீதியாக இலங்கை கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும் தொடர்ந்தும்  பேணப்பட்டது. 

1994-2001 

1994 இல் பதவிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இலங்கையின் அயல் நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கும் சார்க்கின் ஊடாக கூடியளவு ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வழங்கியது. அந்த வகையில் சீனா, ஜப்பான், தென்கொரியா என்பவற்றுடன் மரபு ரீதியாக இருந்து வந்த சினேகித பூர்வமான, நெருக்கமான தொடர்புகளை மேலும் உறுதி ஆக்கியதோடு, பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தென்கிழக்காசிய பிராந்தியத்துடன் பெருமளவு ஆக்கபூர்வமான தொடர்புகளை உருவாக்குவதிலும் விசேட கவனம் செலுத்தியது. 

2002-2009

2002 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பொதுஜன முன்னணியை சேர்ந்த சந்திரிக்காவே பதவியில் இருந்தார். அரசியல்  நிர்ப்பந்தங்கள்  காரணமாக சந்திரிக்கா வெளிவிவகார பொறுப்பையும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கையளித்தார். இந்த காலப்பகுதியில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா என்பவற்றுடன் உறவுகளைக் கட்டி எழுப்புவதில் அதிக அக்கறை காட்டியது. அதேவேளை முதல்நிலை ஆசிய நாடுகளுடனும், இரண்டாம் நிலை உறவு சர்வதேச ஆதிக்க சக்திகளுடன் என்ற நிலைப்பாட்டில் இலங்கை காணப்பட்டது. பின்பு 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் வந்ததன் பின்னர் அவருடைய  வெளிநாட்டுக் கொள்கையானது முழுவதுமாக  சீனாவின் பக்கம் சார்ந்தவையாக காணப்பட்டது. சீனாவின் உதவிகளை பெற்று இலங்கையில் அவர் இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதன் பின்பு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவானது மிக நெருக்கமான ஒன்றாக இன்று வரை காணப்படுகின்றது.

தொகுப்பு:

சிவம் விதுர்ஷன்,

அரசியல் விஞ்ஞானத்துறை (R) 

பேராதனைப் பல்கலைக்கழகம் 




Comments

Popular posts from this blog

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்